குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது, சர்வதேச காவற்துறையினரால் சிகப்பு அறிக்கை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அர்ஜூன் மகேந்திரன், அந்த நாட்டில் இருந்தே இலங்கையின் பொருளாதாரத்தை கையாள வழங்கப்பட்ட சந்தர்ப்பம் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதனால், இந்த உடன்படிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். அத்துடன் நாடு முழுவதும் கருத்தரங்குகளை நடத்தி மக்களுக்கு தெளிவுப்படுத்த உள்ளதுடன் பல எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலம் சிங்கப்பூருக்கு இலங்கை சுதந்திரமான இடமாக மாறியுள்ளது. இதன் மூலம் அந்நிய செலாவணி பிரச்சினை மாத்திரமல்ல நாட்டின் முழு பொருளாதாரமும் வீழ்ச்சியடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது .
மேலும் குறித்த உடன்படிக்கை காரணமாக சிங்கப்பூர் பிரஜைகள், சிங்கப்பூரின் குடியுரிமை பெற்றவர்கள் இலங்கையில் சுதந்திரமாக செயற்பட முடியும். இதனால், இதன் மூலம் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கே அதிகளவான நன்மை கிடைக்கும்.
ஜனாதிபதி நாளை நாடாளுமன்றத்தில் ஆற்றும் கொள்கை விளக்க உரையில் இந்த சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுமா இல்லையா என்பது குறிப்பிடப்படும் என கூட்டு எதிர்க்கட்சி எதிர்பார்க்கின்றது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.