குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் பிரதேச சபை மற்றும் தவிசாளர் அலுவலகம் போன்றவை ஒரு கட்சி அலுவலகம் போன்று செயற்படுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.மன்னார் பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று வியாழக்கிழமை(10) காலை 10.30 மணியளவில் மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.முஜாஹிர் தலைமையில் மன்னார் பிரதேச சபையில் இடம் பெற்றது.
இதன் போது முதல் அமர்விற்கு மன்னார் பிரதேச சபையின் 21 உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர். மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.முஜாஹிர் தலைமையில் வரவேற்புரை நிகழ்த்தப்பட்ட நிலையில் சக உறுப்பினர்களின் அறிமுகம் இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு பட்ட விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது மன்னார் பிரதேச சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் பாலசிங்கம் கதிர்காமநாதன் எழுந்து குறித்த பிரச்சினையை முன் வைத்தார்.
அனைவரும் ஒற்றுமையினையும், சமாதானத்தையும் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் மன்னார் பிரதேச சபை மற்றும் அங்குள்ள தவிசாளர் அலுவலகம் போன்றவை ஒரு கட்சி அலுவலகம் போன்று செயற்படுவதாக குற்றம் சுமத்தினார்.
குறிப்பாக மன்னார் பிரதேச சபையில் அரசியல் பிரமுகர்கள் அனைவருடைய புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் ஒரு கட்சியை பிரதி நிதித்தவப்படுத்தும் அலுவலகமாகவே தாம் அதனை பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அதே கருத்தை மன்னார் பிரதேச சபை உறுப்பினர் கொன்சால் குளாஸ் உற்பட சிலர் முன் வைத்து சபையில் விவாதம் இடம் பெற்றது.
இதன் போது ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அமைச்சர் றிஸாட் பதியுதீனின் புகைப்படம் இருந்தால் என்ன? அவர் தான ஒரே ஒரு கெபினட் அமைச்சர். அவர் மூலமாக மன்னார் பிரதேச சபைக்கு அதிக நிதியை வழங்க ஒரு வாய்ப்பாக அமையும் என ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சபையில் தெரிவித்தனர்.
புகைப்படங்களை கொழுவுவதாக இருந்தால் எல்லோருடைய புகைப்படங்களையும் கொழுவ வேண்டும் என
இதன் போது மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம். இஸ்ஸதீன் உற்பட ஏனை உறுப்பினர்கள் கூட்டாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து உறுப்பினர்களுக்கிடையில் விவாதங்கள் ஏற்பட்டது. அத்துடன் வட மாகாண முதலமைச்சரின் புகைப்படமும் மன்னார் பிரதேச சபையில் கொழுவப்படாமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது.
இதன் போது வடமாகாண முதலமைச்சரின் படத்தை கொழுவ முயற்சி செய்யப்பட்ட போதும் படம் கிடைக்கவில்லை என தவிசாளர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வாக்கு வாதம் இடம் பெற்ற நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் என்ன செய்யலாம் என மன்னார் பிரதேச சபையின் தலைவர் உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் வழங்கிய உறுப்பினர்கள் இவ்விடையம் தொடர்பாக உள்ளுராட்சி மன்ற உதவி ஆணையாளர்,மற்றும் உள்ளுராட்சி கட்டமைப்பு எவற்றை கூறுகின்றதோ அதற்கு அமைவாக நடை முறைப்படுத்த வேண்டும் என உறுப்பினர்கள் தீர்மானம் மேற்கொண்டனர்.அதற்கமைவாக யார் யாருடைய படங்களை கொழுவுவது என்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக முடிவெடுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.