குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கல்வி அமைச்சின் மீதான குற்றசாட்டுகளுக்கு பதிலளிக்க கல்வி அமைச்சர் முற்பட்ட போது முதலில் மறுப்பு தெரிவித்த அவைத்தலைவர் பின்னர் பதிலளிக்க அனுமதி அளித்தார். வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கல்வி அமைச்சின் மீது கரசாரமாக குற்ற சாட்டுக்களை முன் வைத்தனர்.
உறுப்பினர்கள் குற்றசாட்டுக்களை சுமத்தி முடிந்த பின்னர், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க அனுமதிக்க வேண்டும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் கோரினார். அதற்கு அவைத்தலைவர் ‘ நாங்கள் வெள்ளன வீட்ட போய் சாப்பிட வேண்டும். குற்ற சாட்டுக்களுக்கு அடுத்த அமர்வில் பதில் அளியுங்கள் நான் இப்ப சபையை ஒத்திவைக்க போகிறேன்’ என தெரிவித்தார்.
அதற்கு சம்மதிக்காத கல்வி அமைச்சர் ‘ இன்றைக்கு கதைச்ச விடயத்திற்கு அடுத்த அமர்வு வரை பொறுத்திருந்து பதிலளிக்க முடியாது. இன்றே பதிலளிக்க வேண்டும். ‘ என கூறினார்.
அதனை அடுத்து இருவருக்கும் இடையில் சுமார் 5 நிமிடங்கள் கருத்து மோதல் ஏற்பட்டு , இறுதியில் சுருக்கமாக உங்கள் பதிலை கூறுங்கள் என அவைத்தலைவர் கல்வி அமைச்சர் பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்கினர். அதனை அடுத்து கல்வி அமைச்சர் தமது அமைச்சின் மீதான குற்ற சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் மிக விரைவில் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு விடும் என தெரிவித்தார்.