குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
போரினால் துவண்டு போயுள்ள வடமாகாண பெண்கள் மீது இராணுவத்தினர் காவற்துறையினர் மற்றும் அரச அதிகாரிகள் பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்காவிடம் உளவியல் செயற்பாட்டாளர்கள் எடுத்துக்கூறியுள்ளனர்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்திரிக்காவிற்கும் , உளவியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
மேலும் தெரிவிக்கையில் , வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் போர் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்த போதிலும் இன்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
வடக்கில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில், அதிகளவான இராணுவத்தினர் , காவற்துறையினர் நிலைகொண்டுள்ளனர். அந்நிலையில் முல்லைத்தீவில் அதிகளவான வன்கொடுமைகள் இடம்பெறுகின்றன.
போரினால் கணவனை பெற்றோரை இழந்து தனித்து வாழும் பெண்களை இலக்கு வைத்தே வன்கொடுமைகள் புரியப்படுகின்றன. ஆரம்பத்தில் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொண்டு பின்னர் தொலைபேசி ஊடாக பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுக்கின்றார்கள்.
அதேநேரம் இராணுவம் மற்றும் காவற்துறையினரின் அனுசரணையில் அங்குள்ள சிலரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபடுகின்றார்கள். பாதுகாப்பு தரப்பினரின் ஆதிக்கம் காணப்படுவதனால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நியாயம் கிடைக்க கூடிய வழிமுறைகள் இல்லாமல் உள்ளது. என உளவியல் செயற்பாட்டாளர்கள் எடுத்து கூறி இருந்தனர்.
அதற்கு முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்கா எந்தவிதமான பதிலையும் கூறாது அமைதியாக இருந்தார்.