குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களை பதவி நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியினை பிரதிநிதித்துவம் செய்யும் சுமார் 33 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை, பிரதமர் ரணில்விக்ரமசிங்கவிடம் முன்வைத்துள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பிரதமருக்கு எதிராக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களை பணி நீக்குமாறு எழுத்து மூலம், இந்த உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
தயாசிறி ஜயசேகர, எஸ்.பி. திஸாநாயக்க, ஜோன் செனவிரட்ன, சந்திம வீரக்கொடி, லக்ஸ்மன் யாபா அபேவர்தன, அனுர பிரியதர்சன யாபா, சுதர்சனி பெர்னர்ணடோபுள்ளே, சுசில் பிரேமஜயந்த, சுமேதா ஜயசேன ஆகிய அமைச்சர்கள் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆரரவாக வாக்களித்திருந்தனர். இந்த அமைச்சர்களையே பதவியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு கடிதம்….
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த ஆறு அமைச்சர்களை அரசாங்கத்தில் இருந்து நீக்குமாறு கோரி ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர.
நல்லாட்சி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நாட்டு மக்கள் எதிர்பார்த்த ஜனநாயக சுதந்திரத்தை வழங்கி, நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு பின்னர் உலகத்திற்கு முன்னுதாரணத்தை வழங்கி இரண்டு பிரதான கட்சிகள் இணைந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல பெரும்பாலானவர்கள் நேர்மையாக, மனசாட்சிக்கு இணங்க ஆதரவு வழங்கினார்கள். எனினும் சிலர் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தின் பயணத்தை தடுக்க காலை பிடித்து இழுத்ததுடன் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். இவர்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் அருவருப்பானவை.
அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது 2015 ஆம் ஆண்ட நாம் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணைக்கு எதிரானது.
அரசாங்கத்திற்கு எதிராகவும் மக்களின் ஆணைக்கு புறம்பாகவும் செயற்படும் அமைச்சர்கள் எஸ்.பி. திஸாநாயக்க, ஜோன் செனவிரத்ன, அனுரபிரிதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி, தயாசிறி ஜயசேகர ஆகிய அமைச்சர்கள் அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதை நாங்கள் எதிர்கின்றோம். இவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.