ராஜீவ் காந்தி மிகவும் வெளிப்படையான நேர்மையான நபர்….
இலங்கை இந்திய ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் பணியாற்றியவரும் முழுநேர அரசியலுக்கு விடைகொடுத்துள்ள போதும் அ.தி.மு.க.வில் தற்போதும் செயற்பட்டு வருகின்றவரும் அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் என அனைத்து தலைவர்களுடனும் பணியாற்றிய அனுபவத்தினைக் கொண்டிருப்பவருமான மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி இராமச்சந்திரன் தமிழகம் மற்றும் இலங்கையில் நிலவும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைமைத்துவ இடைவெளி ஏற்பட்டுள்ளமையை உணர்கின்றீர்களா? கமல், ரஜினியை வருகையை எப்படி பார்க்கின்றீர்கள்?
பதில்:- தமிழகத்தில் காணப்படுகின்ற புதியதொரு நெருக்கடியாகும். திராவிடக் கட்சிகள் மீதான விமர்சனங்களை பயன்படுத்தி பா.ஜ.க தமிழகத்தில் காலூன்ற முனைந்தார்கள். அதுமுடியவில்லை. இந்நிலையில் ரஜனியின் வருகை அமைகின்றது. அவருடன் நேரடியாக இல்லாது விட்டாலும் ஆதரவாக பா.ஜ.க. உள்ளது.
கமல்ஹாசனைப் பொறுத்தவரையில் திராவிட கட்சிகள் ஆரம்பக்கப்பட்டதன் அடிப்படைகளை கடந்து அந்தக்கட்சிகள் பயணிப்பதால் அந்த விடயங்களை மையப்படுத்தி வாய்ப்பினைப் பெறமுயற்சிக்கின்றார். ஆகவே இருவரின் வருகையையும் சாதாரணமாக கொள்ள முடியாது. சாதாரணமாக கீழ் மட்டத்திலிருந்து பார்த்தால் அழுக்கு சட்டடைகள் ரஜினி பக்கமும் வெள்ளை சட்டைகள் கமல் பக்கமும் செல்வதற்கு வாய்ப்புள்ளன.
கேள்வி:- தற்போதைய நிலையில் தொடரும் தொப்புள்கொடி உறவுகளின் பிரச்சினை குறித்து தமிழக அரசியல் தரப்புக்கள் எத்தகைய கரிசனையை கொண்டிருக்கின்றன?
பதில்:- இலங்கை தமிழர்களின் விடயத்தில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் எவையும் பெரிதாக அக்கறை கொண்டிருக்கவில்லை. சில சிறிய கட்சிகள் மட்டுமே அந்தவிடயம் தொடர்பில் அக்கறைகாட்டி பேசுகின்றன. அந்த விடயம் தமிழக தேர்தலிலும் பெரிய செல்வாக்குச் செலுத்துவதாக இல்லை.
கேள்வி:- அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுவதற்கு என்ன காரணம்?
பதில்:- பொதுவாக பார்க்கையில் “விரக்தி மனநிலை” ஏற்பட்டு விட்டது என்று தான் கருதுகின்றேன். அதனால் தான் பொதுவான நேரங்களில் இலங்கை தமிழர்களின் விடயங்களை எவரும் பேசுவதில்லை. அதனைவிடவும் தேர்தல்காலங்களிலும் அந்த விடயம் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்துவதாக தற்போதைய சூழலில் இல்லை.
கேள்வி:- உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து விட்டது அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லை போன்ற காரணத்தால் தான் அவ்வாறான விரக்தியான மனநிலை ஏற்பட்டுள்ளதா?
பதில்:- விடுதலைப் போராட்ட அமைப்புக்கள் ஈழத்தில் உருவானபோது ஆரம்பத்தில் அவை குறித்த கரிசனைகள் தமிழகத்தில் இருந்தன. அதன் பின்னர் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையின் பின்னர் அந்த போக்கில் மாற்றங்கள் ஏற்படலாயின.
