பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை முடக்குவதற்கு உள்துறை அமைச்சுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அவரது ஆட்சிக் காலத்தில் 2007 நவம்பரில் அவசர நிலை பிரகடனம் செய்தமைக்கு எதிராக 2014ம் ஆண்டு முஷாரப் மீது தேச துரோக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் துபாய் சென்ற முஷாரப் அங்கேயே தங்கிவிட்ட நிலையில் தேசதுரோக வழக்கில் அவர் முன்னிலையாததனைத் தொடர்ந்து தொடர்ந்து அவரது கடவுச்சீட்டு மற்றும் அவருக்கு வழங்கப்படும் சில சலுகைகளை முடக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் முஷாரப் வெளிநாடு செல்ல முடியாது என்பதுடன் வங்கிப் பரிவர்த்தனைகள் செய்ய முடியாது. மேலும் பாகிஸ்தானிலோ அல்லது வெளிநாட்டிலோ சொத்துகளை வாங்கவோ, விற்கவோ முடியாது. முஷாரப் மீது முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ள நிலையில் தேச துரோக வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது