188
தோற்றவர் வெல்வர். வென்றவர் தோற்பர். இது தேர்தல் நியதி. தேர்தல் நீதியும்கூட. இதனை உள்ளுராட்சித் தேர்தல் முகத்தில் அடித்தாற் போல நாட்டின் அரசியல்வாதிகளுக்கு உணர்த்தியிருக்கின்றது.
பெண்களுக்கு 25 வீத இட ஒதுக்கீடு, தொகுதி மற்றும் விகிதாசாரம் கலந்த கலப்பு முறையைக் கொண்டது, முதன் முறையாக அரசியல் ரீதியான அந்தஸ்தைப்பெற்றது போன்ற பல சிறப்புக்களைக் கொண்ட இந்தத் தேர்தல், எதிர்பாராத பெறுபேறுகளைத் தந்து, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றது. அதையும்கூட இந்த் தேர்தலின் ஒரு சிறப்பு என்று கொண்டால், அது தவறாக இருக்க முடியாது.
ஒரே நாளில் நாடளாவிய ரீதியில் முதன் முறையாக நடத்தப்பட்ட இந்த உள்ளுராட்சித் தேர்தல் தந்த அடி, அதிகாரத்தில் இருப்பவர்களையும், எம்மை அசைக்க முடியாது என்று இறுமாந்திருந்தவர்களையும் கதி கலங்கச் செய்திருக்கின்றது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடை.பெற்ற ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு மக்கள் முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆரவாரமின்றி அதிரடியாகப் பதவி இழக்கச் செய்தார்களோ, அதேபோன்று உள்ளுராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த நல்லாட்சி அரசாங்கத்தை அதிர்ந்து தவிக்கும் வகையில் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.
அதேவேளை, வடகிழக்கில் தமிழ் மக்களின் தன்னிகரற்ற அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்மைப்பையும் இந்தத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றது.
வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு 38 சபைகள் கிடைத்துள்ள போதிலும், வடக்கில்; ஒரு சபையிலும், கிழக்கில் ஒரு சபையிலுமாக இரண்டே இரண்டு சபைகளில் மாத்திரமே தனித்து ஆட்சியமைக்கும் வகையிலான பலத்தைப் பெற்றிருக்கின்றது. ஏனைய 36 சபைகளிலும் ஆட்சி அமைப்பதில் கூட்டமைப்புக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. அவற்றில் ஆட்சி அமைத்து, அந்த சபைகளைக் கொண்டு நடத்துவதற்கு என்ன செய்வது, யாருடன், எவ்வாறு சேர்ந்து செயற்படுவது என்பதில் சங்கடமான நிலைமைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றது.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய தேசிய அரசியல் கட்சிகள் இரண்டும் வரலாறு காணாத வகையில் இணைந்து 2015 ஆம் ஆண்டு அமைத்த நல்லாட்சி அரசாங்கம் அதன் மூன்று வருட ஆட்சிக் காலத்திலேயே பெரும் அரசியல் நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்கின்றது.
எதேச்சதிகாரப் போக்கையும், இராணுவ மயப்படுத்தப்பட்ட ஆட்சி முறையையும், ஊழல்கள் மலிந்த நடைமுறைகளையும் கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை அதிரடியாக மாற்றியதன் மூலம் மலத்ந்த நல்லாட்சி அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை மூன்று வருடங்களுக்கு மேல் தக்க வைத்துக் கொள்ள முடியாத அவல நிலைமையை இந்தத் தேர்தல் உருவாக்கியிருக்கின்றது.
இரண்டு தேசிய அரசியல் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கம் ஜனநாயகத்தையும், நெருக்கடிகள், அடக்குமுறைகளும் இல்லாத ஒரு நல்லாட்சியைக் கொண்டு நடத்தியபோதிலும், தனது ஆழு ஆட்சிக் காலத்தையும் மக்களுடைய ஆதரவுடன் கொண்டு நடத்த முடியாத மோசமான நிலைமைக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்கின்றது. இதனால் நாட்டில் ஸ்திரமற்றதோர் அரசியல் நிலைமை உருவாகி, அரசாங்கத்தின் அடுத்த கட்டம் என்ன? – என்ற தீவிரமான கேள்வியை எழுப்பியிருக்கின்றது.
நிலைமை என்ன?
நடந்து முடிந்த 341 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில், 239 சபைகளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன என்ற கூட்டு எதிரணியினர் 239 சபைகளில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்று அமோக வெற்றியீட்டியிருக்கின்றனர். நாட்டின் பிரதமராகிய ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சி வெறுமனே 42 சபைகளையே கைப்பற்றியிருக்கின்றது.
நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசாங்கத்தின் மற்றைய பங்காளிக் கட்சியாகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெறும் 10 சபைகளை மாத்திரமே பெற்றிருக்கின்றது.
ஆனால் நாட்டின் எதிர்க்கட்சியாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஆளும் கட்சியாகிய சிறிலங்கா சுந்திரக்கட்சியைப் பின்னால் தள்ளி 38 சபைகளில் பெரும்பான்மையைப் பெற்று தேசிய அளவில் மூன்றாம் இடத்தைக் கைப்பற்றியிருக்கின்றது. இது தேசிய மட்டத்தில் கூட்டமைப்புக்குக் கிடைத்த வெற்றியாகக் கருப்படுகின்றது. ஆயினும், வடக்கு கிழக்கு மாகாணங்களாகிய அந்தக் கூட்டமைப்பின் அரசியல் களத்தில் இரண்டே இரண்டு சபைகளில் மாத்திரமே அதனால் தனித்து ஆட்சி அமைக்கத்தக்க வகையில் வெற்றி பெற்றிருக்கின்றது. இதனால், அதன் அரசியல் கோட்டையில் அது பின்னடைவையே சந்தித்தித்திருக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதன் மூலம், பெரும் பங்காற்றிய பெருமை தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு உண்டு. புதிய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து, அதற்குப் பெரும் சவாலாக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் எந்தவிதமான பாதிப்பும், தனது அரசியல் செயற்பாடுகளின் மூலம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகுந்த கரிசனையுடன் கூட்டமைப்பு செயற்பட்டிருந்தது.
அரசாங்கத்திற்கு அனுசரணையாக, ஏறக்குறைய அதன் நடவடிக்கைகள் அனைத்திலுமே முழுமையான ஒத்துழைப்பை வழங்கிச் செயற்பட்டதன் மூலம் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளின் அதிருப்திக்கு ஆளாகியிருந்தது. குறிப்பாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் கடுமையாக கண்டனங்களையும் எதிர்ப்பையும் கூட்டமைப்பின் தலைமை எதிர்கொள்ள நேர்ந்திருந்தது.
நிபந்தனையற்ற ஆதரவின் மூலம், நல்லாட்சி அரசாங்கத்திற்கு, எந்தவிதமான கேடுகளும் விளைந்துவிடக் கூடாது என்று செயற்பட்டிருந்த கூட்டமைப்பின் தலைமை, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வை எட்டிவிட முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தமிழரசுக் கட்சி கூட்டமைப்பின் தனது பங்காளிக் கட்சிகளும் அரசு மீது நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது.
அது மட்டுமல்லாமல், அசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, பொறுமை காக்க வேண்டும் என்று தமிழ் மக்களையும் கூட்டமைப்பின் தலைமை வலியுறுத்தி, நல்லாட்சி அரசாங்கத்தின் வழியில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது.
ஆனால், உள்ளுராட்சித் தேர்தலில் நல்லாட்சி அரசாங்கம் தங்களுக்கு வழங்கிய தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை, சிங்கள மக்கள் இடித்துக் காட்டி, அதனை, தேர்தலில் பின்னடையச் செய்திருக்கின்றார்கள். அதேபோன்று, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் தங்களுக்குத் திருப்தியைத் தரவில்லை என்பதை, முன்னைய தேர்தலிலும் பார்க்க குறைந்த அளவிலான ஆதரவை வழங்கியதன் மூலம் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் தலைமைக்கு உணர்த்தியிருக்கின்றார்கள்.
வடக்கிலும் கிழக்கிலும் 38 சபைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மக்கள் முன்னணி வகிக்க செய்துள்ளனர். இருந்த போதிலும், கடந்த பொதுத் தேர்தலிலும், அதற்கு முந்திய தேர்தல்களிலும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று கூட்டமைப்பின் தலைமையினால் அரசியல் ரீதியாக ஏளனமாகக் குறிப்பிடப்பட்டு வந்த தமிழ்க்காங்கிரஸின் வழித்தோன்றலாகிய தமிழ்ததேசிய மக்கள் முன்னணிக்கு முன்னரிலும் பார்க்க நான்கு மடங்கு அதிகமான வாக்குகளை அள்ளி வழங்கி, அரசியல் களத்தில் மிகுந்த அந்தஸ்து கொண்டதொரு கட்சியாக அந்தக் கட்சியை உருவாக்கியிருக்கி;ன்றார்கள்.
