இந்தியா முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டுவருகின்ற நிலையில் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதியில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீட் தேர்வு எழுதுவதற்கு 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் என்கின்ற நிபந்தனை உள்ளநிலையில் இந்திய மருத்துவ பேரவை வயது வரம்பை அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தநிலையில் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதன்போது பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் இடஒதுக்கீட்டு பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவ பேரவையின் அறிவிப்பை உறுதி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது