கேப்பாபுலவு காணி தொடர்பில் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் முல்லைத்தீவு கேப்பாபுலவிற்குச் சென்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன் கேப்பாபுலவு மக்களின் காணிவிடயம் சம்மந்தமாக தமிழரசு கட்சியின் முயற்சி நீண்டகாலமாக தொடர்ந்துள்ளதாகவும் அண்மையில் 136 ஏக்கர் காணி விடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவும் வேறு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இன்னும் மக்களின் கணிப்பின் படி 73 ஏக்கர் காணி இன்னும் விடுபடவேண்டும் இந்த காணிவிடுவிப்பு சம்மந்தமாக தாம் அதிக முயற்சி எடுத்து வருவதாகவும் கூறிய அவர் கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதியினை தான் நேரடியாக சந்தித்து கடிதம் ஒன்று கொடுத்து காணிவிடுவிப்பு சம்மந்தமாக பேசியுள்ளதாகவும் விரைவில் ஒரு முடிவு எடுப்போம் என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்றைய தினம் முல்லைத்தீவில் நடைபெற்றது. இதில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்,நாடாளமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு மாலை வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று தரிசனம் மேற்கொண்டுவிட்டு கேப்பாபுலவில் போராட்டம் மேற்கொள்ளும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.
இன்னிலையில் அங்கு சென்ற இரா.சம்மந்தன் தலைமையிலான குழுவினர்கள் போராட்டம் மேற்கொள்ளும் மக்களுக்கு காணிவிடுவிப்பு தொடர்பில் தாங்கள் எடுத்துக்கொண்ட முன்னேற்ற நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்கள்.
இதன்போது ஜனாதிபதியை காணிவிடுவிப்பு தொடர்பில் சந்தித்துள்ளதாகவும் அவர் விரைவில் படை அதிகாரியினையும் தன்னையும் அழைத்து ஜனாதிபதி அலுவலகத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது இரண்டு கிழமை அல்லது பத்து நாட்களுக்குள் நடைபெறும். என்று போராட்ட மக்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதுடன் மக்களின் காணி நிலைப்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார்.