2009 ஆம் ஆண்டு கடுமையான யுத்தகாலத்தில் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியிருந்ததாக வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தில் அந்த மக்களுக்கான குரல்கள் எழுந்திருந்தன. அதன் பின்னர் அந்த விடயங்களில் அதிகளவான கரிசனைகள் இல்லாது போய்விட்டன.
கேள்வி:- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஈடுபட்டார்களா இல்லையா என்பது தொடர்பில் மாறுபட்ட கருத்து வேறுபாடுகள் உள்ளனவே?
பதில்:- கருத்துவேறுபாடுகள் காணப்படுகின்றன தான். இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் ‘ராஜீவ் படுகொலை ஒரு துயரச் சம்பவம்’ என்று கூறியிருக்கின்றார். அந்தக் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
கேள்வி:- இந்திய இலங்கை ஒப்பந்தம் உள்ளிட்ட இலங்கை விடயங்கள் பலவற்றில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் இணைந்து செயற்பட்டவர் என்ற வகையல் ராஜீவ் தொடர்பில் உங்களின் பார்வை என்ன?
பதில்:- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மிகவும் வெளிப்படையான நேர்மையான நபர். ஒருவிடயம் சம்பந்தமாக மிகவும் ஆழமாக சிந்தித்து முடிவுகளை எடுக்கமாட்டார். டெல்லியில் உள்ள அதிகாரிகள் எத்தகைய கருத்துக்களை முன்வைக்கின்றார்களோ அவற்றை மையப்படுத்தி தீர்மானங்களை எடுப்பார். அவ்வறான குணாம்சத்தினை உடையவர்.
கேள்வி:- 1987ஆம் ஆண்டு ஜுலை 29இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடும் செயற்பாட்டில் நேரடியாக பங்கேற்ற அனுவத்தினை சுருக்கமா கூறுங்கள்?
பதில்:- இலங்கை விவகாரம் சம்பந்தமாக தமிழகத்தினை அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த எம்.ஜி.ஆர்.தலைமையிலான அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகமும் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் அரசாங்கமும் கரிசனை கொண்டிருந்தன.
அந்த அடிப்படையில் ஒரு தற்கால ஏற்பாடாக இலங்கை அரசாங்கத்துடன் இந்திய அரசாங்கம் ஒப்பந்தம் செய்வதற்கான இணக்கத்தினை ஏற்படுத்திக்கொண்டது. அச்சமயத்தில் ஒப்பந்தம் குறித்த ஆராய்வுகளை நாம் செய்தோம். அதில் மூன்று விடயங்கள் மிகவும் சாதகமானவையாக இருந்தன.
வடக்கு, கிழக்கு மாகாணத்தினை இணைத்து ஒருவடத்திற்குள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் இருப்பனும் புரிந்துணர்வு அடிப்படையில் வாக்கெடுப்பு அவசியமில்லாதும் போகமுடியும் என்பது முதலாவது விடயமாகும்.
மாநில அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான வழியொன்று ஏற்பட்டது. இதன் மூலம் தமிழர் விடுதலை கூட்டணியாக இருந்தாலும் சரி, விடுதலைப்புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப்.உள்ளிட்ட போராட்ட அமைப்புக்களுக்கு சர்வதேச ரீதியான அங்கீகாரமொன்று கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படுவதுடன் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதற்கான சூழல் ஏற்படும் என்பது இரண்டாவது விடயமாகும்.
மூன்றாக பண்டா செல்வா, டட்லி செல்வா போன்ற ஒப்பந்தங்கள் போடப்பட்டாலும் அவை நிறைவேற்றப்படவில்லை. சிங்கள அரசாங்கம் அவற்றை மீறும் போது அது தொடர்பில் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால், இந்தியா வெளிநபராக தலையிட்டால் எமது இறையாண்மையில் நீங்கள் தலையிட முடியாது என்று போர்க்கொடி பிடிப்பார்கள். ஆக, இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமது இறைமையில் இந்தியாவின் தலையீட்டினை முதற்தடவையாக இலங்கை அரசாங்கமே ஏற்றுக்கொண்டது என்பன அவையாகும்.
