“நாம் எமது தனி மனித வாழ்விலும் முன்னேறி ஏனையவர்களையும் முன்னேற்றும் மன நிலையில் வாழNவண்டும். நமது தலைமைத்துவ பண்புகளை கூட்டுப்பொறுப்புடன் வளர்த்துக்கொண்டு சுழற்சி முறையில் நிர்வாக பொறுப்பேற்று பொதுநிலை நோக்குடன் செயற்படவேண்டும்” என மன்னார் கரிற்ராஸ் வாழ்வோதய இயக்குனர் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகளார் தெரிவித்தார்.
மன்னார் கறிற்ராஸ்- வாழ்வுதய மண்டபத்தில் நேற்று(11) புதன் கிழமை காலை முதல் மாலை வரை வாழ்வுதய கிராமிய சமூக மட்ட அமைப்பு தலைவர்களுக்கான வாழ்வாதார திறன் வளர்ப்பு கருத்தமர்வு இடம் பெற்றது. இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த இருபது வருடங்களுக்கு முன் கரிற்ராஸ்-வாழ்வுதயத்தினால் மன்னார் கீரி கிராமத்தில் ‘வளர்பிறை’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கிராமிய மட்ட சிறு குழு, போர்க்கால சூழ் நிலையிலும் திழைத்து சுயமாக இயங்கி பொருளாதார அபிவிருத்தியில் கவனம் செலுத்தி வருவதை அதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
இக்குழு வளர்ச்சிக்கு அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டமையே காரணமாக அமைகின்றது. ஆகவே ஏனையவர்களையும் குழுக்களில் உள்வாங்கி நல் மன நிலையில் பொது நோக்கினை மையமாகக் கொண்டு செயற்பட வேண்டுமென்று வேண்டிக்கொண்டார். குறித்த இப்பயிற்சிப் பட்டறையை உளவளத் துணையாளர் வளவாளர் சிவராசா தலைமையில் இடம் பெற்றது.
இதில் 60 இற்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். குறிப்பாக ஆறு இலக்கு கிராமங்களாகிய செம்மண்தீவு, சாந்திபுரம், பறப்பாங்கண்டல், சாளாம்பன், கன்னாட்டி, பறன்நட்டகல்(வவுனியா) போன்ற இடங்களில் இருந்து கிராமிய சமூக மட்ட பெண்கள் அமைப்புத் தலைவர்களே இதில் கலந்து கொண்டார்கள். இக்குழுக்களுக்கு மாதாந்தம் சமூக, பொருளாதாரம் தொடர்பான விழிப்புணர்ச்சிப் பயிற்சிகள் நடாத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.