Home இலங்கை தமிழ் மக்கள் பேரவை, கட்சி அரசியலில் ஈடுபடாது…

தமிழ் மக்கள் பேரவை, கட்சி அரசியலில் ஈடுபடாது…

by admin

தமிழ் மக்களின் விடிவு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும்  மக்கள் இயக்கமே தமிழ் மக்கள் பேரவை….

தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் இயக்கம். தமிழ் மக்கள் பேரவை, கட்சி அரசியலில் ஈடுபடாது தமிழ் மக்களின் விடிவு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகின்றது. அந்த வகையிலே தமிழ்ச் சமுதாயம் அறிவு பெற வேண்டும், ஆற்றல் பெற வேண்டும், ஆதரவு பெற வேண்டும், தமிழ்ச் சமுதாயத்திற்கு அதன் சகல மட்டங்களிலும் இருந்து அனுசரணை கிட்ட வேண்டும் என்ற ரீதியில் இளையோரைப் பலம் மிக்கவர்களாக ஆக்க இவ்வாறான ஒரு இளையோர் மாநாட்டை வெகுவிரைவில் கூட்ட உள்ளோம்.

அந்த மகாநாட்டில் எமது இளைய சமுதாயத்துடன் சேர்ந்து சில முக்கியமான விடயங்களைக் கலந்தாலோசிக்க உள்ளோம். போருக்குப் பின்னரான எமது சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை, குறிப்பாக இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை முதலில் இனங்கண்டு அதன்பின் அவற்றைத் தீர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுடன் கலந்தாலோசிக்க உள்ளோம். இது சம்பந்தமாக அரசியல் ரீதியாக சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவகையில் எமது உரிமைகளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய இருக்கின்றோம்.

அடுத்து எமது சமுதாயம் நிலைதடுமாறி, தவறி, பிறழ்வாக நடக்க எத்தனிக்கும் போது நாம் எவ்வாறு அவர்களைத் திரும்பவும் ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவரலாம் என்று அவர்களுடன் கலந்துரையாட இருக்கின்றோம்.

மூன்றாவதாக எமது தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை சீரமைப்பது எவ்வாறு என்று பேச இருக்கின்றோம்.

நான்காவதாக இளைஞர் யுவதிகளை எல்லாத் துறைகளிலும் வலுப்படுத்தல் எவ்வாறு என்று ஆராய இருக்கின்றோம். அரசியல் ஞானம் பெற்று தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை மாற்றி அமைத்து எவ்வாறு எமது இனம் முன்னேற்றங்காண வேண்டும் என்று கலந்துரையாட இருக்கின்றோம்.

இது சம்பந்தமாக நாங்கள் போருக்குப் பின்னர் எடுத்துக் கொண்ட அரசியல் நகர்வுகள் பற்றி ஆராய இருக்கின்றோம். தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாiஷகளை பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் எமது அரசியல் நகர்வுகள் இருந்துள்ளனவா என்று ஆராய இருக்கின்றோம். எமது இளைஞர் யுவதிகள் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் என்ற விதத்தில் அவர்களுக்குப் போதுமான அரசியல் அறிவு, நிர்வாகச் செயல்த்திறன், நிதி முகாமைத்துவம் பற்றி போதிய அறிவை அவர்கள் பெற நாங்கள் இதுவரையில் நடவடிக்கைகள் எடுத்தோமா என்று ஆராய இருக்கின்றோம்.

அவ்வாறான வழிமுறைகள், பொறிமுறைகள் தயாரிக்காத படியால்த்தான் தமிழ் மக்கள் பேரவையை உண்டாக்க வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டது என்று எமது இளைஞர் சமுதாயத்திற்கு தெளிவுபடுத்த உள்ளோம்.  எம்மை பொறுத்த வரையில் தமிழ் மக்களின் அரசியல் என்பது பின்வரும் விடயப் பரப்புக்களை கொண்டிருக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

ஒன்று எமது நோக்குகளும் அபிலாஷகளும் அடையாளப்படுத்தப்பட வேண்டும். அவற்றில் எமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கை உண்டாக்கப்பட வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனங்களில் எமது அபிலாஷைகளை உள்ளடக்கிவிட்டு ‘அவை ஏட்டுச்சுரக்காய் சமைக்க உதவாது’ என்ற கருத்தைக் கொண்டிருந்தோமானால் எம் மக்களின் விடிவுக்கு நாம் வழி அமைக்க மாட்டோம். அவர்களின் நிரந்தர விலங்குகளுக்கே வழி அமைப்போம்.

