குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
நோட்டன் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட தியகல நோட்டன் பிரதான வீதியில் தியகலையிலிருந்து சுமார் 1.05.கிலோ மீற்றர் தொலைவில் இன்று (03.06.2018 ) அதிகாலை 4.00 மணியளவில் மண் மற்றும் பாரிய கற்கள் சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளதால் இப்பாதையூடான போக்குவரத்து சுமார் ஐந்து மணித்தியாலங்கள் தடைபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனால் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதனை தொடர்ந்து நோட்டன் காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் இணைந்து மிகவும் சிரமத்துக்கு மத்தியில் வீதியில் வீழ்ந்து கிடந்த கற்களை அகற்றியதன் காரணமாக பொது போக்குவரத்து சுமார் 9.00 மணியளவில் சிறிய ரக வாகனங்களுக்கு மாத்திரம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த கற்களை அகற்றுவதற்கு வீதி போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவித்திருப்பதனால் 03.06.2018 அன்று பகல் முதல் இவ்வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.தொடர்ச்சியாக இப்பிரதேசத்திற்கு பெய்து வரும் கடும் மழை காரணமாகவே இந்த கற்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் அட்டன் கொழும்பு மற்றும் தியகல நோட்டன் வீதியில் பல இடங்களில் மண்சரிவு மற்றும் கற்கள் புரளும் அபாயம் காணப்படுகின்றன. எனவே இவ்வீதிகளினூடாக வாகனங்களை செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்தமாறு காவல்துறையினர் வாகன சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.