Home இந்தியா தூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்!

தூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்!

by admin

தூத்துக்குடியில் காவற் துறையின் உச்சபட்ச அராஜகம்….

க.கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
———————————–


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் டுக்காக கொலை செய்த போலீசின் வன்மம் தொடர்கிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களும் ஒற்றை மனிதனாக எழுந்து நின்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே கண்ணில்படுவோர் அனைவரையும் காட்டு மிராண்டித்தனமாகவும் கொலை வெறியோடும் தாக்குதல் நடத்தி தனது விசுவாசத்தை வேதாந்தா குழுமத்திற்கு சமர்ப்பித்திருக்கிறது காவல்துறை.

இதன் ஒரு பகுதியே, மே 22 தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வந்த கைதுகள். தெருவில் வருவோர் போவோரையெல்லாம் அதிலும் குறிப்பாக இளைஞர்களையும் சிறார்களையும் கண்ட இடத்திலேயே அடித்துக் குதறி துவம்சம் செய்து வண்டியிலேற்றி ஆங்கங்கே இருக்கும் காவல்நிலையங்களில் அள்ளிப்போட்டுவிட்டு சென்றுவிட்டது காவல்துறை. அப்பா, அம்மா, மகன், மனைவி என்று பலரும் தங்கள் சொந்தங்களைக் காணாமல், காவல்நிலையங்களுக்கும் போக முடியாமல் கண்ணில் படுவோரிடமும் காணாத கடவுளிடமும் வேண்டிக் கொள்வதும் இறைஞ்சுவதும் சாபமிடுவதுமாக உழன்று கொண்டிருந்தார்கள்.

மார்க்சிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு அலுவலகத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் முறையீடு செய்தார்கள். இதுபற்றி காவல்துறையினரிடம் செய்த முறையீடுகள் அனைத்தும் கருங்கல் பாறையில் பட்ட ஒலி போல் திரும்பி வந்தது.இந்த நிலைமையில்தான் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் மெச்சத்தக்க பணியினை மேற்கொண்டது.

அந்த வழக்கறிஞர்களில் ஒருவர் இ.சுப்புமுத்துராமலிங்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.இசக்கிமுத்துவின் மகன். இவர் உள்பட வழக்கறிஞர்கள் அனைவரும் இணைந்து தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதியிடம் முறையிட்டிருக்கிறார்கள். எண்ணற்ற அப்பாவி இளைஞர்களைக் காணவில்ல; சட்டவிரோதமாக கைது செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

மாவட்ட நீதிபதி, விளாத்திகுளம் நீதித் துறை நடுவர் அவர்களை, வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுச் சொன்ன தூத்துக்குடி புதுக்கோட்டை காவல்நிலையத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கிறார். எப்படியோ கருப்பு ஆடுகள் இதைப் புரிந்து கொண்டு புதுக்கோட்டை காவல்நிலையத்துக்கு இந்த தகவலை சொல்லிவிட்டார்கள். புதுக்கோட்டை காவல்நிலையத்திற்கு விளாத்திகுளம் மேஜிஸ்திரேட் சென்றபோது அங்கு யாரும் அடைக்கப்பட்டிருக்கவில்லை.

ஆனால் அவர் சந்தேகப்பட்டு விபரங்களை சேகரித்தபோது வல்லநாடு மலைக்கருகே காட்டுக்குள் அமைந்திருக்கும் துப்பாக்கி சுடுதளத்திற்குள் ஏராளமான இளைஞர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அங்கு சென்றிருக்கிறார்.96 பேர் மந்தைகளைப் போல காயங்களோடு, அடுக்கி வைக்கப்பட்ட உடல்கள் போன்று சிறை வைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறார். இதன் பிறகு இளம் சிறார்களாக இருந்த 35 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மீதி இருந்த 61 பேர் வழக்கு பதியப்பட்டு சட்டப்படியான காவலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ஒவ்வொருவரின் உடம்பிலிருந்த காயங்களை பதிவு செய்து அதன்பின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அதன் பிறகும் வழக்கறிஞர்கள் சங்கம் சும்மா இருக்கவில்லை. கிட்டத்தட்ட அனைவரும் அப்பாவிகள். அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்போடு செயல்பட்டது. அவர்களை பிணையில் விட வேண்டுமென்று கோரிக்கை வைத்தது.

