உலகம் பிரதான செய்திகள்

காட்டலோனியாவை தனிநாடாக அறிவித்த கார்லஸ் பூஜ்டிமோன் ஜெர்மனி எல்லையில் கைது செய்யப்பட்டார்…

Catalan Regional President Carles Puigdemont

காட்டலோனியாவை தனிநாடாக அறிவித்து, ஸ்பெயின் அரசின் நடவடிக்கைக்கு பயந்து பெல்ஜியம் நாட்டுக்கு தப்பிச் சென்ற கார்லஸ் பூஜ்டிமோன், டென்மார்க் – ஜெர்மனி எல்லையில் இன்று கைது செய்யப்பட்டார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக காட்டலோனியா திகழ்கிறது. இதன் தலைநகரமாக பார்சிலோனா விளங்குகிறது. வடகிழக்கு ஸ்பெயினில் செழிப்பான பகுதி, காட்டலோனியாவே. ஸ்பெயின் நாட்டின் மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் இங்கு வாழ்கிறார்கள். நாட்டின் ஏற்றுமதியில் 25.6 சதவீத பங்களிப்பை இந்த மாகாணம்தான் நிறைவு செய்கிறது. ஸ்பெயினின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் காட்டலோனியாவின் பங்கு 19 சதவீதம் ஆகும். ஸ்பெயினுக்கு வருகிற அன்னிய நேரடி முதலீட்டில் 20.7 சதவீதம் இந்த மாகாணத்துக்குப் போகிறது.

காட்டலோனியா மாகாணத்துக்கு கூடுதலாக சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும், ஸ்பெயின் நாட்டின் அரசியல் சட்டம் அதை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. தங்களது தலையெழுத்தை தாங்களே நிர்ணயித்துக்கொள்வதற்காக சுய நிர்ணய அதிகாரம் (தனி நாடு) வேண்டும் என்ற உணர்வு காட்டலோனியா மக்களிடையே கடந்த 5 ஆண்டுகளாக தலைதூக்கி வந்தது. ஆனால் ஸ்பெயின் ஒற்றுமையாளர்கள், “காட்டலோனியா அதிகாரமிக்க தன்னாட்சி மாகாணமாக திகழ்கிறதே என்ற வாதத்தை முன்வைத்து வந்தனர்.

இந்த நிலையில் ஸ்பெயினில் இருந்து தனி நாடாக வேண்டுமா அல்லது ஸ்பெயினுடன் இணைந்தே இருக்கலாமா? என்பது பற்றி பொதுமக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த அந்த காட்டலோனியா அரசு முடிவு செய்தது. ஆனால், இதனை ஸ்பெயின் அரசு அங்கீகரிக்கவில்லை. அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றும் அங்கீகாரம் வழங்கவில்லை.

இவற்றை எல்லாம் மீறி கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் 90 சதவித மக்கள் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர் என காட்டலோனியா தனிநாடு ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், காட்டலோனியாவில் சுயநிர்ணய பொதுவாக்கெடுப்பு நடைபெறவில்லை என ஸ்பெயின் பிரதமர் மரியன்னோ ராஜோய் அறிவித்தார். இது ஜனநாயகத்தின் கேலிக்கூத்து எனவும் அவர் விமர்சனம் செய்தார்.

காட்டலோனியா அரசின் நடவடிக்கையினால் ஸ்பெயினில் கடும் விமர்சனங்கள், எதிர்ப்புக்கள் எழுந்த நிலையில், ஸ்பெயின் அரசின் உத்தரவுகள் எங்களை கட்டுப்படுத்ததாது என தெரிவித்த கார்லஸ், காட்டலோனியா விடுதலை பிரகடனத்தில் கையெழுத்திட்டார். ஸ்பெயினில் இருந்து விடுதலை பெற்றதாக காட்டலோனியா பாராளுமன்றம் கடந்த ஆண்டில் அறிவித்தது.

இதனையடுத்து காட்டலோனியாவின் தன்னாட்சி அதிகாரத்தை பறிப்பது தொடர்பாக ஸ்பெயின் பாராளுமன்றம் எதிர் நடவடிக்கைகளை தொடங்கியது. பூஜ்டிமோன்ட் மற்றும் அவரது தீவிர ஆதரவாளர்கள் 4 பேர் பெல்ஜியம் நாட்டுக்கு தப்பிச் சென்றனர்.

தேசத்துரோகம் இழைத்ததாகவும், கலகம் செய்ததாகவும் ஸ்பெயின் அரசால் தேடப்பட்டு வரும் பூஜ்டிமோன்ட், அவரது அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்ட ஜோர்டி டுருல் உள்பட 13 எதிர்பாளர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப் போவதாக சமீபத்தில் ஸ்பெயின் நாட்டின் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. கார்லஸ் பூஜ்டிமோனை கைது செய்யும் சர்வதேச கைது உத்தரவை கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் பிறப்பித்தது.

கடந்த வியாழக்கிழமையில் இருந்து பின்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் கார்லஸ் பூஜ்டிமோன் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு எழுந்தது.

ஸ்பெயின் நாட்டில் இருந்து காட்டலோனியா பகுதியை துண்டாட முயன்ற குற்றச்சாட்டின்கீழ் பூஜ்டிமோன்ட் உள்ளிட்டவர்களுக்கு சுமார் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என அந்நாட்டின் சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், கார்லஸ் பூஜ்டிமோன் இன்று ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார்.

டென்மார்க்கில் இருந்து பெல்ஜியத்திற்கு காரில் செல்லும் வழியில் ஸ்க்லெஸ்விக்-ஹோல்ஸ்ட்டெய்ன் நெடுஞ்சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜெர்மன் நாட்டு காவற்துறையினர் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 11.19 மணியளவில் கைது செய்து, காவலில் அடைத்து வைத்துள்ளதாக ஜெர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.