குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த போகும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அந்த கட்சிக்குள் நெருக்கடியான நிலைமை உருவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த கட்சி துண்டு துண்டாக சிதறும் நிலைமையை காண முடியும் எனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கோட்டே தொகுதி அமைப்பினர் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ராஜபக்ச அரசாங்கம் ஒன்றை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என சிலர் பேசுவதாகவும் அப்படியான ஆட்சி மீண்டும் ஏற்பட்டால், இலங்கை்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதை தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ராஜபக்சவினரின் ஆட்சி ஏற்பட்டால் பட்டினியுடனேயே வீதியில் இறங்க நேரிடும். மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவளிக்காது எனவும் மகிந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.