உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் உள்ளதாக ஐ.நா. சபையினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த 2017 புள்ளிவிவரங்களின்படி உலகளாவிய அளவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களிடம் சுமார் 100 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகள் உள்ளன எனவும் அதில் பொதுமக்களிடம் மட்டும் 85.7 கோடி துப்பாக்கிகள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராணுவ வீரர்கள் 13.3 கோடி துப்பாக்கிகளையும் காவல்துறையினர் 2.27 கோடி துப்பாக்கிகளையும் பயன்படுத்துகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் பொதுமக்களில் அதிகமானோர் துப்பாக்கி வைத்திருக்கும் நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது எனவும் அந்த நாட்டில் 39.3 கோடி மக்களிடம் துப்பாக்கி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது இடத்தில் உள்ள இந்தியர்களிடம் சுமார் 7.11 கோடி துப்பாக்கிகள் உள்ளன எனவும் சீனர்களிடம் 4.97 கோடி துப்பாக்கிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் எந்த நாட்டு ராணுவத்திடம் துப்பாக்கிகள் அதிகம் உள்ளன என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளதாகவும் சீனா, வடகொரியா, உக்ரைன் ஆகியவை அடுத்தடுத்த நிலையில் உள்ளதாகவும் அமெரிக்கா 5-வது இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல எந்த நாட்டு காவல்துறையினரிடம் அதிக துப்பாக்கிகள் உள்ளன என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ரஸ்யா முதலிடத்தில் உள்ளது. சீனா, இந்தியா, எகிப்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. அமெரிக்கா 5-வது இடத்தில் உள்ளது