குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பௌத்தர்கள், முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். திகன மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பௌத்தர்கள், முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரும் வகையிலான தீர்மானமொன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் புலனாய்வுப் பிரிவுகள் செயலிழந்துள்ள காரணத்தினால் திகன, தெல்தெனிய பகுதிகளில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதேசத்திற்கு வந்த வெளிநபர்களினால் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதாகவும் இது குறித்து காவல்துறையினருக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் காவல்துறையினர் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த, முஸ்லிம் மதத் தலைவர்கள் பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு காண நடவடிக்கை எடுத்திருந்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க இரு சமூகங்களையும் சேர்ந்த வர்த்தகர்கள் இணங்கியிருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் வெளியில் இருந்து வந்த தரப்பினரே இவ்வாறு வன்முறையைத் தூண்டி கலகத்தில் ஈடுபட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். சொத்துக்கள் சேதமடைந்த அனைவருக்கும் நட்டஈடு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.