Home இலக்கியம் “ஆளுக்கொரு கோசம் நாளுக்கொரு வேசம் நம்ம – ஆட்களுக்கு இல்லையடா ரோசம்”

“ஆளுக்கொரு கோசம் நாளுக்கொரு வேசம் நம்ம – ஆட்களுக்கு இல்லையடா ரோசம்”

by admin

நாய் பிடிக்கக்கூட மாநகரசபைக்கு சட்டம் அமைத்துள்ள நிலையில் எலி பிடிக்கக்கூட திராணியற்ற வடமாகாணசபை…

 


இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, இந்த நிகழ்வை சிறப்பிப்பதற்காக வருகை தந்திருக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.நா.வேதநாயகன் அவர்களே, சிறப்பு விருந்தினர்களே, கௌரவ விருந்தினர்களே சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!இன்றைய தினம் வேலணையூர் சுரேஷ அவர்களின் கைவண்ணத்தில் உருவான இரு நூல்களை அவரது எட்டாவது படைப்பாக வெளியிட்டு வைக்கின்ற இத் தருணத்தில் உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

இலக்கியத் துறையில் தடம் பதித்த பல கல்விமான்களும் படைப்பாளிகளும் உலா வந்த இப் புனிதப் பிரதேசத்தில் தற்போது இலக்கியப் படைப்பாளிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலும் வேலணையூர் சுரேஷ் போன்ற சில படைப்பாளிகள் தொடர்ந்தும் இலக்கியப் படைப்புக்களில் ஈடுபட்டிருப்பது மகிழ்வைத் தருகின்றது.

இவரது ஆக்கங்கள் பெரும்பாலும் கிராமிய மணம் கமழ்வனவாக இருக்கின்றன. ஊர்க் கோழி முட்டை, தண்ணீர் கலவாத பசும்பால், ஆரச்சோரப் படுத்துறங்கும் பனையோலைப்பாய் என இளமைக்கால அனுபவங்களை இன்றைய சந்ததியுடன் பகிர்ந்து கொள்கின்றார் ஆசிரியர். அவற்றின் சுகத்தை அவர் வெளிக்காட்டுகின்ற தன்மை போற்றுதற்குரியது.

கிராமிய வாழ்க்கை முறையில் அண்மைக்காலம் வரை நிலவி வந்த கூட்;டுக்குடும்ப வாழ்க்கை முறைமை, கூட்டாக அயல் அயல் வீடுகளில் வாழுகின்ற தன்மை, அயலவர்களுடன் நட்புறவைப் பேணுகின்ற வழமை அனைத்தும் புத்தகங்களில் வாசித்து அறிந்து கொள்ள வேண்டிய நிலைக்கு எமது வாழ்க்கை முறை தற்போது மாற்றப்பட்டுள்ளன. இந்த நாட்டில் இடம்பெற்ற அசம்பாவித நிகழ்வுகளினால் ஏற்பட்ட புலப்பெயர்வுகளே இந் நிகழ்வுகளுக்கு மூலகாரணமாக அமைந்தன எனக் கூறப்பட்டாலும் எம்மவர்களிடையே தற்போது காணப்படும் பொதுநலமற்ற சுயநல வாழ்க்கை முறைமையின் உச்சப் பாதிப்பின் விளைவுகளே இவையாகும் என்றும் கூறலாம்.

கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இடம்பெற்ற காலத்தில் முதியோர் இல்லங்களும் வயோதிபர்களுக்கான பராமரிப்;பு நிலையங்களும் வெறிச்சோடிக்காணப்பட்டன. அவற்றை நாடிச் செல்வோர் மிக அரிதாய் இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் காணப்பட்ட முதியோரை பராமரிப்பதற்கு அந் நாட்களில் ஊரே திரண்டுநின்றது. அவர்களின் இறுதி மூச்சு வரை அவர்கள் காரியங்களை எதுவித பிரதியுபகாரங்களும் நோக்காது ஒருவர் மாறி ஒருவர் பராமரித்து வந்தனர். இன்று வயோதிபர்களை பராமரிப்பதற்கு தனிக்குடித்தனங்களில் வசதிகள் இல்லை அல்லது மனங்கள் விரிவடைந்துள்ளதாகத் தெரியவில்லை. அண்மையில் பத்திரிகையில் வந்த செய்தி ஒன்று தனிமனித சுய நலத்தின் உச்சக் கட்டமாக என்னால் உணரப்பட்டது. அதாவது கைதடி முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்த மூதாட்டி ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிப்புற்றுள்ளார் என அவர்களின் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் குறித்த மூதாட்டி காலமாகிவிட்டார் என்ற இன்னோர் செய்தியும் உறவினர்களுக்கு கிடைக்கப்பெற்றது. இதனால் கவலையுற்ற உறவினர்களும் வேறொரு மூதாட்டியும் காலஞ்சென்ற மூதாட்டியின் இறுதிக்கிரியை நிகழ்வுகளை சிறப்புற ஆற்றுவதற்காக முதியோர் இல்லத்தை நோக்கி சென்றிருந்தார்கள். அங்கு குறிப்பிட்ட மூதாட்டி இன்னும் உயிருடன் இருக்கின்றார் என்பதை அறிந்து கொண்டார்கள். எங்கே அவரை நேரில் சென்று சந்தித்தால் தம்முடன் அழைத்துச் செல்ல வேண்டுமோ என்ற அச்சத்தில் அவரை நேரில் சென்று பார்க்காது வந்த வேகத்தில் திரும்பி ஓடிச்சென்ற நிகழ்வு பத்திரிகையில் ஏளனமாக விமர்சிக்கப்பட்டிருந்தது. இன்றைய நாடக உலகின் உண்மை நிலையை எடுத்துக்காட்டுவதற்கு இதுபோன்ற நிகழ்வுகளும் வேலணையூர் சுரேஷ போன்ற படைப்பாளிகளின் படைப்புக்களில் இடம்பெறவேண்டியது அவசியமாகும்.

‘நேரமில்லா நேரம்’ எனும் படைப்பு பல விடயங்களைதொட்டுச் செல்கின்றது. பல விடயங்களை மனத்திடை கொண்டுவந்த சுரேஷ அவர்கள் மாகாணசபையின் நடைமுறைகளையும் விமர்சிக்கத் தவறவில்லை. ‘தோதான சபைகளுக்கு சோக்கான ஆட்கள்’ எனும் தலைப்பில் மாகாணசபை மல்யுத்த சபையாக மாற்றப்பட்டமையும், நாய் பிடிக்கக்கூட மாநகரசபைக்கு சட்டம் அமைத்துள்ள நிலையில் எலி பிடிக்கக்கூட திராணியற்ற வடமாகாணசபை என்று விமர்சிக்கின்றார். தொடர்ந்து அவர் எலி பிடிக்கக் கூட திராணியில்லை புலி பிடிப்பதாய் பீற்றித் திரிகின்றனர். என்று கூறி எமக்கு வாக்களித்த சமூகத்தார் நாக்கைப் பிடுங்கி இனிச் சாகக் கடவர் என வர்ணித்தமை சற்று மனச் சஞ்சலத்தை ஏற்படுத்துகின்ற போதும் உண்மையின் பால் எழுதப்படுகின்ற வரிகள் மதிக்கப்பட வேண்டியன. பாவம் மேய்ப்பரும் சனங்களும் என்று முடிக்கின்றார் கவிதையை.

‘அரசியல் பிரசங்கிகள்’ பற்றி அடுத்து அவர் கூறும் கவிதை யதார்த்தமானது. அது முழுவதையும் வாசித்து விடுகின்றேன். பக்கம் 33ல் அது அடங்கியுள்ளது. கவிதை பின்வருமாறு –

ஆளுக்கொரு கோசம்
நாளுக்கொரு வேசம்
நம்ம – ஆட்களுக்கு
இல்லையடா ரோசம்.

வெள்ளை வேட்டிக் கூட்டம்
சொகுசு வண்டி ஓட்டம்
வாக்குப் – போட்டு நாங்கள்
தேடியதித் தேட்டம்

இத்தனை நாள் காத்து
இருந்து விழி பூத்து
இன்னும் – வீசவில்லை
எங்கள் பக்கம் காற்று.

கண்ணீர் விட்டு வளர்த்த
காலப் பயிர் முழுக்க
ஐயோ – கருகுகிறதே
யாரைச் சொல்லி அழைக்க.

வாழ்வில் இல்லை ஏற்றம்
மக்கள் கடும் சீற்றம்
விரைவில் – வேண்டுமிங்கே
நல்ல தொரு மாற்றம்

அடுத்து இதுவரை பட்ட இழப்புக்கள் துயரங்கள் நீங்கி சுகமான விடியலொன்று உருவாக வேண்டுமென ‘தைமகளே வருக! தைரியமும் தருக!’ என்ற தலைப்பில் புனைந்துள்ள கவிதை போற்றுதற்குரியது. அதில் ஒரு பகுதியை வாசித்து விடுகின்றேன்.

