குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி சம்பந்தமாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அரசியல்வாதிகள், சிவில் அமைப்புகள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பல அதிகாரமிக்க நபர்கள் கடும் அழுத்தங்களை கொடுத்து வருவதால், விசாரணை நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த அழுத்தங்கள் காரணமாக விசாரணை அதிகாரிகள் மாத்திரமல்லாது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகி இருப்பதாக காவற்துறை தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.இப்படியான தேவையற்ற அழுத்தங்களை கொடுக்காது விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல இடமளிக்குமாறு அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிணை முறி மோசடி தொடர்பாக அரசியல்வாதிகள் மட்டுமல்லாது பல்வேறு நபர்கள் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். எனினும் அவற்றில் பெரும்பாலானவை உண்மையில்லை எனவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும் இந்த மோசடி குறித்து நியாயமான, பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் கட்சி பேதமின்றி கைதுசெய்யப்படுவார்கள் எனவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.