Home இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் விடயத்தில், நல்லாட்சி அரசும் முன்னைய ஆட்சிக்கு ஈடானதே…..

தமிழ் ஊடகவியலாளர்கள் விடயத்தில், நல்லாட்சி அரசும் முன்னைய ஆட்சிக்கு ஈடானதே…..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் விடயத்தில், உண்மைகளைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்டி, குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்துவதில் முன்னைய ஆட்சியாளர்களைப் போல இந்த நல்லாட்சி அரசும் மெத்தனமாகவும், பொறுப்பின்றியும், விட்டேத்தியாகவும், அசிரத்தையாகவும், பாரபட்சமாகவும், ஏனோதானோ என்ற மனப்பாங்கிலும் நடந்து வந்திருக்கின்றது என்ற பேரதிருப்தி எமக்கு உண்டு என யாழ்.காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ந. வித்தியாதரன் கையளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

யாழில்.இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது கடந்த திங்கட்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தினை கண்டித்து யாழில். கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தின் இறுதியில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோரிடம் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ந. வித்தியாதரன் மகஜர் கையளித்திருந்தார். குறித்த மகஜரிலையே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது ,

கூலிப் படைகளை ஏவி விட்டு நடத்தப்படுவது போன்று அச்சமூட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலை, வடக்கின் ஊடகத்துறை மீண்டுமொரு இருண்ட யுகத்திற்குள் பிரவேசிக்கப்போகின்றமைக்குக் கட்டியம் கூறும் ஓர் அவல நிகழ்வாகக் கருதி நாம் மனக்கிலேசமடைகின்றோம்.

முன்னைய ஆட்சியாளர்களின் இருண்ட யுகத்தில் படுகொலை செய்யப்பட்ட, வலிந்து காணாமலாக்கப்பட்ட, கடத்தப்பட்ட, தாக்குதல்களுக்கும் இம்சைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் விடயத்தில், உண்மைகளைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்டி, குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்துவதில் முன்னைய ஆட்சியாளர்களைப் போல இந்த நல்லாட்சி அரசும் மெத்தனமாகவும், பொறுப்பின்றியும், விட்டேத்தியாகவும், அசிரத்தையாகவும், பாரபட்சமாகவும், ஏனோதானோ என்ற மனப்பாங்கிலும் நடந்து வந்திருக்கின்றது என்ற பேரதிருப்தி எமக்கு உண்டு.

அந்தப் பின்புலத்திலேயே மீண்டும் ஊடகப் பணியாளர்களுக்கு எதிராக வன்முறைக் கொடூரம் கட்டவிழும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றமையை பெரும் மனவேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.

எதிர்க்கட்சியில் இருந்தபடி ஊடக சுதந்திரம் குறித்து நீண்ட காலம் குரல் எழுப்பி வந்தவரும், அண்மையில் கூட ஊடக சுதந்திரம், சுயாதீனம் குறித்து அதிகம் வற்புறுத்திப் பேசியவருமான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கே வந்து தங்கி நிற்கையில் – அவரது வருகைக்காக வடக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உயர்த்தப்படுத்தப்பட்டிருக்கையில் – பத்துப் பேர் கொண்ட கும்பல், சாதாரணமாக வீதியில் நடமாடி, இக்கொடூரத் தாக்குதலை அரங்கேற்றிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றது.

ஊடகத்துறைக்கும், சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டும் தரப்பினருக்கும் மட்டுமல்லாமல், அரசமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்ட கருத்து வெளியிடும் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமைக்கும் நேரடி யாக விடுக்கப்பட்ட சவாலாகவே இந்தத் தாக்குதலை நாம் நோக்குகின்றோம்.

இந்தத் தாக்குதலுக்கு மட்டுமல்லாமல், இதற்கு முன்னர் இருண்ட யுகத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் காணாமலாக்கப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை, அச்சுறுத்தப்பட்டமை, கடத்தப்பட்டமை, தாக்கி சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டமை, சட்டமுறையற்ற விதத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை போன்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணமான சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்குத் தேவையான புலனாய்வு நடவடிக்கை களையும் விசாரணை செயற்பாடுகளையும் இனியும் தாமதிக்காமல் விரைந்து முன்னெடுக்குமாறு வலியுறுத்திக் கோருகின்றோம்.

தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளருக்கு நீதி மேலும் தாமதிக்கப்படாமல் விரைந்து கிட்வதற்குரிய நடவடிக்கைகளை நல்லாட்சி அரசுத்தலைமை இதயசுத்தியுடனும், பற்றுறுதியுடனும், திடசங்கற்பத்துடனும் விரைந்து முன்னெடுப்பதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More