காஷ்மீர் பிரச்சினைக்கு பலப்பிரயோகம் தீர்வாகாது என பதவியை விலகிய முதல்வர் மெஹ்பூபா முப்தி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடனான தங்கள் கூட்டணியை பாஜக முறித்துக் கொண்டதால் பதவிவிலகிய மெஹ்பூபா முப்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பலப்பிரயோக ராணுவக் கொள்கை ஜம்மு காஷ்மீரில் ஒரு போதும் பயனளிக்காது என்பதே தான் எப்போதுமே கூறி வரும் ஒன்று எனவும் சமரசமே தீர்வு எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது பகைவர்கள் பிரதேசமல்ல என சுட்டிக்காட்டியுள்ளதுடன் அதிகாரத்துக்காகக் தாம் கூட்டணி அமைக்கவில்லை எனவும் இந்த கூட்டணிக்கு போர்நிறுத்தம் என்ற மிகப்பெரிய நோக்கு இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜக வெளியேறியது ஒன்றும் தனக்கு அதிர்ச்சியளிப்பதாக இல்லை எனக் கூறிய மெஹ்பூபா, தான் ஆளுநரிடம் வேறு எந்த கூட்டணிக்கும் முயற்சி செய்யப்போவதில்லை எனக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்