குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
2015ஆம் ஆண்டில், மக்களால் வழங்கப்பட்ட ஆணையை மதிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோரியது என, எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பில் இன்று இடம்பெற்றது. கூட்டமைப்புச் சார்பாக, அதன் தலைவர் இரா. சம்பந்தனும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டனர்.
இதன்போது, 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மக்கள் ஆணையை, ஜனாதிபதியும் பிரதமரும் மதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை, கூட்டமைப்பு முன்வைத்ததாகக் குறிப்பிட்ட அவர், மக்களால் வழங்கப்பட்ட வலுவான சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்துவது குறித்தே, குறியாக இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதா இல்லையா என்பது இன்னும் தீர்மானிக்கவில்லை என சம்பந்தன் குறிப்பிட்ட பொதும், 2015ஆம் ஆண்டில், மக்களால் வழங்கப்பட்ட ஆணையை மதிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோரியது என குறிப்பிட்டதன் மூலம் கூட்டு எதிரணியால் முன்வைக்கப்பட்டள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்டமைப்பு தோற்கடிக்கும் என்பதனையே மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளதாக கூட்டமைப்பிற்கு நெருங்கிய தரப்புகள் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவித்தன.