மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு கடிதம்
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நுண் நிதிக் கடனால் வட கிழக்;கு சாமானிய மக்கள் மிகப்பெரிய துர்ப்பாக்கியமான வாழ்வியலை தினமும் எதிர் கொள்கின்றனர். கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் வறுமையில் வாடும் ஏதிலிகளை ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி, எள்ளி நகையாடி, தாங்கள் வறுமையின் பிரபுக்கள் ஆகிவிடுகின்றனர் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
-மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவிற்று இன்று (12) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிடுகையில்,,,
பெண்களையே இலக்கு வைத்து இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர். சில நிதி நிறுவனங்கள் பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்குகின்றனர். அதிக வட்டி அறவிடுவதுடன் குறித்த தவணைக்கு பணம் செலுத்த தவறுபவர்களுக்கு மேலதினமாகவும் பணம் அறவீடு செய்கின்றனர்.கடன் வழங்கும் நிபந்தனைகளை இலகுவாக்கி போட்டி போட்டு ஏதிலிகளை ஏமாற்றி கடன் வழங்குவதுடன் சில நிறுவனங்கள் நள்ளிரவைக் கடந்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.
வெளிப்படை தன்மை இன்றி பொய்யும் புரட்டும் கூறி வழங்கிய பணத்தை அறவீடு செய்யும் போது அதி உச்ச அநாகரீகத்தில் ஈடுபடுகின்றனர்.பெண்களுடன் தகாத வார்த்தை பேசுவதுடன் வீதிகளில் வைத்து அவமரியாதை செய்கின்றனர். பாலியல் இலஞ்சமும் கோருகின்றனர். தவணை முறையில் பொருட்கள் வழங்குபவர்கள் இதைவிட கேவலமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இது ஒன்றும் அரசாங்கத்திற்கு தெரியாத விடயம் இல்லை.
மத்திய வங்கியின் அனுமதியுடன் பகல் கொள்ளையடிக்கும் வட்டி வீதத்தை அறவிடுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
ஆகவே யுத்தத்தில் அனைத்து உடமைகளையும் இழந்து வறுமையின் பிடிக்குள் சிக்குண்டு தவிக்கும் எமது மக்களை மாற்றான் மனப்பான்மையுடன் வஞ்சிக்கிறீர்கள்.இந்த ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்று கொடுப்பதாக கூறினீர்கள்.
அதுவும் வெற்று வார்த்தைகளாகவே போய்விட்டது முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா அம்மையார் கிளிநெச்சியில் மத்திய வங்கி அதிகாரிகளுடன் கூட்டத்தை நடத்தி தீர்வு காண்பதாகவும் கூறினார். அதுவும் நடைபெறவில்லை. இப்போது நிதி அமைச்சர் வேடிக்கையான கதை சொல்லுகிறார்.
ஒன்றரை லட்சம் கடன் பெற்றவர்களுக்கு வட்டி செலுத்தப் போவதாக அப்படியானால் நுண்கடன் பிரச்சினையால் பலர் நாளுக்கு நாள் தற்கொலை செய்யும் இக்கட்டான சூழ்நிலை நிலவுகின்ற போது நிதி அமைச்சர் இந்தப் மோசமான விளைவை ஏற்படுத்தும் நுண்நிதியை நிதி நிறுவனங்கள் தொடரலாம் என்பதுதானே அதன் அர்த்தம் அப்படியானால் மக்களுக்காக அரசாங்கமா? அரசுக்காக மக்களா?
மத்திய வங்கி நிதிச் சுரண்டல் போல்தான் நிதிநிறுவனங்களும். மக்களின் செறிவுக்கு அதிகமாக மத்தியவங்கி வடகிழக்கில் அதிக கிளைகளை அமைப்பதற்கு நிதி நிறுவனங்களுக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கியது? எனவே எதிர்காலத்தில் புதிய நிதி நிறுவனங்கள் கிளை திறப்பதிற்கு அனுமதிக்காதீர்கள்.
ஆகவே நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடு மறு சீரமைக்கப்பட வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களை நிதி நிறுவனமிடமிருந்து காப்பாற்றுவதற்கு கண்காணிப்பு பொறிமுறை உருவாக்குங்கள் அரசியல் கடந்து ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள் இல்லையேல் மக்கள் நிதிநிறுவனங்களுக்கு எதிராக அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டிய துர்பாக்கிய சூழ்நிலை ஏற்படும் என்பதை தயவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது…