தவில் மேதை, யாழ்ப்பாணம் திரு தக்ஷிணாமுர்த்தி அவரகளைப்பற்றிய ஆவணப்படப்பதிவில் சில தவறான செய்திகள் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், அதில், குறிப்பாக நான் கூறிய செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை, என்றும் இணுவையூர் கார்த்தியாயினி (நடராஜா) கதிர்காமநாதன் என்பவர் கூறியிருந்தவற்றைப் படித்தேன்.
வரலாறு திரிக்கப்பட்டதாக இருக்ககூடாது என்பதில் கருத்து வேற்றுமை இருக்கமூடியாது. இசைவேளாளர் என்ற சொல்லாட்சியே தமிழகத்தில் பிறந்தது. மாதோட்டபுரம் (மாவட்டபுரம்) கோவிலைக் கட்டியவனே சோழமன்னன் கட்டிய கோவிலில் பணி புரியத் தமிழகத்திலிருந்து பல நாகஸ்வரத்-தவில் விற்பன்னரகளை மன்னன் ஈழத்திற்கு அனுப்பிக் கோவில்களில் நியமித்தான் என்பதும் வரலாறு காட்டும் உண்மை. அவ்விதம் சென்றவர்கள்தாம் அந்நாட்டில் பல கோவில்களில் பணி புரிந்து அந்நாட்டவரகளாக ஆனார்கள். திரு சடையரின் குடும்பமும் அவற்றில் ஒன்று. விஸ்வலிங்கம் பிள்ளை சிறந்த தவில் வித்துவானாக விளங்கியவர். நான் திரு கோதண்டபாணிப் பிள்ளையைச் சந்தித்திருக்கிறேன். இணுவையூர் (விசர்) ராஜகோபால பிள்ளை, சின்னபழனி பிள்ளை, பி.எஸ். ஆறுமுகம் பிள்ளை, கோவிந்தஸ்வாமி பிள்ளை, அவருடைய தம்பி, என்.ஆர்.சின்னராஜா போன்றொர் தஞ்சையில் என் வீட்டில் பல நாட்கள் தங்கியிருந்தனர். திரு உத்திராபதி பிள்ளையின் குமாரர் ராதாகிருஷ்ணனை தமிழ்நாடு அரசு கல்லூரியில் வயலின் பயிற்சிக்கு சேர்த்துவிட்டதே நான்தான். இன்னும் யாழ்ப்பாணத்திலிருந்து பலர் என் வீட்டுக்கு வந்து தங்கியிருந்ததுண்டு. கார்த்தியாயினி, கோவிந்தஸ்வாமி சின்னராஜா இருவரையும் குறிப்பிட்டு, முன்னவர் தவிலிலும், பின்னவர்,நாகஸ்வரத்திலும் சிறந்தவர்கள் என்று தவறாகக் கொடுத்துள்ளார்.
கோவிந்தஸ்வாமி நாகஸ்வரக்கலையிலும், சின்னராஜா தவிலிலும் வல்லவர்கள். பல நாகஸ்வர விற்பன்னர்களைக் குறிப்பிட்டுள்ள கார்த்தியாயினி, நல்லூர் முருகய்யா பிள்ளை, சீர்காழி திருநாவுக்கரசு பிள்ளை போன்றோரை ஏனோ குறிப்பிடவில்லை..ஒருகால் அவர்களைப்பற்றி அவர் கேள்விப்பட்டதுகூட இல்லை போலும் திருச்சடை முத்துகிருஷ்ணன் அல்ல திருச்சேறை முதுக்கிருஷ்ணன் ஆண்டிக்கோவில் அல்ல;ஆண்டாங்கோவில். தக்ஷிணாமூர்த்தி என் வீட்டில், தன் குடும்பத்துடன் பல ஆண்டுகள் வாழ்ந்தவர். தன் தந்தையைப் பற்றியும் உறவினரகளைபற்றியும் அவர் கூறிய செய்திகளையே நான் குறிப்பிட்டேன். தன் தந்தை தனக்கு பனம்கிழங்கு கொடுத்து உண்ணசெய்ததும், தோளிலே வைத்துக்கொண்டு பல தவில் வித்துவான்கள் வாசிப்பதைக் கேட்கச்செய்தார் என்றும் என்னிடம் கூறியவர் அவர் மட்டுமல்ல; இணுவில் கோவிந்தஸ்வாமி பிள்ளை, சின்னராஜா, நாச்சிமார்கோவிலடி கணேச பிள்ளை (தக்ஷிணாமூர்த்தியின் தாய் மாமன்), சின்னப்பழனிப் பிள்ளை போன்றோருமே.. தன் பூர்விகர்கள் திருப்பயற்றங்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதை எனக்குச்சொன்னவர் தக்ஷிணாமூர்த்திஅவர்களே.
தனது பூர்விகர்கள் மன்னார்குடிக்கருகேயுள்ள, திருமக்கோட்டையைச்சேர்ந்தவர்கள் என்று சின்னராஜாவும், கோவிந்தஸ்வாமி பிள்ளையும். என்னிடம் கூறியிருக்கிறார்கள். வளமான் தொழில் நிமித்தமே, விஸ்வலிங்கம் பிள்ளாஈ, காரைத்தீவிiல் குடியேறி வாழ்ந்தார் என்று சின்னப்பழனிபிள்ளையும், தக்ஷிணாமூர்த்தியும் என்னிடம் கூரியிருந்தனர். அதன் பொருட்டே, தக்ஷிணாமூர்த்தி, திருப்பயற்றங்குடிக்கு என்னை அழைத்துக்கொண்டு போனார், இதை வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளையும் எனக்குக் கூறியிருக்கிறார். பரிவாதினியில் நான் முன்னுக்குப் பின் முரணாகச் சொன்னதுஎன்ன என்பதைக் கார்த்தியாயினி ஏன் குறிபிடவில்லையோ !
தக்ஷிணாமூர்த்தி தவில் பயின்றது,சின்னப்பழனி பிள்ளை, காமாக்ஷிசுந்தரம் பிள்ளை ஆகியோரிடம்; மேற்பயிற்சி பெற்றது,என் அக்காவின் கணவர், நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளையிடம். தமிழிசைக்கச்சேரியில், காருக்குரிச்சி அருணாசலம் அவர்களின் நாகஸ்வரத்துக்கு, தக்ஷிணாமூர்த்தியையும் தன்னோடு வாசிக்க ஏற்பாடு செய்தவர், என் சஹோதரன், நீடாமங்கலம் ஷண்முகவடிவேல் ஆவர். சேதுராமன் சஹோதர்ர்கள், சின்னமௌலா, போன்றோருக்குத் தக்ஷிணாமூர்த்தி வாசித்ததைக் கூறும் கார்த்தியாயினி, பல்லவி யமன் என்று பெயர் பெற்ற திருமெய்ஞ்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை பெயரை மறந்துவிட்டிருக்கிறார். எவ்வாறேனும் இன்னும் எவ்வளவோ எழுதலாம்; தேவையில்லை என்று விடுகிறேன் இந்த ஆவணப்படம் பற்றியும் அதில் நாங்கள் இடம் பெற்றிருப்பதையும் கார்த்தியாயினி குறிப்பிட்டிருப்பதறகு என் நன்றி. தக்ஷிணாமூர்த்தி காலமானது, 13.5.1975 என்று கார்த்தியாயினி கூறிப் பிழை செய்திருக்கிறார். சரியானதேதி 15.5.1975 ஆகும்.
–பி எம். சுந்தரம்