213
தொகுப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வடக்கு கிழக்கில் குழந்தைப் பேறின்மை அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தேசிய சுகாதார நலக் கண்காட்சி அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொண்டவர்ககள் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட புள்ளி விபரங்களில் இந்த நிலவரம் கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கண்காட்சியின்போது இந்தியாவில் இருந்து பல்வேறு தனியார் மகப்பேற்று வைத்திய சாலைகளிலிருந்து வருகை தந்த மருத்து அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். மூன்று நாட்கள் இடம்பெற்ற கண்காட்சியில் மாத்திரம் இரண்டாயிரம் பேர் மகப்பேறின்மை தொடர்பில் ஆலோசனை பெற்றுள்ளதாக பிரசாந்த் குழந்தையின்மை சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கருவாக்கல் விசேட வைத்திய நிபுணர் கீதா ஹரிப்பிரியா தெரிவித்தார்.
குறித்த கண்காட்சியில் கருத்தரித்தல் இலவச கருத்தரித்தல் ஆலோசனைகளை வழங்கிய பிரசாந்த் குழந்தையின்மை சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கருவாக்கல் விசேட வைத்திய நிபுணர் கீதா ஹரிப்பிரியா தேசிய சுகாதார நல கண்காட்சி தொடர்பில் யாழ் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்த கருத்துக்கள்,
“யாழ்.குடாநாட்டில் குழந்தையின்மை என்பது பாரிய பிரச்சினையாக காணப்படுவதை குறித்த கண்காட்சி ஊடாக புரிந்துகொள்ளமுடிகின்றது. குறித்த சிகிச்சைக்கான தேவை யாழ். குடாநாட்டில் அதிகமாக காணப்படுகின்றது.
35 வருடமாக இத்துறையில் சேவையாற்றும் என்னால் கடந்த மூன்று தினங்களும் மருத்து ஆலோசனைகளை வழங்கிய நிலையில் இங்கு கருத்தரித்தல் தொடர்பில் நீண்ட தேவையிருப்பதை உணரமுடிந்தது.
இலங்கையில் கருத்தரித்தல் தொடர்பான சிகிச்சைகள் சிறப்பாக இடம்பெறுகின்றன. ஆனாலும் அதையும் தாண்டி அதி நவீன சிகிச்சைகளின் தேவை இலங்கைக்கு அவசியமாகின்றது.
ஏன் எனில் அதி நவீன சிகிச்சைக்காக இந்தியா வரும் இலங்கை தம்பதியர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கருப்பையில் இரத்தக்கட்டிகள், சினைப்பையில் இரத்தக் கட்டிகள், கருப்பை அமைப்பில் வித்தியாசம் போன்ற பிரச்சினைகளே இலங்கையில் அதிகமாக காணப்படுகின்றது. குறிப்பாக வடக்கில் உள்ள மக்கள் நீண்ட யுத்தப்பாதிப்புக்குள்ளானவர்கள் . பணரீதியாக நிறைய சாவல்களுக்கு முகம் கொடுப்பவர்கள். இவ்வாறான நிலையில் கருத்தரித்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் போது இந்தியா சென்று கூடிய பணவிரயத்தில் சிகிச்சைகளை செய்வதென்பது எல்லோராலும் முடியாத விடயம்.
அவ்வாறான நிலையில் வடக்கில் வந்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாகாவோ செயற்படுவதற்கான அனுமதிகள் இலங்கை அரசா அரசின் அனுசரணை வழங்கப்படுமாயின் அதன் மூலம் நிறைவான சேவைகளை நிச்சயமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்த செலவோடு வழங்க முடியும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.”
இக் கண்காட்சியில் கருத்தரித்தல் மையங்கள் ஊடாக கருத்தரித்து பேறின்மையை பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குறித்த 2250பேரும் யாழ்ப்பாணத்திலிருந்தே கலந்துகொண்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது. வடக்கில் பொதுவான கணக்கெடுப்பு ஒன்று இடம்பெற்றால் இது பல ஆயிரங்களாக காணப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் வடக்கு கிழக்கு முழுவதும் இந்த நிலை காணப்படுகின்றது. மகப்பேறின்மை தம்பதிகள் மத்தியில் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
போர்ச் சூழல், சமூகப் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவே இத்தகைய நிலைகள் ஏற்படுவதாக துறைசார் ஆலோசகர்கள் கூறுகின்றனர். இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலப் பகுதியில் வடக்கில் உள்ள சில பெண்களுக்கு செயற்கை கருத்தடை கருவிகள் பொருத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கருத்தரித்தல் நிறுவனங்களின் சேவையை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெறுவதற்கான வாய்ப்புக்களை வடக்கு மாகாண சபை சுகாதார அமைச்சு பெற்றுக்கொடுப்பதன் மூலம் தாம் இங்கேயே குறித்த சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் குறைந்த செலவீனத்திலேயே உயர் தர நவீன சிகிச்சைகளை பெறும் வாய்ப்பு வடக்கு மக்களுக்கு கிடைக்கும் என கருத்தரித்தல் மையங்களுக்கு மருத்துவ ஆலோசனைக்கு வந்திருந்த தம்பதியினர் தெரிவித்தனர்.
இதேவேளை, குறிப்பிட்ட மூன்று தினங்கள் மட்டும் குறித்த சேவைகள் இடம்பெற்றமையால் பெரும்பாலானவர்கள் மருத்துவ ஆலோசனைகளைப் பெறமுடியவில்லை எனவும் ஆதங்கம் வெளியிட்டனர்.
Spread the love