குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதியை பிணையில் விடுவிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என கூறிய நீதிவான் , விளக்கமறியலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் நீடித்தார். மாணவி கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார் ஊர்காவற்துறை நீதிமன்ற வாளகத்தினுள் வைத்து ஊர்காவற்துறை காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரின் பெயரை கூறி கொலை அச்சறுத்தல் விடுத்து இருந்தார்.
அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை போலீசார் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். குறித்த வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது நீதிவான் , குறித்த வழக்கானது சாட்சியங்களை அச்சுறுத்தியமை என்பதன் கீழ் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சாட்சியங்கள் பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் அதற்கு பிணை வழங்க கூடிய அதிகாரம் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கே உள்ளது.
குறித்த வழக்குக்கு பிணை வழங்க கூடிய அதிகாரம் நீதிவான் நீதிமன்றுக்கு இல்லாமையால் குறித்த நபரின் நலனை கருத்தில் கொண்டு அவரை பிணையில் செல்ல அனுமதிக்க முடியாது என நீதிவான் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதிவான் உத்தரவிட்டார். அதேவேளை குறித்த சந்தேக நபர் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் காவல்துறை உத்தியோகஸ்தர் மாணவி கொலை வழக்கில் சாட்சியமாக இல்லை, இருந்த போதிலும் சாட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்தார் எனும் குற்ற சாட்டிலையே குறித்த வழக்கினை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.