பயிர்க் கடன் தள்ளுபடி, மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மும்பையைக் குலுங்கவைத்த சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் வெற்றியில் முடிந்துள்ளது. விவசாயிகள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை மஹாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு ஏற்றுக்கொண்டது. இதற்கான உறுதி ஏற்புக் கடிதத்தை விவசாயிகள் சங்கத் தலைவரிடம் முதல்வர் பட்நாவிஸ் கையளித்துள்ளார்.
வேளாண் கடன் தள்ளுபடி, மானியம் அளித்தல், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி புனே நகரில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் ஆரம்பித்த போராட்டம் ஐம்பதாயிரம் விவசாயிகளுடன் 180 கி.மீ. தொலைவை நடந்து ஞாயிற்றுக்கிழமை மாலை மும்பையை சேர்ந்திருந்தது. இந்தநிலையில் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைக்கு அம்மாநில அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இணைப்பு 2 – விவசாயிகளின் பேரணி மும்பையை அடைந்துள்ள நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
Mar 12, 2018 @ 07:14
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்திலிருந்து பயணிக்க தொடங்கிய 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை மும்பை சென்றடைந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், மாநில அரசு தங்களின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டுமென்றும், விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டுமென்றும், எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
சில நூறு விவசாயிகளுடன் ஆரம்பமாகிய விவசாயிகளின் பேரணியில் வழியெங்கும் மற்ற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மட்டுமல்லாது பழங்குடியினரும் இணையத் தொடங்கியதால் இறுதியில் அந்த எண்ணிக்கை சுமார் 50 ஆயிரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பேரணியில் பங்கேற்றுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடியின விவசாயிகளாவர். காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் விவசாயம் செய்யும் இவர்களின் நிலவுரிமை வனத்துறையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதனால் , நிலவுரிமை, கடன் தள்ளுபடி மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை வலியுறுத்தி இப்பேரணியில் அவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை ஆயிரக்கணக்கான விவசாயிகள், மாநில தலைநகரான மும்பையில் குழுமியுள்ளதால் அந்நகரமே முடங்கிப்போயுள்ளதனால் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைக்கு அம்மாநில அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாகவும், இன்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுமென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவில் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 40 ஆயிரம் விவசாயிகள் பேரணி
Mar 11, 2018 @ 03:24
மகாராஷ்டிராவில் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 40 ஆயிரம் விவசாயிகள் மாநில சட்டசபையை நோக்கி பேரணியாக சென்று கொண்டுள்ளனர். கடந்த 5-ம் திகதி மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிஷான் சபா விவசாய சங்கத்தினர் சுமார் 40 ஆயிரம் பேருடன்; இந்தப்’பேரணியை ஆரம்பித்திருந்தனர்;. மாநில அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என சட்டசபையை நோக்கி அவர்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
நாசிக்கில் தொடங்கிய இந்த பேரணி இன்று தானே மாவட்டத்தை வந்தடைந்துள்ளது எனவும் 180 கிலோ மீட்டர் தூரத்தை நடைபயணமாகவே வந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 30 கி.மீ நடக்கும் இந்த பேரணி நாளை மும்பையை சென்றடையும்; என தெரிவிக்கப்பட்டுள்ளது