குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக்கோரி வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் அவர்களின் ஆதரவுடன் அமைவாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மேற்கொண்டு வந்த கையெழுத்துப்போராட்டத்தில் பெறப்பட்ட மூன்று லட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய பிரதிகளை ஜனாதிபதியிடம் சேர்ப்பதற்காக வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும்,கல்வி அமைச்சருமான கலாநிதி க.சர்வேஸ்வரனிடம் இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கப்பிரதிநிதிகள் இன்று கையளித்தனர்.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் வைத்து இந்தப்பிரதிகளை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளும் சேர்ந்து கல்வி அமைச்சரிடம் கையளித்தனர்.
இந்த நிகழ்வில் இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா புவனேஸ்வரன்,வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலநிதி க.சர்வேஸ்வரன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். மேற்படி மகஜரை பெற்றுக்கொண்டு வடக்கு மாகாண கல்வி அமைச்சர் உரையாற்றுகையில்…..
புத்தாண்டுக்கு முன்னர் உங்களுடைய அப்பாவோடு நீங்கள் சேருவீர்கள் என்று ஜனாதிபதி வெளிப்படையாக சொல்லியிருந்தார் ஆயினும் தன்னுடைய வார்த்தையை அவர் காப்பாற்றத்தவறி விட்டாரா? அல்லது இன்னும் காலம் இருக்கிறதா என்று தெரியவில்லை. என்னைப்பொறுத்தவரை இந்தக்கையெழுத்துக்கள் எங்களுக்குத் தேவைப்படாது என்றுதான் முதலில் எண்ணியிருந்தேன். ஜனாதிபதி இவ்வாறு வெளிப்படையாக கூறியதற்கமைவாக ஆனந்தசுதாகரன் விடுவிக்கப்படுவார் என்று நம்பியிருந்தோம்.
ஒவ்வொரு குடியரசு தினத்தின் பொழுதும்,சுதந்திர தினத்தின் பொழுதும் பெருமளவு குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்யும் ஜனாதிபதி இவ் விடயத்தில் அதிக கருணையுடன் செயற்பட வேண்டும்.கண்டிப்பாக நீங்கள் வழங்கியிருக்கும் இந்தக்கையெழுத்துக்களுடன் சென்று ஜனாதிபதி அவர்களையும்,வெளிநாட்டுத்தூதுவர்களையும் சந்தித்து இந்த கையெழுத்துக்கள் அடங்கிய மனுவை கொடுத்து இதற்கான தீர்வினை பெற்றுத்தருவதற்கு என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
எங்களிடம் போராட்ட உணர்வுகள் மழுங்கிப்போய்விட்டனவோ என்று நாங்கள் சந்தேகிக்கின்ற அளவுக்கு பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதனால் மனவருத்தப்படுகின்ற நிலைமையும் இருந்திருக்கினறன .ஆனால் நீதிக்காக குரல்கொடுக்கின்ற போராட்ட குணம் இன்னும் எங்களிடம் அபப்டியே இருக்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்ற வகையில் அதிபர்கள்,ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட கல்விப்புலத்திலிருந்து மூன்று லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டுவதற்கு பலர் உழைத்திருக்கின்றீர்கள் அந்த மூன்று லட்சம் கையெழுத்துக்களை இட்டவர்கள் வரைக்கும் அனைவருக்கும் குறிப்பாக இந்த முயற்சிகளை முன்னெடுத்த இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி கண்டிப்பாக உங்களுடைய உழைப்புக்களுக்கு முழுமையாக அதி உச்சப்பயனை பெறக்கூடிய வகையில் இந்த கையெழுத்துக்களை பயன்படுத்துவோம் என்றார்.
இன்றைய இந்த மகஜர் கையளிக்கும்நிகழ்வில் ஆனந்தசுதாகரின் பிள்ளைகள், பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள், வலய கல்விப்பணிப்பாளர்கள் மாகாண கல்விப்பணிப்பாளர்,கல்வி அமைச்சின் அதிகாரிகள் உற்பட இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.