குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இராணுவத்தினரால் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட காங்கேசன்துறை பகுதிகளில் தனியார் வீடுகள் ஐம்பதில் காவல்துறையினர் தொடர்ந்து நிலை கொண்டு உள்ளனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காவல்துறை அதிகாரிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
காங்கேசன்துறை பகுதிகளில் 50 வீடுகளில் 111 காவல்துறையினர் தொடர்ந்து நிலை கொண்டுள்ளனர். 111 பேருக்கு 50 வீடுகள் என்பது அதிகமே. அது தொடர்பில் வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகருடன் பேசியதாகவும் அதற்கு அவர் கீரிமலை வீதியில் ஒரு காணி பார்த்து உள்ளதாகவும் , அதனை காவல்துறை திணைக்களம் பெற்றுக்கொண்ட பின்னர் அங்கே கட்டடம் அமைக்கப்பட்டதும் தனியார் வீடுகளை மீள கையளித்து விடுவோம் என உறுதி தந்துள்ளார் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் யாழ்.மாவட்டத்தில் பல காவல்நிலையங்கள் தனியார் வீடுகளில் தான் இயங்கி வருகின்றமை தொடர்பிலும் சுட்டிக்காட்டியதாகவும் காவல் நிலையங்கள் அமைப்பதற்கான காணிகளை பெற்றுகொள்வதிலும் , கட்டடங்களை அமைப்பதிலும் உள்ள சிக்கல் நிலைமைகளில் தான் அவற்றை கையளிக்க முடியவில்லை என வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்ததாகவும் முதலைச்சர் தெரிவித்தார்.