‘மலை போலும் துயர்களை மனதுக்குள் பொத்திக் கொண்டு தலைவாழை இலை விரித்துத் தைரியமாய்ப் பொங்கலிட்டோம். தைமகளே வருக தைரியமும் தருக’ என்கின்றார்.மொத்தத்தில் சுரேஷ; அவர்களின் ‘நேரமில்லா நேரம்’ என்ற கவிதைத் தொகுப்பு கவிதை நயம் நிரம்பியதாகவும் உண்மையைத் தைரியத்துடன் எடுத்துக் கூறுகின்ற தன்மையைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. காலத்திற்கேற்றவாறு படைப்பு அமைந்துள்ளது. 99 பக்கம் கொண்ட நூலினூடு பலதையும் ஆராய்கின்றார், விமர்சிக்கின்றார். விரைவில் வாசிக்கக் கூடியவாறு நூல் அமைந்துள்ளது.

‘நேரமில்லா நேரம்’ எனும் கவிதைத் தொகுப்பின் ஊடாக மாணவர்களையும் இளைஞர் யுவதிகளையும் தம்பால் கவர்ந்திழுக்கும் சுரேஷ அவர்கள் குழந்தைகளை நெறிப்படுத்தவும் தவறவில்லை. ‘இனிப்பா …… பாப்பாப் பாக்கள்’ என்ற நூல் மூலம் சிறுவர்களுக்கு இனிப்பான பல கதைகளை பாக்கள் மூலம் சிறுவர்கள் வரைந்த அழகான வர்ணப் படங்களுடன் அச்சேற்றி வெளியிட்டிருப்பது போற்றப்பட வேண்டியது.

எந்த ஒரு அச்சுருவாக்கமும் வெளியிடப்படும் போது அவற்றில் எழுத்துப் பிழை சொற்பிழை பொருட்பிழை இன்றி வெளியிடப்படுதல் அவசியமாகும். அந்தவகையில் வேலணையூர் சுரேஷன் நூல்களை முற்றுமுழுதாக வாசிப்பதற்கு நேரம் கிட்டாத போதும் நான் வாசித்தவரை எழுத்துப் பிழைகள் குறைந்த படைப்புக்களாக அவை அமைந்திருப்பதை காண்கின்றேன்.

தனி மனித உழைப்பில் குடும்பம் முழுவதும் சுகமாக வாழ்ந்த காலம் போய் குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி பிள்ளைகள் என அனைவரும் சேர்ந்து உழைக்கின்ற போதும் குடும்ப சுமைகளை தாங்க முடியாது அல்லல்ப்படுகின்றமைக்கு நாம் வாழ்வில் ஆகலக்கால் வைக்கப்போனதால் வந்த இடரோ என்று எண்ண வேண்டியுள்ளது. ‘சொந்த ஊர் தான் சொர்க்கம்’ என்ற கவிதையில் இவ்வாறு கூறுகின்றார் (பக்கம் 85)

‘பரிசுத்தமான காற்றைச்
சுவாசித்ததும் அங்கே தான்.
தினம் வேலை அசதி தீர
பனை ஓலைப் பாயில்
ஆரச் சோரப்
படுத்துறங்கியதும் ஊரிலே தான்’ என்கின்றார்.

அக் கவிதையை ‘ஓ யாருக்குமே சொந்த ஊர் தான் சொர்க்கம்’ என்று முடிக்கின்றார்.

தென்னோலைக் கீற்றின் கீழ் சுகமான தென்றல் வீச பனையோலைப்பாயிலும் கயிற்றுக் கட்டிலிலும் படுத்துறங்கிய அந்த சுகம், பழஞ்சோற்றுப் பானையில் ஊறுகாய் இட்டு சின்னவெங்காயம் மிளகாயும் இட்டு அன்று குடித்த பழங்கஞ்சி நினைவுக்கு வரும் வண்ணம் சுரேஷpன் கவிதைகள் கிராமிய மணம் கமழ்வனவாகவும் சென்று போன அன்றைய செறிவு வாழ்க்கை முறையின் சீர்மையை சீராட்டுவதாகவும் அமைகின்றன.
மண் பற்றுடன் மானுடம் பாடும் கவிஞன் என்று கவிதாசிரியரை வர்ணிக்கின்றார் திரு.ச.ராதேயன் அவர்கள். அவர் குறிப்பிட்ட கவிதை பற்றிய ஆசிரியரின் படைப்பை வாசித்துப் பார்த்தேன் –
‘கவிதை எழுதிப்பார்
தெரியும்
உயிரின் வலி
என்னவென்று…..!
வரிக்கும்
வலிக்கும் இடையில்
நிகழும்
பலப்பரீட்சையின்
பின்
ஏற்படும் உடன்படிக்கை
கவிதை…….’ என்றிருந்தது.

