இந்தியா சினிமா பிரதான செய்திகள்

எம்.ஜி.ஆர் உடன் சில்க் ஸ்மிதா முரண்பட்டாரா?

துணை நடிகையாக இருந்து சூப்பர்ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஒரு விண்மீன் என்று புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா. ஆந்திராவின் ஒரு கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த பெண். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என குறுகிய காலத்தில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். சில்க் ஸ்மிதாவின் முதல் படம் இணைய தேடி எனும் மலையாளப்படம் ஆகும். இதில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். பிறகு தமிழில் முதல் படமான வண்டிச்சக்கரம் எனும் படத்தில் பார் (மதுபான சாலை) வேலை செய்யும் பெண்ணாக ஒரு கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயரே இவரது பெயராகவும், அடையாளமாகவும் மாறியது. இந்த கதாபாத்திரத்தின் மூலம் சில்க் ஸ்மிதா மிகவும் பிரபலமானார் . இதனைத் தொடர்ந்து இவரை தேடி கவர்ச்சி வேடங்களே வந்தன. ஒருபுறம் வளர்ந்து வந்த போதிலும், மறுபுறம் சில்க் ஸ்மிதா நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மற்றும்  இயக்குனர்கள், தயாரிப்பளர்களை அவமதித்ததாக சில சர்ச்சைகள் எழுந்தன. இந்த வகையில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதிலும் சில்க் ஸ்மிதா ஒருமுறை அவரை அவமதித்தார் என்ற செய்தி வெளியாகி இருந்தது. எதிர்பாராத விதமாக 1996ம் ஆண்டு தனது சென்னை குடியிருப்பில் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துக் கொண்டார். இதற்கு தயாரிப்பில் ஏற்பட நஷ்டம், காதல் ஏமாற்றம், மது பழக்கம் மற்றும் மன அழுத்தம் என கூறப்பட்டது. விஷம் அருந்தி சில்க் ஸ்மிதா இறந்ததாக அறியப்படுகிறது. 2011ம் ஆண்டு சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு டர்டி பிச்க்ஷர் என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. இதில் சில்க் ஸ்மிதாவாக நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக வித்யா பாலன் தேசிய விருது வென்றார்.

சில்க் ஸ்மிதாவிற்குள்ளும் ஒரு நல்ல நடிகை இருந்தார். அதற்கு மூன்றாம் பிறை, அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்கள் சாட்சி. ஆனால், ஆரம்பத்தில் இவர் நடித்த ஒரு வேடமானது கடைசி வரை ரசிகர்கள் சில்க் ஸ்மிதாவை கவர்ச்சி கன்னியாகவே காண வைத்துவிட்டது.

 

சில்க் ஸ்மிதாவின் மாமா மற்றும் அவர்கள் மகன்கள் என சிலர் தெலுங்கு சினிமாவில் பணியாற்றி வந்துள்ளனர். ஆனால், அவர்கள் மூலமாகவோ, உதவியாலோ சில்க் திரை துறையில் கால் பதிக்கவில்லை. சிறிய வயதில் இருந்தே சில்க் ஸ்மிதாவிற்கு சிறந்த நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அந்த ஆசையில் தான் சில்க் மெட்ராஸ் வந்துள்ளார். அப்போது தான் மலையா படமான இணையை தேடி என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சில்க் ஸ்மிதாவின் குடும்பத்தினர் ஆரம்பத்தில் சில்க் சினிமாவில் நடிப்பதை எதிர்த்துள்ளனர். அவரை நடிகையாக வேண்டாம் என்றும் கூறியுள்ளானர். ஆனால், புகழும், பணமும் வந்த பிறகு தன் குடும்பத்தாருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என சில்க் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் .

சாவித்திரி, சுஜாதா, சரிதா போல நல்ல கதாபாத்திரம் ஏற்று நல்ல நடிகையாக பெயர் வாங்க வேண்டும் என்றே சில்க் விரும்பியுள்ளார். ஆனால், வண்டிச்சக்கரம் படத்தில் நடித்த கவர்ச்சி வேடமே அவரது அடையாளமாக மாறிப் போனது. அதன் பிறகு அனைவரும் கவர்ச்சி வேடங்களுக்கே தன்னை தொடர்ந்து அழைத்ததால், நிறைய கிளாமர் தோற்றத்தில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களில் நடித்த பிறகும் கூட, எனக்கு யாரும் நடிக்கும் வாய்ப்பை அளிக்கவில்லை. கவர்ச்சி வேடங்களே தொடர்ந்து வந்தன என்று சில்க் கூறியுள்ளார்.

ஒரு சிறந்த நடிகையாக பெயர் வாங்க வேண்டும் என்பதே எனது கனவு, ஆசை எல்லாம். ஆனால், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை சார்ந்து இருப்பதால், எனது திறமையை நிரூபிக்கும் வகையிலான படங்கள், கதாபாத்திரங்கள் கிடைப்பதில்லை. இயக்குனர்கள் தான் என்னை உருவாக்கினார்கள். ஆகையால், அவர்கள் நடிக்க கூறும் பாத்திரங்களில் நடிக்கிறேன், என்று தனது கனவுகள் மற்றும் ஆசை குறித்து சில்க் ஸ்மிதா கூறியுள்ளார்.

200க்கும் மேற்பட்ட படங்களில் பல இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்திருந்தாலும், பாரதி ராஜா, பாலு மகேந்திரா தனக்கு பிடித்தமான இயக்குனர்கள். இவர்கள் சிறந்த  இயக்குனர்கள் என சில்க் ஸ்மிதா புகழ்ந்து பேசி இருக்கிறார். பாலு மகேந்திரா ஒரு நடிகர் / நடிகையிடம் இருந்து எவ்வளவு சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வர முடியுமோ, அதை செய்வார். அவர் ஒரு சிறந்த கலைஞர் என்றும் கூறியுள்ளார். மேலும், கமல் மற்றும் சிரஞ்சீவி சிறந்த நடிகர்கள் மற்றும் நன்கு நடனமும் ஆட தெரிந்தவர்கள் என சில்க் ஸ்மிதா குறிப்பிட்டுள்ளார்.

அந்த காலத்தில் சில்க் ஸ்மிதா திமிராக நடந்துக் கொள்கிறார், இயக்குனர், உடன் நடிக்கும் மூத்த நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு மரியாதை அளிப்பதில்லை என்றும் கூறி வந்தனர். ஆனால், அதற்கு சில்க் ஸ்மிதா தக்க பதில் அளித்துள்ளார். பத்திரிகையில் தன்னை பற்றி வரும் செய்திகள் யாவும் உண்மை அல்ல. எனக்கு சிறு வயதில் இருந்து கால் மீது கால் போட்டு அமரும் பழக்கம் இருக்கிறது. இதை அவமரியாதை என்று யாரும் என்னிடம் கூறவில்லை. ரிலாக்ஸாக இருக்கும் போது இப்படி அமர்வேன். இதை, நான் உடன் நடிப்பவர்களுக்கு, இயக்குனர்களுக்கு முன் திமிராக நடந்துக் கொள்கிறேன் என்று கூறுவதை என்னால் ஏற்க முடியவில்லை. ஊடகவியலாளர்கள் குறுகிய பார்வையுடன் என்னை குறித்து செய்திகள் வெளியிடுகிறார்கள் என்றும் சில்க் தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

