எம்மால் தெரிவிக்கப்பட்ட பல விடயங்கள் ஏற்கனவே தடைப்பட்டு நிற்கின்றன. நாங்கள் அவற்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தும் நீங்கள் அவற்றை உதாசீனம் செய்வது வாடிக்கையாக நடைபெற்று வருகின்றது. எனினும் எங்கள் பிரச்சனைகளை நாட்டின் தலைவர் என்ற முறையில் உங்களுக்குக் கூறி வைப்பது எமது கடமை. என வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி. விக்கினேஸ்வரன் இன்று ஜனாதிபதி முன் தெரிவித்துள்ளார்
சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கிளிநொச்சி நிகழ்வு இன்று(18) ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சிமத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .
அவரின் முழுமையான உரை வருமாறு
அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் வடபகுதிக்கு பல தடவைகள் விஜயம் செய்த போதும் இன்றைய இந்த விஜயம் சற்று மாறுபட்ட விதத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வாழும் உறவுகளை இழந்த குழந்தைகள், மாற்று வலுவுடைய பிள்ளைகள், சிறுநீரக நோயால் பாதிப்புற்றுள்ள நோயாளிகள் எனப் பாதிப்படைந்தவர்களுக்கு உதவி செய்யும் முகமாக அவர் வந்துள்ளார். அத்துடன் மிகவும் நலிவுற்ற நிலையில் மிகக் குறைந்த வாழ்வாதார உதவிகளை மட்டும் பெற்றுக்கொண்டு வறுமையில் வாடுகின்ற குழந்தைகளை அங்கத்தவர்களாகக் கொண்ட ஆறு குடும்பங்களுக்கான நிதி உதவிகளை வழங்கவிருக்கின்றார். மற்றும் குழந்தைகள் உரிமைச் சட்டத்தின்கீழ் கூறப்பட்டவாறு குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு நிலையங்களுக்கான நான்கு நூலகங்களை அமைத்து அவற்றின் வேலைத்திட்டங்களின் கால்கோள் நிகழ்வாக இன்றைய இந்த வருகை அமைந்திருக்கின்றது.
வடபகுதியில் இடம்பெற்ற நீண்டகால யுத்தத்தின் விளைவாக பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் தாய் தந்தையர்களை இழந்து, உறவுகளை இழந்து, குழந்தைகள் காப்பகங்களிலும் மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கின்ற நல்ல உள்ள படைத்தவர்களின் தனிப்பட்ட இடங்களிலும், செஞ்சோலை போன்ற அமைப்புக்களிலும் வாழ்ந்து வருகின்றார்கள். இக் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இக்குழந்தைகள் பற்றி சிந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு ஏற்பட்டதையிட்டு நான் பெருமகிழ்வடைகின்றேன்.
மாற்றுத் திறனாளிகள் பலர் மக்களிடையே ஒரு மூலையில் கிடந்து அவ்வாறே வாழ்ந்து மடிந்த காலங்கள் இன்று மலையேறிவிட்டது. இன்று அவர்கள் மாற்று வலுவுடைய பிள்ளைகளாக இனங்காணப்பட்டு அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கும் அரச பள்ளிகளும் மற்றும் தனியார் அமைப்புக்களும் முன்வந்துள்ளன. உதாரணமாக சிவபூமி போன்ற அமைப்புக்கள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுவது அரசுக்குரிய தார்மீகக் கடமையாகும்.
அடுத்ததாக சிறுநீரக நோய்ப் பாதிப்பு பல இடங்களில் உணரப்பட்டுள்ளது. குடிநீர் மாசுக்கள் காரணமாகவே இவ்வாறான நோய்கள் தோற்றுவிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. வட மத்திய மாகாணத்திலும் இவ்வாறான பாதிப்பு இனங்காணப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாழும் பகுதிகளில் வாழுகின்ற ஆயிரம் குடும்பங்களுக்கு நல்ல குடிநீர் வழங்குவதற்கான நன்னீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை ஆரம்ப உதவியாக மேற்கொள்ளவிருப்பது சிறப்புக்குரியது. அதே போன்று இன்னும்பல உதவிகளை சிறுவர்களுக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கும் ஆரம்பக் கல்வி நிலையங்களுக்கும் குழந்தைகள் பாதுகாப்பு மையங்களுக்கும் வழங்குவதற்காக வருகை தந்திருக்கும் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். நீங்கள் வழங்குகின்ற இவ்வாறான உதவிகள் எமது மக்களால் நன்றியுடன் நினைவுகூரப்படும். எமது மக்கள் நன்றியுணர்வு மிக்கவர்கள். அவர்கள் தமக்கு உதவுகின்ற நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை போற்றிக் கௌரவிக்கவும் மலர்மாலை அணிவித்து பெருமை சேர்க்கவும்; பின் நிற்க மாட்டார்கள். ஆனால் இக் கைங்கரியங்களின் பின்னணியில் அரசியல் இருந்தால் அதையும் அடையாளங்கண்டு விடுகின்றார்கள்.
