இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும், சகவாழ்வுடனும் வாழவேண்டும் என்பதே தான் நான் காணும் கனவு எனவும் அந்த கனவு நனவாhவிட்டால் இந்த நாடே அழிந்துவிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அதனைத் தீர்க்கும் வகையிலேயே இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வும், பாடசாலைகளுக்கு விஞ்ஞான உபரகணங்கள் வழங்கும் நிகழ்விலும்
பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற 342 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் சுமார் 300 பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆய்வுகூட உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது நாடெங்கிலும் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு ஆறு மாத காலத்திற்குள் தீர்வுகாணப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அதற்கு தேவையான நிதிகளை வழங்குவதாகவும் இங்கு ஆளுனருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.