விடுதலைப்புலிகளுக்குப் பின்னரான அரசியல் சூழலில், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று வர்ணிக்கப்பட்டு வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் கைப்பற்றியுள்ள 38 சபைகளில் 36 சபைகளை பிற கட்சிகளின் ஆதரவின்றி கொண்டு நடத்த முடியாததோர் அரசியல் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றது.
கேள்விகள்
அரசியல் அதிகாரமற்ற சபைகளாகத் திகழும் உள்ளுராட்சி சபைகளுக்கு அரசியல் ரீதியான அந்தஸ்தை வழங்கும் வகையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்த இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரியிருந்தது.
இந்தத் தேர்தலில் மக்கள் கூட்டமைப்பின் பின்னால் அணிதிரண்டிருக்கின்றார்களா என்பதை, தென்னிலங்கையும், சர்வதேசமும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பதனால், கூட்டமைப்புக்குப் பலம் சேர்க்கும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தேர்தல் பிரசாரங்களின் மூலம் வற்புறுத்தியிருந்தார்.
அது மட்டுமல்லாமல், நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியில் பாதிக்கிணறு தாண்டப்பட்டுவிட்டது. மிகுதி பாதியையும் தாண்டுவதற்கு ஏற்ற வகையில் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருந்தது.
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு சமஸ்டி என்ற சொல் பயன்படுத்தப்படாத போதிலும், அதற்குரிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன என்பது தேர்தல் பிரசாரங்களின்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்கள் விரும்புகின்ற அரசியல் தீர்வுக்கான அடிப்படை அம்சங்கள் உள்ளடக்கப்படவில்லை என சுட்டிக்காட்டி நிராகரித்திருந்தவர்கள், அதன் உள்ளடக்கத்தில் மறைந்துள்ள அந்த அம்சங்களைக் கண்டறிந்து கொள்ள வேண்டும் என்று அச்சுறுத்தலான ரீதியிலும்கூட தேர்தல் பிரசார உரைகள் அமைந்திருந்தன.
இத்தகைய பிரசாரங்களின் உச்ச கட்டமாக தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு வழமைபோலவே வாக்களித்து ஆதரிக்காவிட்டால், புதிய அரசியலமைப்பு உருவாக்கமும் அதனால் அரசியல் தீர்வு காணும் முயற்சியும் பாதிக்கப்படும் என்ற எச்சரிக்கையும்கூட விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் தேர்தலில் அரசாங்கத் தரப்புக்கு ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவும், மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னணி பெற்றுள்ள வெற்றியும், புதிய அரசியலமைப்பு உருவாக்கம், அரசியல் தீர்வு என்பவற்றைக் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோளை, ஏற்று பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியின் தேர்தல் சின்னமாகிய வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்துள்ள போதிலும், தென்னிலங்கையின் சிங்கள மக்கள் ஏற்படுத்தியுள்ள நிலைமையினால் அரசியல் தீர்வு முயற்சிகள் பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகிய சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன் தென்னிலங்கையின் இந்தத் தேர்தல் முடிவுகள் அரசியல் தீர்வு முயற்சிகளுக்குப் பேரிடியாக அமைந்துள்ளன என குறிப்பிட்டிருந்தார்.
பெரும்பான்மையான தமிழ் மக்கள் அரசியல் தீர்வுக்காக வாக்களித்துள்ள போதிலும், தென்னிலங்கை மக்களின் வாக்களிப்பினால் அரசாங்கமே ஆட்டம் கண்டுள்ள நிலையில் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எவ்வாறு முன்னெடுக்கப் போகின்றது? அரசியல் தீர்வு மட்டுமல்லாமல், அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளின் விடுவிப்பு, காணாமல் போனோருக்குப் பொறுப்பு கூறுதல் உள்ளிட்ட தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படப் போகின்றன? ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை இணை அனுசரணை வழங்கியுள்ள தீர்மானங்களுக்கு அமைய நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கான பொறிமுறைகளை உருவாக்கிச் செயற்படுவது, அதன் ஊடாக உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறும் கடப்பாடுகள் எவ்வாறு நிறைவேற்றப்படப் போகின்றன? – இது போன்ற முக்கிய கேள்விகள் இப்போது எழுந்திருக்கின்றன.
இந்தச் சூழலில் வடக்கு கிழக்கில் வெற்றிபெற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் எத்தகைய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகின்றன என்பது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.
மீள்வது எப்படி?
தென்னிலங்கையின் தேர்தல் முடிவுகள் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்த கூட்டரசாங்கம் ஆட்சி அதிகாரத்தைத் தொடர முடியாத ஒரு நிலைமையை உருவாக்கி இருக்கின்றது. பின்னடைவான தேர்தல் பெறுபேறுகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் கொள்கைகளே காரணம் குற்றம் சுமத்தி, அவரை பிரதமர் பதவியில் இருந்து இறக்கி, வேறு ஒருவரைப் பிரதமராக நியமித்து ஆட்சியைத் தொடர வேண்டும் என்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களின் வேண்டுகோளுக்கு ரணில் விக்கிரமசிங்க செவிசாய்க்க மறுத்துவிட்டார்.
ஆயினும், தேர்தலில் இரண்;டாம் இடத்தைப் பெற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சி, தன்னிலும் பார்க்க குறைந்த ஸ்தானத்தைப் பெற்றுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் புறக்கணித்து, தனித்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றது. அதற்காக ஏனைய கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவதிலும் ஐக்கிய தேசிய கட்சி தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது.
இத்தகைய பின்னணியிலேயே,: தேர்தலில் எதிர்பாராத வகையில் வெற்றியைப் பெற்றுள்ள மகிந்த ராஜபக்ச உடனடியாக அரசாங்கத்தைக் கலைத்து, பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
தென்னிலங்கை மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக, மகிந்த ராஜபக்ச முன்னெடுத்திருந்த தேர்தல் பிரசாரங்கள் ஏறக்குறைய அனைத்துமே, இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கு எதிரானவையாகவே இருந்தன. ஆயினும், மகிந்த ராஜபக்சவினதும், அவருடைய ஆதரவாளர்களினதும் தேர்தல் பிரசாரங்களுக்கு அமைவாகவே தென்னிலங்கை மக்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போக்கில் வாக்களித்திருக்கின்றார்கள் என்று எழுந்தமானமாகக் கூறிவிட முடியாது.
ஊழல்களை ஒழித்துக் கட்டி நல்லாட்சி நடத்துவோம். ஊழல் புரி;ந்தவர்களையும் குற்றம் புரிந்தவர்களையும் தண்டிப்போம், இராணுவத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் சட்டத்தின் முன் நிறுத்தமாட்டோம், புதிய அரசியலமைப்பை உருவாக்கி ஆட்சி முறையில் மாற்றத்தைக் கொண்டு வருவோம், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்போம், விலைவாசிகளைக் குறைத்து மக்கள் இயல்பான வாழ்க்கை வாழத்தக்க வகையில் வறுமையையும் ஒழிப்போம், அரச ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம் என்றெல்லாம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை.
அது மட்டுமல்லாமல் மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தில் முன்னைய ஆட்சியில் இருந்தவர்களைப் போலவே, தற்போதைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும் ஊழல் மற்றும் நிதிமோசடிகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற மக்களைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய உண்மைகள் வெளிவந்திருந்தன. அது மட்டுமல்லாமல் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வேலை இல்லாப் பிரச்சினை, வறுமை ஒழிப்பு போன்றவற்றில் அரசாங்கத்தின் செயற்பாடுகளும் தென்னிலங்கை மக்களைத் திருப்தி அடையச் செய்யவில்லை. இதனால் ஏற்பட்டிருந்த அதிருப்தியும் ஏமாற்றமும் அரசுக்கு எதிராக அவர்களை வாக்களிக்கத் தூண்டியிருந்தன என்பதை மறுக்க முடியாது.
மொத்தத்தில் புதிய அரசியலமைப்பின் ஊடாக நாடாளுமன்றம், மாகாண சபைகள் என்பவற்றுக்கு அடுத்தாக உள்ளுராட்சி சபைகளுக்கு அரசியல் அந்தஸ்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த சூழலில், வழமைக்கு மாறாக அரசாங்கம் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தேசிய மட்டத்திலான அரசியலை முதன்மைப்படுத்தியிருந்தி இருந்தது.
அரசியல் அந்தஸ்து அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே, இவ்வாறு, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் அரசியல் முக்கியத்துவப்படுத்திய செயலானது ஒரு சத்திய சோதனை முயற்சியாகவே அமைந்துவிட்டது என்றே கூற வேண்டும். அவ்வாறு கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகாது. அந்த சத்திய சோதனையில் தீக்குளித்த ஒரு நிலைமைக்கே அரசும் அதன் பங்காளி சக்திகளும் இப்போது ஆளாகியிருக்கின்றன.
நல்லாட்சி உருவாக்கத்திற்குப் பொறுப்பான முக்கியஸ்தர்களாகிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க போன்ற முக்கியஸ்தர்களுடன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்கள் இந்த அரசியல் தீக்குளிப்பில் இருந்து எவ்வாறு மீளப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை.
Spread the love