Home இலங்கைசிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடியவருக்கு ஒன்றரை வருட கடூழியச் சிறை

சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடியவருக்கு ஒன்றரை வருட கடூழியச் சிறை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் நீதிமன்றில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்தவருக்கு ஒன்றரை வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார். சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்த குற்றத்துக்கே இந்தத் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது. சந்தேகநபருக்கு எதிராக சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் குற்றச்சாட்டுப் பத்திரம் முன்வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நேற்று புதன்கிழமை நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் விசாரணைகளின் நிறைவில் சந்தேகநபருக்கு ஒன்றரை ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துள்ளார்.

யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவு, ஊர்காவற்றுறை உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைச் சேர்ந்த அன்ரன் ஜெபராசா தயானந்தன், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த வருடம் ஓகஸ்ட் 10ஆம் திகதி முற்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரின் விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டதும் அவர், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து நழுவி நீதிமன்றிலிருந்து தப்பிச் சென்றார். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் துரத்திச் சென்றபோதும் சந்தேகநபர் தப்பி ஓடிவிட்டார்.

சந்தேகநபரைத் தேடி காவல்துறையினர் வலை வீசியிருந்ததுடன், அவரைப் பிடிக்க பொது மக்களிடமும் உதவி கோரியிருந்தனர். இந்த நிலையில் கடந்த 6 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு வானில் கொழும்பு சென்றபோதே அவர் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More