இலங்கை கடற்பரப்பில் உள்ள தீடை என்னும் பகுதியில் தலைமன்னார் கிராம மீனவர்களுக்கு கடற்படையினர் தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்தி வரும் நிலையில் நேற்றிரவு குறித்த பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை கடற்படையினர் திருப்பி அனுப்பியதை கண்டித்து தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்று தலைமன்னார் காவல் நிலையத்திற்கு முன் ஒன்று கூடி தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்று காலை தலைமன்னார் கடற்படை முகாமிற்குச் சென்று தமது பிரச்சினைகள் தொடர்பில் கடற்படை அதிகாரிகளுக்கு விளக்கமளித்ததுடன் தலைமன்னார் காவல்நிலையத்தில் முறைப்பாடும் செய்த போதும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தே ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.
தாம் பல வருடங்களாக தீடை பகுதியில் மேற்கொண்டு வரும் மீன் பிடி நடவடிக்கையை தொடர்ந்தும் மேற்கொள்ள அனுமதியை பெற்று தருமாறு கோரி பதாதைகளை ஏந்தியவாறு குறித்த மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது