குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாளை (18-05-2018) 2009 இறுதி போரில் கொல்லப்பட்ட பொது மக்களை நினைவு கூர்ந்து நடத்தப்படுகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெறவுள்ளது. முற்பகல் பதினொறு மணிக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு பொதுச்சுடரேற்றப்பட்டு பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்துகொண்டு கொல்லப்பட்ட தங்களின் உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இறுதி யுத்த காலத்தில் விசுமடு உடையார்கட்டு சுதந்திரபுரம், புதுகுடியிருப்பு, இரணைப்பாலை மாத்தளன், பொக்கனை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், ஆகிய பிரதேசங்களில் அதிகளவான மக்கள் கொல்லப்பட்டனர்.
இதனை தமிழ் மக்கள் வருடந்தோறும் துக்கநாளாக அனுஸ்டித்து,நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த நிகழ்வு இந்த முறை வடக்கு மாகாண சபையும், யாழ் பல்கலைகழக மாணவர்களும், பொது அமைப்புகளும் இணைந்து ஒன்பதாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கின்றனர். வடக்கு கிழக்கு மாகாணத்தில் நாளை துக்க தினமாக கடைபிடிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு தனிநபர்கள் கறுப்பு பட்டி அணிந்து தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வடக்கு மாகாண பாடசாலைகளில் நாளைய தினம் மாகாண சபை கொடியினை அரை கம்பத்தில் பறக்கவிட்டு பதினொறு மணிக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்துமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சரும் கோரியுள்ளார்.
அத்தோடு விசேட பேரூந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன அந்த வகையில் இன்று காலை வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவின் சில பகுதிகளிலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும் பகுதிக்கு போக்குவரத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன.