கடந்த சில தினங்களாக கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் இடம்பெற்ற கலவர நிலைமை தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி விசாரணை குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
அந்த வகையில் ஓய்வுபெற்ற மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழுவொன்று விரைவில் நியமிக்கப்படவுள்ளது. இந்த கலவர சூழ்நிலைக்கு காரணமான விடயங்களுக்கு மத்தியில் சட்டமும் ஒழுங்கும் மீறப்பட்டுள்ளதா என்றும், உயிர் உடைமை சேத விபரங்கள் குறித்தும் இந்த குழு ஆராயவுள்ளது. அத்துடன் இந்த நிகழ்வுகளுக்கு பின்னால் சூழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பாகவும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுவதை தவிர்ப்பதற்காக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.
மேலும் இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் செயற்பட்ட விதம், அவர்களது வகைகூறல் போன்ற விடயங்கள் குறித்து இந்த குழு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.