பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் முதல் சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, பெலாரஸ் வீராங்கனை அஸரென்கா ஆகியோர் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளனர். நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் முன்னாள் சம்பியனான வாவ்ரிங்கா 2-6, 6-3, 6-4, 6-7 (5-7), 3-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் குல்லெர்மோ கார்சியா லோபெஸ்சிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
சேர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் பிரேசில் வீரர் ரோஜரியோ டுத்ரா சில்வாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்னொரு போட்டியில் ஒஸ்ரிய வீரர் டோமினிச் திம் 6-2, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் பெலாரஸ் வீரர் இல்வா இவாஷ்காவை வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று போட்டி ஒன்றில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 7-6 (7-2), 6-1 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் டானில்லா காலின்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.
மற்றொரு போட்டியில்; செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா 3-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பராகுவே வீராங்கனை வெரோனிசியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றுமொரு போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோமி ஒசாகா 6-2, 7-5 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் சோபியா கெனினை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அதேவேளை மற்றொரு போட்டியில் 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த விக்டோரியா அஸரென்கா 5-7, 5-7 என்ற நேர்செட்டில் செக்குடியரசு வீராங்கனை காதெரினா சினியாகோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியுள்ளார்.