இதன் அடிப்படையில் ஒப்பந்தம் கைச்சத்திடுவதென்றும் போராட்டக்குழுக்கள் உள்ளட்ட தமிழ்த் தரப்புக்கள் குழப்பங்களை ஏற்படுத்தாது பொறுப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை நாம் முன்னெடுத்தோம்.
கேள்வி:- இருப்பினும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை தற்போது வரையில் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாதுள்ளதே?
பதில்:- அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும்போது நான் இலங்கைக்கு வந்திருந்தேன். அச்சமயத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது. காரணம், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவைத்தவிர வேறு யாரும் இந்தியாவுடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதை விரும்பியிருக்கவில்லை. குறிப்பாக பிரதமர் பிரேமதாஸ உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் அனைவரும் எதிர்ப்புடனே இருந்தார்கள். பிரசாரம் செய்தார்கள். சிங்கள மக்கள் மத்தியில் அந்த விடயம் பெரிதாக கவனத்தில் கொள்ளப்பட்டது.
அதேநேரம் இந்த ஒப்பந்தம் கைச்சத்திட்டு மாநில அரசாங்கத்தினை ஏற்படுத்த முனைந்தபோது விடுதலைப்புலிகள் ஏனைய இயங்கங்கள் அதில் பங்கேற்பதை விரும்பவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கூட மட்டுப்பாடுகளை விதித்தார்கள். அதுமட்டமன்றி தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை வைப்பதற்கு மறுதலித்து விட்டார்கள். தனி ஈழம் அமைவதற்காகவே நாம் ஆயுதங்களை ஏந்தினோம். தனி ஈழம் அமையாத சூழுலில் ஆயுதங்களை கையளிக்க முடியாது என்று பிரபாகரன் உறுதியாக கூறிவிட்டார். இவையெல்லாம் கலவையாக அந்த முயற்சியும் சிதைந்து விட்டது.
கேள்வி:- ஒப்பந்தம் கைச்சத்திடுவதற்கு முன்னதாக விடுதலைப்புலிகள் ஆயுதக் கையளிப்பு விடயத்தில் இணக்கத்தினை கொண்டிருக்கவில்லையா? அவ்விடயம் குறித்து உங்களுடன் பேசினார்களா?
பதில்:- ஆம், என்னுடன் விடுதலைப் புலிகள் பேசினார்கள். அதனையடுத்து நாம் இந்த விடயம் சம்பந்தமாக ஒப்பந்தம் கைச்சத்திடுவதற்கு முன்னதாக ராஜீவ் காந்தியை நேரில் சந்தித்தோம்.
டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது, ராஜீவ் காந்தி, நான், பிரபாகரன், அண்டன் பாலசிங்கம் ஆகியோரே பங்கேற்றினோம். அதன்போது பிரபாகரன் ஆயுதங்களை மீளக் கையளிக்க முடியாது என்பதற்கான காரணத்தினை ராஜீவ் காந்தியிடம் தெரிவித்தார்.
அச்சமயத்தில் ராஜீவ் காந்தி, “நீங்கள் அச்சப்பட வேண்டாம். இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்கிறது. அவர்களால் அதனை மீறமுயாது. அவ்வாறு மீறினால் இந்தியா தலையீடு செய்யும். ஆகவே நீங்கள் ஆயுதங்களை அச்சப்படாது ஆயுதங்களை கையளியுங்கள். அவ்வாறு இல்லாது விட்டால் உங்களிடமுள்ள ஆயுதங்களில் ஒருதொகுதி ஆயுதங்களை மட்டும் அவர்களிடத்தில் வழங்கிவிட்டு ஏனையவற்றை தமிழகத்தில் பாதுகாப்பாக வையுங்கள்” என்று அறிவுரை கூறினார்.