எமது பெருமதிப்பிற்குரிய அதிமேதகு ஜனாதிபதி அவர்களே! போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் பல்வேறு விதமான துன்பங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் உட்பட்ட நிலையில் துன்பங்களை இதயத்தில் சுமந்தவாறு நடைப்பிணங்களாக நகர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அண்மையில்கூட யுத்தகாலத்தில் எறிகணைத் தாக்குதலின் விளைவாக நுரையீரல்ப் பகுதியில் 50 கிராம் நிறையுடைய குண்டுத் துகள்களைத் தாங்கியவாறு பன்னிரெண்டு ஆண்டுகளாக நிமிர்ந்து படுக்க முடியாது முறையாகச் சுவாசிக்க முடியாமல் அல்லலுற்ற இளைஞர் ஒருவர் கொழும்பிலுள்ள பிரபல அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளிலும் சத்திரிசிகிச்சை செய்ய முடியாது எனக் கைவிட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் வைத்திய காலாநிதி முகுந்தன் அவர்களால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அந்த நோயாளி நலத்துடன் இருப்பதை பெருமையுடன் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன். அந்த வைத்திய நிபுணரின் பெயரை ஜனாதிபதி கௌரவிப்பான ளுசi டுயமெய யுடிhiஅயலெய கௌரவத்திற்காக அண்மையில் பரிந்துரைத்துள்ளேன்.
இவ்வாறு பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் உடலுறுப்புக்களை இழந்து அங்கவீனர்களாக எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ஏற்ற உதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கூறி வைக்க விரும்புகின்றேன். போரில் பாதிக்கப்பட்டு பல வித நெருக்கடிகளுக்கு உள்ளானவர்களை முன்னாள் போராளிகள் என்ற ஒரே காரணத்திற்காக புறம் தள்ளுவது மனிதாபிமானம் ஆகாது. அதுவும் சமய ரீதியிலான பண்பான குடும்ப வாழ்க்கையை வாழும் உங்களைப் போன்றவர்கள் முன்னைய போராளிகளை அவர்கள் இயக்கப் பெயர் கொண்டு புறந்தள்ளி வைப்பது எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. கௌரவ சுவாமிநாதன் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையிட்டு நாங்கள் மிகவும் மனவருத்தம் அடைந்தோம்.
இதே போன்று எமது தேவைகள் எல்லைகளின்றி நீண்டு செல்கின்றன. பல விடயங்கள் உங்களுக்குக் கூற இருந்தாலும் இரண்டு தினங்களுக்கு முன்னர் எனக்குத் தெரியப்படுத்திய ஒரு விடயத்தை இங்கு கூறுகின்றேன். விஸ்வமடுவில் தொட்டியடி என்ற இடத்தில் தாம் கஷ;டப்பட்டு வளர்த்த தென்னை, வாழை போன்ற மரங்களை யானைகள் வந்து அழித்துவிட்டன என்று கிராமத்தவர் வந்து முறையிட்டுள்ளார்கள். சுமார் 6 கிலோமீற்றர் தூரத்திற்கு மின்சார வேலி போட 5 மில்லியன் தேவைப்படுகின்றது. வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அதை நிர்மாணிக்க முன்வந்துள்ளது. பணத்தை நீங்கள்தான் நல்கி உதவிபுரிய வேண்டும். இதுபற்றி நாம் பேசும் போது ஆறு உள்ளூர் இளைஞர்கள் கிளிநொச்சி வனஜீவராசிகள் மருத்துவ பராமரிப்பு நிலையத்தில் தொண்டர்களாகப் பல காலமாகப் பணியாற்றி வருவதாகவும் அவர்களை உடனே நிரந்தரமாக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர் தமக்கு ஒரு காரியாலயக் கட்டடம் கட்ட விவேகானந்தா நகரில் காணி அடையாளப்படுத்தப்பட்டும் இதுவரை தந்துதவவில்லை என்றும் கூறினார்கள். இவை யாவும் தங்களால் பரிசீலிக்கப்பட வேண்டும்.
பல விடயங்கள் ஏற்கனவே தடைப்பட்டு நிற்கின்றன. நாங்கள் அவற்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தும் நீங்கள் அவற்றை உதாசீனம் செய்வது வாடிக்கையாக நடைபெற்று வருகின்றது. எனினும் எங்கள் பிரச்சனைகளை நாட்டின் தலைவர் என்ற முறையில் உங்களுக்குக் கூறி வைப்பது எமது கடமை. இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. அக் காணிகளைத் தொடர்ந்து அவர்கள் வைத்திருக்க எந்தவித நியாயமான காரணங்களும் இல்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இறுதியுத்தத்தில் சரணடைந்த போராளிகள், அவர்களின் தற்போதைய நிலை ஆகியன பற்றி வெளிப்படையான தகவல்கள் வழங்கப்படவில்லை. எமது மீனவர்களின் வாழ்வாதாரங்களைத் தென்னவர்கள் தட்டிப்பறிக்கின்றார்கள். அதற்கு எந்த முறையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மேலும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமை கொண்டவர்களாக தம்மைத் தாமே நிர்வகிக்கின்ற ஒரு இனமாக வாழ அனுமதிக்க நீங்கள் முன்வரவேண்டும். அது அரசியல் ரீதியாக உங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமென்றால் ஒன்பது மாகாணங்களுக்கும் சுயாட்சி வழங்குங்கள். வேண்டுமான மாகாணங்கள் இணைந்து கொள்ள வழி விடுங்கள். சிறுபான்மை இனங்கள் தமக்குள்ளே மோதல்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற காய் நகர்த்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். இந்து, இஸ்லாம் மத இனத்தவர்கள் அனைவரும் வட மாகாணத்தில் சகோதரர்களாக வாழ வழிசமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு எனக்கு வழங்கப்பட்ட ஐந்து நிமிட நேர அவகாசத்தில் கூறப்பட வேண்டிய முக்கிய விடயங்களை எனது உரையில் உள்ளடக்கியுள்ளேன் எனத் தெரிவித்து வாய்ப்புக்கு நன்றி கூறி அதிமேதகு ஜனாதிபதி அவர்களை வாழ்த்தி விடைபெறுகின்றேன்.