நீதிமன்றங்களுக்கு இப்போது விடுமுறைக் காலம். எனவே, குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே பிணைக்கான மனுக்கள் விசாரிக்கப்படுவது வழக்கம். ஆனால், மாவட்ட தலைமை நீதிபதி உயர்நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று பிணைக் கோரிக்கைகளை பரிசீலிக்க ஏற்பாடு செய்திருக்கிறார். இதையடுத்து அனைவரும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.அதேநேரத்தில், இந்தக் கொடுமைகளை கண்ணுற்ற மாவட்ட தலைமை நீதிபதி நீதிமன்றத்தின் அருகே உள்ள தென்பாகம் காவல்நிலையத்தை ஆய்வு செய்திருக்கிறார். அங்கும் ஜட்டியோடு மட்டும் சிறை வைக்கப்பட்டிருந்த – காயங்களோடு இருந்த பலரையும் பார்த்து, அது சட்டவிரோதக் காவல்; ஒன்று அவர்களை விடுவிக்க வேண்டும் அல்லது நீதிமன்றக் காவலுக்கு கொண்டுசெல்ல வேண்டுமென்று போலீசாருக்கு அறிவுறுத்தியிருக்கிறார். இதையடுத்து அவர்களும் நீதிமன்றக் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டார்கள்.

ஆனால், காவல்துறையின் வன்மம் ஓய்ந்தபாடில்லை. மே 25 (வியாழனன்று) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தூத்துக்குடி காவல்துறை செல்வநாகரத்தினம் ஐபிஎஸ் மேற்பார்வையில், சட்டவிரோதமாக அடைக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டுமென்று முறையீடு செய்திருக்கிறது. அதை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்துவிட்டார். ஆனால், போலீஸ் வன்மம் அத்துணை எளிதில் ஓய்ந்துவிடுமா என்ன? செல்வநாகரத்தினம் உடனடியாக அதையும் மேல்முறையீடு செய்கிறார். அங்கும் அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆயினும் மீண்டும் திங்கள்கிழமை இந்த மேல் முறையீட்டை செய்ய வேண்டுமென்று மேற்படி செல்வநாகரத்தினம் வழிகாட்டியிருப்பதாகத் தெரிகிறது.

ஒரு பொதுப் பிரச்சனையில் சமூக நோக்கில் நடைபெற்ற போராட்டத்துக்கு பிந்தைய காலத்தில் 13 படுகொலைகள். அதன் காரணமாக தூத்துக்குடி நகரம் முழுவதும் கவலையிலும், சோகத்திலும் ஆழ்ந்திருக்கிறது. இந்த நிலையில் கூட, ஒவ்வொரு குழந்தையின் உணர்விலும், குடும்பத்தின் உணர்விலும் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு, காவல்துறை வன்மத்தோடு இயங்குகிறது. ஆனால் மாறாக, ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு குடும்பமும் எல்லா வேறுபாடுகளையும் கடந்து, ஸ்டெர்லைட் மூடப்பட வேண்டும் என்ற உறுதியையும், காவல்துறை மக்களின் நண்பனல்ல; ஆளும் வர்க்கத்தின் அடியாள் என்பதையும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆம், காவல்துறைதான் தூத்துக்குடி நகரத்தை போராளிகளின் மகத்தான நகரமாக ஒட்டுமொத்த மக்களையும் போர்க்குணம் கொண்டவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வால் சொந்த அடியாள் படை வைத்திருந்தால் கூட இந்த அளவு வன்மத்தோடு செயல்படுமா என்பது சந்தேகமே? இத்தகைய சூழலில், தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் தூத்துக்குடி நீதித்துறையின் செயல்பாடு மிகுந்த போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியது. அரசு நிர்வாகத்தின் அத்தனை அடுக்கும் பணத்திற்கு சேவை செய்வதாக மாறிவிட்ட நிலையில், ஒரு நம்பிக்கைக் கீற்றாக நீதித்துறையின் இந்த நடவடிக்கை திகழ்கிறது. அவர்கள் அனைவருக்கும் நமது போற்றுதலும் வணக்கங்களும்!

ஸ்டெர்லைட்டை மூடு என்ற தீர்ப்பை வழங்கிய நீதியரசர்கள் எலிப்பி தர்மாராவ் மற்றும் பால் வசந்தகுமார், அந்த தீர்ப்புக்கு பின்னர் எந்த பதவி உயர்வும் இல்லாமலேயே ஓய்வு பெற்ற சூழலில் நாம் வாழ்கிறோம் என்பதோடு ஒப்பிட்டால் இந்தப் பாராட்டு மிகவும் சிறியது ஒன்பது புரிகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More