இலங்கை அரசின் சார்பாக நல்லிணக்க தொலைக்காட்சி என்ற பெயரில் புதிய தமிழ் தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களுக்காக தொலைக்காட்சியின் தேவை கருதி இந்த நல்லிணக்க தொலைக்காட்சி Reconciliation Channel) ) என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி நிலையத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
இந்தநிலையில் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பில் ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைமையகத்தில் நல்லிணக்க தொலைக்காட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மங்கள சமரவீர, மனோ கணேசன், பௌசி, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக இந்தத் தொலைக்காட்சி உதவும் என்பதால் நல்லிணக்கத் தொலைக்காட்சி என்ற பெயரிலிலேயே புதிய தமிழ் தொலைக்காட்சி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் தேசிய, சமய மற்றும் பண்பாட்டு அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையிலான முழு நேர ஒளிபரப்புகள் இந்த அலைவரிசையில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.