குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளராக பலத்த போட்டியின் மத்தியில் புளொட் அமைப்பின் உறுப்பினர் தர்சன் தவிசாளராக தெரிவாகியுள்ளார். வலி.தெற்கு பிரதேச சபையின் முதல் அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக்நிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.
அதன் போது தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. அதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தமிழரசு கட்சி சார்பில் பிரகாசையும் புளொட் அமைப்பின் சார்பில் தர்சனையும் பிரேரித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி லகிந்தனையும் ஐக்கிய தேசிய கட்சி சுரேஷ்குமாரையும் பிரேரித்தது.
அதனை அடுத்து முதல் கட்ட வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் போது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என 20 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என 10 உறுப்பினர்களும் கோரி இருந்தனர். அதனால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில் முதல் கட்ட வாக்கெடுப்பில் புளொட் அமைப்பின் தர்சன் 11 வாக்குகளையும் , தமிழரசு கட்சியின் பிரகாஸ் 09 வாக்குகளையும் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் லகிந்தன் 06 வாக்குகளையும் , ஐக்கிய தேசிய கட்சியின் சுரேஷ்குமார் 4 வாக்குகளையும் பெற்றனர்.
அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு ஆரம்பமானது. அதன் போது நாலாம் இடத்தை பிடித்த சுரேஷ் குமார் நீக்கப்பட்டு ஏனைய மூவருக்கும் இடையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் பிரகாஸ் 12 வாக்குகளையும் , தர்சன் 12 வாக்குகளையும் லகிதன் 06 வாக்குகளையும் பெற்றனர்.
அதனை தொடர்ந்து மூன்றாம் இடத்தை பிடித்த லகிதன் நீக்கப்பட்டு மூன்றாம் கட்ட வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தாம் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வில்லை என அறிவித்தனர்.அதை தொடர்ந்து நடைபெற்ற மூன்றாம் கட்ட வாக்கெடுப்பில் பிரகாஸ் மற்றும் தர்சன் ஆகியோர் 12 வாக்குகளை பெற்று சமநிலையை பெற்றனர்.
அதனால் திருவுள சீட்டெடுப்பு மூலம் தவிசாளர் தெரிவு செய்யப்படுவார் என ஆணையாளர் அறிவித்தார். சீட்டேடுப்பில் தர்சன் தவிசாளராக தெரிவானார்.