ஒருமுறை எம்ஜிஆர் பங்குபெறும் விழாவை சில்க் ஸ்மிதா தவிர்த்தார் என்றும் சில்க் மீது சர்ச்சை எழுந்தன. ஆனால், அந்த விழாவின் போது சிரஞ்சீவியுடன் தெலுங்கு படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருந்தேன். அதற்கு மறுநாளே சிரஞ்சீவி வெளிநாடு செல்லவிருந்த காரணத்தால், தவிர்க்க முடியாமல் ஷூட்டிங்கில் பங்கெடுத்துக் கொண்டேன். அடுத்தடுத்த நாட்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வேண்டிய சூழல், எந்தவொரு தயாரிப்பாளரும் தேதிகளை மாற்றிக் கொள்ள ஒப்புதல் வழங்க மாட்டார்கள். இப்படியான காரணங்கள் இருக்கும் தமிழக முதல்வருக்கு அவமாரியதை அளிக்கும் வகையில் நடந்துக் கொண்டேன் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் சில்க் தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்துள்ளார்.

எனது தொழில், வேலை மிக குறுகிய காலத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. வெறும் நான்கு வருடங்களில் 200 படங்கள் நடித்துள்ளேன். இதனால் என் வளர்ச்சி மற்றும் வெற்றியை கண்டு சிலர் பொறாமை படுகிறார்கள். அதனால் அவர்கள் எனக்கு தீங்கிழைக்கவும், எனது புகழை சீர்குலைக்கவும் எண்ணுகிறார்கள் என்று சிலக் கூறியுள்ளார்.

சில்க் ஸ்மிதா மீது ஒருமுறை கடத்தல் புகாரும் எழுந்தது. எம்.எஸ்.வி அழைப்பின் பெயரில் சிங்கப்பூர் சென்றுள்ளார் ஸ்மிதா. கூச்ச சுபாவம் கொண்ட சில்க், மேடையில் தன்னை நடனமாட கூடாது என்று முன்பே வாக்குறுதியும் வாங்கி இருக்கிறார். ஆனால், விழா மேடையில் தோன்றிய போது நடனமாட ரசிகர்கள் குரல் எழுப்ப, வணக்கம் மட்டும் கூறி ஸ்மிதா மேடையை விட்டு நகர்ந்துவிட்டார். இதன் பிறகு சில பிரச்சனைகள் எழ, எம்.எஸ்.வி ஸ்மிதாவிடம் நடனமாட கேட்டும் மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால், சில்க் தனியே சிங்கப்பூரில் இருந்து மெட்ராஸ் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய ஊரில் இருந்து விழா ஏற்பாடு செய்தவர்களின் உதவியோடு மெட்ராஸ் திரும்பியுள்ளார் சில்க். அப்போது அவர் வாங்கி வந்த பொருட்களை கடத்தல் புகாரின் பெயரில் சி.பி.ஐ துறையினர் சோதனை செய்துள்ளனர். பிறகு அவர் எதையும் கடத்தி வரவில்லை என்று அறிந்து, அவரிடம் வருத்தம் தெரிவித்து சென்றுள்ளனர். தன் மீது யார் இப்படி ஒரு புகார் அளித்தார் என்பது குறித்து தனக்கு தெரியவில்லை என சில்க் ஸ்மிதா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

எப்போது திருமணம் என ஒருமுறை நிருபர் கேட்ட கேள்விக்கு மூன்றாம் பிறை போன்ற கதாபாத்திரம் ஏற்று நல்ல நடிகையாக வளர வேண்டும், நிறைய சாதிக்க வேண்டும். அதன் பிறகு தான் திருமணம். கண்டிப்பாக அப்படி ஒரு நிலை அமையும், அப்போது திருமணம் செய்துக் கொள்வேன். ஆனால், அது நிச்சயம் எனது இலட்சியங்களை அடைந்த பிறகாக தான் இருக்கும் என சில்க் கூறியுள்ளார். எதிர்பாராத விதமாக, ஸ்மிதாவின் கனவும் நிறைவேறவில்லை, அவர் திருமணமாகும் முன்னேரே தற்கொலை செய்துக் கொண்டு இறந்து போனார்.

 

 

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.