அடுத்து அடையாளப்படுத்தப்பட்ட எமது அபிலாஷைகளை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பரிசீலிக்கப்பட வேண்டும். பெரும்பான்மையினர் வலுவுற்றவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு எதிராகப் போராட முடியாது. ஏதோ கிடைப்பதை சற்று வலுவாக்கி எடுத்துச் செல்வோம் என்று எமது அரசியல் தலைவர்கள் நினைத்திருந்தால் அவ்வாறான சிந்தனைகள் சரியா தவறா என்பது பற்றி ஆராய இருக்கின்றோம்.  மூன்றாவதாக எமது அரசியல் கலாசாரம் ஒரு நேர்மையான அரசியல் கலாசாரமாக மாற்றமடைய என்ன செய்ய வேண்டும் என்று ஆராய இருக்கின்றோம்.நான்காவதாக எமது இளைஞர் யுவதிகள் இந்த அரசியல் பவனியில் ஒன்றிணைய எதைச் செய்ய வேண்டும் என்பதை ஆராய இருக்கின்றோம். நேர்மையான அரசியலொன்றை எடுத்துச் செல்வதானால் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் எமது சமுதாயத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சில தீய பழக்கங்களை நாம் கைவிட என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் சிந்திக்க இருக்கின்றோம்.

அடுத்து கல்வி மேம்பாட்டை ஏற்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எமது ஆராய்ச்சிக்கு உட்படும். அடுத்து எமது சமுதாயம் பொருளாதார அபிவிருத்தி அடைய நாம் என்ன வேண்டும் என்பதை ஆராய இருக்கின்றோம். அடுத்து சமூகப் பிறழ்வுகளை எவ்வாறு ஒன்றுபட்டு களைய முடியும் என்பதை ஆராய்வோம்.

எமது இளைஞர் மகாநாட்டில் எமது வடகிழக்கு மாகாணங்களில் மாவட்டங்கள், பிரதேசங்கள் தோறும் இளைஞர் அணிகளை உருவாக்குவது பற்றி ஆராய இருக்கின்றோம். அடுத்து அடையாளப்படுத்தப்பட்ட மக்கள் பிரச்சனைகளை இந்த இளைஞர் அணிகள் எவ்வாறு தீர்க்கலாம் என்பது பற்றி கலந்துறவாட இருக்கின்றோம்.

எமது இளைஞர் யுவதிகள் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே எமது கரிசனை.  அரசியல், பொருளாதாரம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் ஒரு மறுமலர்ச்சியை கொண்டுவந்து இளைஞர் யுவதிகளை அந்த மறுமலர்ச்சிக்கான மையங்களாக மாற்ற ஆனவற்றைச் செய்ய விரும்புகின்றோம். ஆகவே போருக்குப்பின்னரான எமது தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஆராய்தல், இளைஞர் யுவதிகளின் நடைமுறைப்பிரச்சனைகளை ஆராய்தல், தற்போதைய அரசியல், சமூக, பொருளாதார நிலையை ஆராய்தல், ஆராய்ந்து அடையாளம் காணப்படும் பிரச்சனைகளை எவ்வாறு தீர்த்தல், நீண்ட காலத்திட்டங்களை இதற்காக வகுத்தல், எமது இளைஞர் யுவதிகள் விழிப்போடு நடந்துகொள்ள வழிமுறைகளை ஆராய்ந்து பகிர்ந்து கொள்ளல், தமிழர்தம் விழுமியங்களையும் பாரம்பரியங்களையும் எமது இளைய சமுதாயத்தின் மனதில் உறைய வைத்தல் போன்ற பலவும் எம்மால் பரிசீலிக்கப்படும். அந்த வகையில் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற முறையில் நீங்கள் மக்களுக்கும் எமது இளைய சமுதாயத்திற்கும் எமது கருத்துக்களை முதலிலே கொண்டு செல்லும் எமது ஊடகப் பார்த்தசாரதிகளாகப் பணிபுரியப் போகின்றீர்கள் என்று சொல்லிவைக்கின்றேன். இனி உங்களின் கேள்விகளைக் கேட்கலாம்.
நன்றி

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
இணைத்தலைவர்
தமிழ் மக்கள் பேரவை

தமிழ் மக்கள் பேரவை
இளையோர் மாநாடு
பற்றி பத்திரிகையாளர்களுக்கு ஆற்றப்படும் உரை
பொதுநூலக கருத்தரங்கு மண்டபம்
05.06.2018 அன்று மதியம் 12.30 மணிக்கு
இணைத்தலைவருரை

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More