அரசாங்கத்திற்கு சார்பாக கூட்டு எதிர்கட்சியில் சிலர் – மகிந்தானந்த…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற கூட்டு எதிர்க்கட்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில், கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர், அரசாங்கத்திற்கு சாதமான நிலைமையை உருவாக்க முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இவர்களின் குறுகிய நோக்கம் கொண்ட செயற்பாடுகள் காரணமாக வீழ்ச்சியடைந்து வரும் அரசாங்கத்திற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சிக்குள் தற்போது சிறிய அணிகள் சில உருவாகியுள்ளதுடன் பெயருக்கு மட்டுமே கூட்டு எதிர்க்கட்சி என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மகிந்த, பசில், கோத்தபாய ஆகிய ராஜபக்ச சகோதரர்கள் தமக்கு நெருக்கமான மூன்று அணிகளை வழிநடத்தி வருகின்றனர். இவர்கள் மூவருக்கும் இடையில் ரகசியமாக இருந்து வந்த அதிகார போட்டி தற்போது பகிரங்க மேடைக்கு வந்துள்ளது. இந்த அணிகள் பல சந்தர்ப்பங்களில் எதிரான அணிகள் மீது பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
அதேவேளை கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, கோத்தபாய ராஜபக்ச, எந்த வகையிலும் கூட்டு எதிர்க்கட்சி அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார் எனக் கூறியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச, வியத் மக அமைப்பின் மாநாட்டில் முன்வைத்த பொருளாதார கொள்கை அமெரிக்க சார்புக்கொண்டது எனவும் அது கூட்டு எதிர்க்கட்சியின் பொருளாதார கொள்கை அல்ல எனவும் இப்படியான நபருக்கு ஆதரவளிக்க முடியாது எனவும் வாசு குறிப்பிட்டுள்ளார்.