சிரியாவில் 30 நாட்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வரும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் உடன்பாடில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப்பகுதியில் உள்ள கவுடாவில் கடந்த ஐந்து நாட்களாக சிரிய – ரஸ்ய கூட்டுப் படைகள் மேற்கொண்ட வான்தாக்குதலில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். nhகால்லப்பட்டவர்களில் 90க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வான்; தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், மருத்துவ உதவி குழுக்களை அங்கு அனுமதிக்க கோரியும் குவைத்தும், சுவீடனும் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானத்தை கொண்டு வந்தன. எனினும் இந்த தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்திய ரஸ்ய தரப்பு இந்தத் தீர்மானத்தை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது எனவும் தெரிவித்துள்ளது.