உண்மையான ஒரு கருத்தை ஒரு சில வார்த்தைகளால் ஊருக்கு உலகத்திற்கு உரத்துக் கூறுகின்றார் ஆசிரியர்.
நடந்தவை, நடப்பவை பற்றி எமக்கிருக்கும் மன வலியை சுமந்து கொண்டிருக்கும் நாங்கள் அச்சுமையை கீழே வைக்க முடியுமா என்று சிந்திக்கின்றோம். எங்கே வைப்பது எப்படி வைப்பது என்பன கேள்விகளாக உருவெடுக்கின்றன. கடைசியில் அவற்றைக் கவிதை ரூபத்தில் இறக்கி வைப்போம் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றோம். அதனால்த்தான் சுரேஷ் அவர்கள்
‘வலிக்கும்
வரிக்கும் இடையில்
நிகழும்
பலப் பரீட்சையின்
பின்
ஏற்படும்
உடன் படிக்கை
கவிதை’ என்கின்றார்.

வாய்விட்டலறி வழங்க வேண்டிய கருத்துக்களை மையிட்டு எழுத்து வடிவில் வடித்தெடுக்க கவிதை உதவுகின்றது என்ற கருத்தை வலிக்கும் வரிக்கும் இடையில் நிகழும் பலப் பரீட்சையின் முடிவாகச் சித்தரிக்கின்றார் சுரேஷ் அவர்கள். சுரேஷ் அவர்களின் இன்று வெளியிடப்படும் அடுத்த படைப்பு ‘இனிப்பா’ என்ற பாப்பாப் பாக்கள். குழந்தைப் பாடல்கள் இன்று மிகவும் அவசியம். குழந்தைகள் செய்யக் கூடியவற்றை பாக்களில் பகர்வதால் அவை அவர்களுக்கு உதவுகின்றன. அந்த வழியில் குழந்தைகளுக்கான படைப்பாக வெளிவந்துள்ள ‘தோட்டம் செய்வோம்’ என்ற பாடல் என் கவனத்தை ஈர்த்தது. பாடல் பின்வருமாறு –

தென்னை பனை நட்டுவை
தேவை அதில் பற்று வை.
உன்னை வாழ வைக்குமே
உண்மை தோட்டம் இன்றே வை.

சோற்றுக்கு அரிசி விலையைப் பார்
கறிக்குத் தேங்காய் விலையைப் பார்.
நாற்று நட்டால் நாலாண்டில்
தேங்காய் லாபம் கையில் பார்.

கூடி நாங்கள் உழைத்துத் தான்
எங்கள் வாழ்க்கை ஓடுதே.
பாடு பட்ட யாரையுமே
கைவிடுவ தில்லைத் தோட்டமே
அதே போன்று ‘வீட்டுத் தோட்டம்’ என்ற தலையங்கத்தின் கீழ் கீழ்க் காணும் பாப்பாப் பாடலைத் தந்துள்ளார் –
வீட்டுத் தோட்டம் செய்வோம் – நம்
வீட்டில் தோட்டம் செய்வோம்.

வாட்டம் இன்றி உழைத்திடலாம் – நாம்
விரும்பும் பயிர்கள் வளர்த்திடலாம்
ஊட்டம் நிறைந்த உணவுகளை – நாம்
உண்டு நெடுநாள் வாழ்ந்திடலாம்.

கத்தரி வெண்டி காய்கறிகள்
கனிதரும் நல்ல பழவகைகள்
சுத்தமாய்ப் பெறவே நல்வழிகள்
அணுகாது எம்மை நோய் நொடிகள்.

இன்றைய இரு நூல்கள் அளவில் சிறியதாயினும் காரம் பெரியது. ஆழம் பெரியது. அறிவில் பெரியது. அவரைப் பாராட்டி அமர்கின்றேன்.
நன்றி. வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

லிங்கம்மா வெளியீட்டகமும் காத்தலிங்கம் நாகேஸ்வரி குடும்பமும்
பெருமையுடன் வழங்கும்
கவிஞர் வேலணையூர் சுரேசின்
‘நேரமில்லா நேரம்’ (கவிதை நூல்) ‘இனிப்பா……….’ (பாப்பாப் பாக்கள்)
இரு நூல்களின் வெளியீட்டு விழா
சபாலிங்கம் மண்டபம், யாழ் இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம்
03.06.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில்
பிரதம அதிதி உரை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More