அத்துடன், “ஆயுதங்களை வழங்கினால் உங்களின் உயிருக்கு அச்சம் ஏற்படும் என்று அஞ்சுகின்றீர்களானால் குண்டு துளைக்காத எனது சீருடையை வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி அதனையும் வழங்கியதோடு ஐம்பது இலட்சம் ரூபாய் பணத்தினையும் வழங்கினார்.
அதன்போது பிரபாகரன் ராஜீவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டே வந்திருந்தார். இந்திய எல்லையை தாண்டியதும் அவர் அவற்றை மறுத்தார். பிரபாகரனால் அவருடைய இயக்கத்தில் உள்ளவர்களை இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வைக்க முடியவில்லை என்று எனக்கு பின்னர் அறியக்கிடைத்தது. இருப்பினும் அதனை என்னால் உறுதியாக கூறமுடியாது.
கேள்வி:- யுத்தத்திற்கு பின்னரான தற்போதுள்ள சூழலில் முதற்கட்டமாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் என்று கருதுகின்றீர்களா?
பதில்:- அதற்கு வாய்ப்பே இல்லை. தற்போதைய சூழலில் சிங்களவர்கள் வெற்றியடைந்து விட்டோம். எங்களை எதிர்த்து போரிட்டவர்களுக்கு ஒன்றுமே வழங்க கூடாது என்ற மனநிலையினைக் கொண்டிருக்கின்றார்கள். இதன் வெளிப்பாடாகத்தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இறுதியாக நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான வெற்றிகள் கிடைத்துள்ள.
ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினை இந்திய அரசாங்கம் தான் ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளது என்ற சிந்தனையும் சிங்கள மக்கள் மத்தியில் உள்ளது. மகிந்த ராஜபக்ஷவும் அதனையே கூறுகின்றார். ஆகவே இத்தகைய பெரிய விடயங்களை செய்வது என்பது மிகவும் கடினமானதொரு பணியாகும்.
கேள்வி:- இந்திய வெளியுறவுக்கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற பொதுவான அவதானிப்பு கருத்தியலை எப்படி பார்க்கின்றீர்கள்?
பதில்:- இந்தியா எப்போதுமே தமிழர்களின் பக்கம் தான் இருக்கின்றது என்ற சந்தேகம் சிங்களவர்கள் மத்தியில் இருப்பதால் தான் அவர்கள் சீனாவின் வருகையை ஆதரிக்கின்றார்கள்.
அத்துடன் கடந்தகாலத்தில் தமிழர்களுக்கு தமிழகத்தில் வழங்கப்பட்ட ஆதரவையும் அவர்கள் கருத்தில் கொள்கின்றார்கள். அவ்வாறான நிலையில் இந்தியாவானது சீனாவின் செல்வாக்கினை குறைப்பதற்கு முயற்சிக்குமே தவிர தமிழர்களின் கோரிக்கைளை முன்னிலைப்படுத்தி அழுத்தங்களை வழங்க முடியாது.
ஆகக்குறைந்தது புதிய அரசியலமைப்பு விடயங்கள் பற்றியெல்லாம் கூறுகின்றார்கள். அது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பதே கேள்விக்குறியாகும். காரணம் தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் உள்ளார்களே தவிர சிங்கள மக்களின் செல்வாக்கினை பெற்ற ஆட்சியாளர்களாக இல்லை. அவ்வாறானவர்களாலேயே தமிழர்களுக்கான விடயங்களை கையாள முடியும்.
கேள்வி:- தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு தற்போதுள்ள மக்கள் பிரதிநிதிகள் அடுத்தகட்டமாக எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கருதுகின்றீர்கள்?
பதில்:- தற்போது நெருக்கடியான நேரமென்று ஏற்பட்டுள்ளது. தமிழ் தலைவர்களைப் பொறுத்தவரையில் சம்பந்தன், விக்கினேஸ்வரன் போன்றவர்கள் முரண்பட்டு வெவ்வேறு திசைகளில் இருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்குள்ளும் அதேநிலைமைகள் தான்.
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல் என்று கூறுவார்கள். இத்தனைகாலமாக அனைத்துமே முற்றாக சிதைவடைந்துவிட்டது. அவ்வாhறன தருணத்தில் நாம் படிப்படியான செயற்பாடுகளை திட்டமிட வேண்டும்.
உலகப்போர்களில் சிதைந்துபோன, ஜேர்மனி, யப்பான் போன்றன எவ்வாறு முன்னேற்றமடைந்தார்கள். ஆகவே சிறுபான்மை தேசிய இனங்கள் முதலாவதாக, ஒரு தலைமையை அல்லது கூட்டுத்தலைமையை விருப்பு வெறுப்புக்களை தாண்டி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனையடுத்து செயற்பாட்டு திட்டமிடலொன்றை வகுக்க வேண்டும். அதற்கான நிகழ்ச்சி நிரலையிட்டு அதனை பின்பற்றி நகரவேண்டும்.
இறுதி யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் நிகழ்ந்தன. ஐ.நா.வரையில் அனைவரும் சென்றார்கள். அதனால் என்ன பயன் ஏற்பட்டது. தற்போதைய ஜனாதிபதி உள்ளட்டவர்கள் அக்கால ஆட்சியிலும் இருந்தவர்கள். அவர்கள் இந்த விடயங்களை பெரிதுபடுத்த இடமளிக்க மாட்டார்கள். ஆகக்குறைந்தது ஒரு சரியான விசாரணை ஆணைக்குழுவை கூட நியமக்க மாட்டார்கள்.
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தினை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக அவர்களும் இந்த விடயங்களை மேலோட்டமாகத் தான் கையாளுவார்கள். அவர்கள் அழுத்தங்களை அளித்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விடும். இதுபோன்ற விடயங்களை அழுத்தமளிக்க மாட்டார்கள்.
அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவற்றையெல்லாம் பற்றி சிந்திக்க முடியுமா என்றால் ஒருவார்த்தை கூட வெளியிடமுடியாது. ஆகவே ஒற்றுமையாக சிறுபான்மை தலைமைகள் இணைய வேண்டும்.
கேள்வி:- யுத்தத்தின் பின்னரான சூழலில் தமிழ் சமுகத்தினை மீளமைப்பதில்தமிழர்கள் வசமுள்ள கட்டமைப்புக்கள், அரசியல் கட்சிகள் வினைத்திறனாக செயற்படமுடியாதிருக்கின்ற நிலைமையொன்று நீடிப்பதை எப்படி பார்க்கின்றீர்கள்?
பதில்:- இவ்வாறானதொரு சூழலை கையாள்வதற்கான போதிய வியூகங்கள் அவர்களிடத்தில் இல்லை என்பது பிரதான காரணமாகும். நபர்கள் நேர்மையாக இருந்தால் நிருவாகத்தினை முன்கொண்டு செல்லமுடியும். ஆனால் வியூகங்கள் இல்லையென்றால் அது பெருங்குறைபாடாக மாறிவிடும்.
திருச்சி மாநாட்டின்போது, அண்ணா கூறினார், தமிழர்கள் தமது நாட்டினை அடைவதற்கு புல்லட்(துப்பாக்கி ரவை) அல்லது வலெட்(வாக்குச் சீட்டு) ஆகிய இரண்டு வழிகள் தான் உள்ளன. ஆயுதம் ஏந்தமுடியாததால் வாக்குச் சீட்டினை பயன்படுத்துவோம் என்றார். அதன் பின்னர் சீனா ஆக்கிரமிப்பால் விடுதலைக்கோரிக்கையை கைவிடவேண்டியதாயிற்று. அதுபோன்று தமிழர்கள் தங்களே தீர்மானிக்கின்ற சுய ஆட்சி உரிமை அவசியம். குடும்பத்தை பாதுகாப்பதற்கு வீடு அவசியம் போன்று இனத்தினை பாதுகாப்பதற்கு நாடு அவசியம் என்பது நியாயமான கோரிக்கையாகும். ஈழத்தில் பெரும் தியாகங்களைச் செய்த ஆயுதப்போராட்டம் தற்போது இல்லை. துப்பாக்கியாலும் சரி வாக்குச் சீட்டினாலும் சரி அவற்றை அடையமுடியவில்லை. ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரழிழந்தபோது அந்த மக்களின் உறவுகள் எல்லா நாடுகளிலும் அழுதார்கள். தூதரங்களன் முன் கதறினார்கள். அனைவருமே வேடிக்கைதானே பார்த்தார்கள்.
