மதுரை ஆதீனமாக அறிவித்ததை திரும்ப பெறுவதாக கூறி உயர்நீதிமன்றின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ள நித்தியானந்தா, தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். மதுரை ஆதீனத்தின், 293-வது ஆதீனமாக நித்யானந்தா தன்னைத்தானே அறிவித்துக்கொண்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மதுரையைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மதுரை ஆதீனத்துக்குள் செல்ல நித்யானந்தாவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கிற்கு நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்த நித்தியானந்தா தான் மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி எனவும் ஒருமுறை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டால், அவர் வாழ்நாள் முழுவதும் இளைய ஆதீனமாகவே தொடர்வார். எனவும் அந்த நியமனத்தை எவராலும் ரத்துசெய்ய முடியாது எனவும் தெரிவித்திருந்தார். .
இந்த பதில் மனுவில், 293-வது ஆதீனம் என்று குறிப்பிட்டதை திரும்பப் பெற்றுக் கொண்டு, புதிய பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் எனவும் 292-வது ஆதீனம் இருக்கும்போது, 293-வது ஆதீனம் என்று எப்படி குறிப்பிட முடியும் எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டு உத்தரவிட்டிருந்தது. குறித்த வழக்கு கடந்த 29ம் திகதி விசாரணைக்கு வந்த போது பதில் மனு தாக்கல் செய்ய நித்யானந்தா தரப்பு வக்கீல் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி பதில் மனுவை தாக்கல் செய்யாமல், இழுத்தடிக்கும் நித்யானந்தாவை கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடுவேன் என எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது பதில் மனு தாக்கல் செய்த நித்யானந்தா 293-வது குரு மகாசன்னிதானம் என்று அறிவித்துக் கொண்டதை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் எனத் தெரிவித்ததுடன் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் எனவும் தெரிவித்தார்.