Home இந்தியாகாவேரியில் போதிய நீர் இல்லாமையினாலேயே தமிழகத்திற்கு தண்ணீர் தரவில்லை – கர்நாடக முதல்வர்

காவேரியில் போதிய நீர் இல்லாமையினாலேயே தமிழகத்திற்கு தண்ணீர் தரவில்லை – கர்நாடக முதல்வர்

by admin

4 டி.எம்.சி அளவான நீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்த நிலையில், காவேரி அணையில் போதிய அளவு நீர் இல்லாமை காரணமாகவே தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு வாய்ப்பு இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான முன்வரைபுத் திட்டத்தை மே 3ஆம் திகதிக்குள் இந்திய மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் கர்நாடக தேர்தல் முடியும் வரை இந்த பிரச்சனையை இழுத்தடிக்க மத்திய அரசு தீவிரம் காட்டுவதாகவும், வழக்கு விசாரணைக்கு வரும்போது மத்திய அரசு திட்டத்தை முன்வைக்கும் என்றும் அதிகார பூர்வமற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்டது.

இந்த சூழ்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதன்போது மத்திய அரசு சார்பில் வரைபு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதால் வரைவு செயல் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை என்று கூறி மேலும் அவகாசம் கோரப்பட்டது.

எனினும் இந்த விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இதுவரை இந்திய மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை அளிக்குமாறும் உத்தரவிட்டனர். அத்துடன் தமிழகத்திற்குரிய 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடும்படியும் கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மீறினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர்.

இதேவேளை இவ் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை இம் மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில், கர்நாடக அணைகளில் போதுமான அளவு நீர் இல்லாமை காரணமாகவே, தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள இந்த நிலை இரு மாநிலங்களிடையேயும் மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் சூழலை உருவாக்குவதனையே காண முடிகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More