அரசாங்கம் என்பது மக்களை பாதுகாக்கும் காவலன். தமிழர்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பை வழங்கியதா? தற்போது அரசியல் தலைவர்கள் அமைச்சராக, பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினராக வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். அந்த விருப்பு இருப்பதில் தவறில்லை.ஆனால் தமிழ் மக்களுக்கு என்ன பாதுகாப்பு? என்ற கேள்விக்கு என்ன பதில் அவர்களிடத்தில் உள்ளது.
அண்ணாவின் கனவும், பிரபாகரனின் கனவும் நனவாகவில்லை. ஆகவே தமிழர்களாகிய நாம் உலக ஒழுங்கினை அறிந்து உலகம் ஏற்றுக்கொள்ளும் வியூகத்தினை வகுக்க வேண்டும். இனவிடுதலையில் கொள்கை அடிப்படையில் நேர்மையாக இருக்கும் ஒரு தலைமையோ அல்லது கூட்டு தலைமைகளே மக்களின் நம்பிக்கையைப் பெற்று இதனை முன்னெடுக்க வேண்டும்.
(நேர்காணல் தமிழகத்திலிருந்து ஆர்.ராம்)
2 comments
இலங்கையை சுற்றி உள்ள மெய்யான பூலோகஅரசியல் நிலமையை தெளிவாக கூறியுள்ளார்! மாற்று வழிக்கான ஆலோசனைகளையும் கூறி உள்ளார்! இந்திய உதவியை தள்ளியது, பகைத்து கொண்டது மாபெரும் வரலாற்று தவறே!தன் பதவி ஆசைக்காக தமிழரின் அரசியல் பலத்தை திரு. விக்னேஸ்வரன் இன்று பிளந்து கொண்டு இருக்கின்றார் . தவறுகளில் இருந்து தமிழ் மக்கள் பாடம் கற்க்கவில்லை!! உணர்சியயை தூண்டும் வசனங்கள் இன்று ஒன்றுக்கும் உதவாது! ஆழ்ந்த இராஜதந்திரமும் நீண்ட பொறுமையும் நீண்ட கால திட்டங்களே உதவும்!!!!
“தமிழர்கள் தங்களே தீர்மானிக்கின்ற சுய ஆட்சி உரிமை அவசியம்.
குடும்பத்தை பாதுகாப்பதற்கு வீடு அவசியம் போன்று
இனத்தினை பாதுகாப்பதற்கு நாடு அவசியம்.
நம்பிக்கையைப் பெற்ற தலைமை வேண்டும்.
ஒரு தலைமை அல்லது கூட்டுத்தலைமை வேண்டும்.
கொள்கை அடிப்படையில் நேர்மையாக இருக்கும் ஒரு தலைமை வேண்டும்.
அண்ணாவின் கனவும், பிரபாகரனின் கனவும் நனவாகவில்லை.
தமிழர்களாகிய நாம் உலக ஒழுங்கினை அறிந்து உலகம் ஏற்றுக்கொள்ளும் வியூகத்தினை வகுக்க வேண்டும்.
செயற்பாட்டு திட்டமிடலொன்றை வகுக்க வேண்டும்.
அதற்கான நிகழ்ச்சி நிரலையிட்டு அதனை பின்பற்ற வேண்டும்.
நேர்மையாக இருந்து நிருவாகத்தினை முன்கொண்டு செல்ல வேண்டும்”.
மேலே கூறியவற்றைத் தமிழ்த் தலைவர்கள் செய்ய வேண்டும்.
இதற்கு சம்பந்தன் மற்றும் விக்னேஸ்வரன் போன்றவர்களை நிர்பந்திக்க வேண்டும்.