குளோபல் தமிழ்ச் அசய்தியாளர்..
ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அவரின் புகைப்பட கருவியை சேதமாக்கி ஊடகவியலாளரை அச்சுறுத்திய இருவரை பிணையில் செல்ல யாழ்.நீதிவான் நிபந்தனை அடிப்படையிலான பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
யாழ்.கொக்குவில் சந்திக்கு அருகாமையில் உள்ள வர்ண நிறபூச்சு (பெயின்ட்) விற்பனை நிலையம் ஒன்றின் மீது கடந்த வெள்ளிக்கிழமை இளைஞர் குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற யாழில். இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் ஊடகவியலாளரான நடராஜா குகராஜ் என்பவரை செய்தி சேகரிக்க விடாது இடையூறு விளைவித்து , அவரின் ஒளிப்பட கருவியை பறித்து சேதமாக்கி , தாக்குதலுக்கு இலக்கான விற்பனை நிலைய உரிமையாளர் மற்றும் அங்கு நின்றிருந்த இளைஞர்கள் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
அது தொடர்பில் குறித்த ஊடகவியலாளரால் யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விற்பனை நிலைய உரிமையாளர் மற்றும் அவரது சகோதரை கைது செய்தனர்.
கைது செய்த இருவரையும் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் காவற்துறையினர் முற்படுத்திய போது இருவரையும் நிபந்தனை பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார். அத்துடன் வழக்கினை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.