குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
மிக அண்மையில்தான் தனது போட்டிகளை பபுகயா தொடங்கியது என்றபோதும் விறுவிறு என்று வளர ஆரம்பித்திருக்கிறது. முதலாவது போட்டியை கடந்த மார்ச் மாதத்தில் நடத்தியதற்குப் பின்னர் நான்கு மாதங்களுக்குள் 4 போட்டிகளை நடத்தி முடித்திருக்கிறது பபுகயா. இலங்கையைப் பொறுத்தவரையில் இதுவொரு பெரும் அடைவு என்கிறார் பபுகயாவின் காப்பாளர் ரி.பி.அன்ரன்.
பபுகயா என்பது பந்தயப் புறா வளர்ப்பாளர்கள் கழகம் – யாழ்ப்பாணம் என்பதன் சுருக்கம். பன்னாட்டு அளவில் புறாப் பந்தயங்களுக்கு பெயர் போன பைபா என்பதைப் போலவே தமது கழத்தின் பெயரையும் சுத்தத் தமிழில் இருந்து விநோதச் சுருக்கமாக அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
2012இல் கருவானபோதும் 2016இல்தான் பபுகயா திருவானது. 2017இல் அதற்கென முதலாவது நிர்வாகக் குழு ஒன்று தெரிவானபோதும் அது வெற்றிகரமானதாக இருக்கவில்லை என்கிறார்கள். 2018இல் முழுமூச்சுடன் களமிறங்கிய கழகம், 4 பந்தயங்களை நடத்தி முடித்திருக்கிறது. இன்னும் சில பந்தயங்களை நடத்தும் திட்டத்தையும் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள.
“அடுத்த வருடத்திலே இலங்கையின் மிக நீண்ட தூர புறாப் பந்தயமான 400 கிலோ மீற்றர் வான் தூரப் பந்தயத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றோம். இது சவால் மிகுந்த ஒரு நிகழ்ச்சி. அதைச் சாத்தியமாக்குவதற்கு எமக்கு அதிக பயிற்சியும், விவேகமும் தேவையாக இருக்கின்றன” என்கிறார் அன்ரன். பபுகயாவைத் தொடக்குவதற்குக் காலாக இருந்தவர்களில் ஒருவர் என்பதுடன் கழகத்தின் காப்பாளர் அவர்.
தனது மூன்று பந்தயங்களில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வை கடந்த ஞாயிறன்று கிறீன் கிறாஸ் விடுதியில் கோலாகலமாக நடத்தியது பபுகயா. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மகப்பேறு மருத்துவ நிபுணரும் பறவைகள் ஆர்வலருமான மருத்துவர் க.சுரேஸ்குமார் தலைமை அதிதியாகக் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.
நாயாறு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய இடங்களில் இருந்து நடத்தப்பட்ட பந்தயங்களில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்கள் நிகழ்வில் வழங்கப்பட்டன. முறையே 100, 150, 180 கிலோ மீற்றர் வான் தூரத்தைக் கொண்ட பந்தயங்கள் இவை. தரைவழியாகப் பார்த்தால் இவற்றின் தூரங்கள் மிக அதிகம். எனினும் தரையால் வாகனங்களில் பயணிப்பதற்கு எடுக்கும் நேரத்தில் அரைவாசி நேரத்தில் புறாக்கள் எல்லாம் தமது கூடுகளுக்குத் திரும்பி விட்டன.
அனுராதபுரத்தில் இருந்த யாழ்ப்பாணம் வரையான 200 கிலோ மீற்றர் தூரத்தை (150 கி.மீ. வான் தூரம்) வெறும் இரண்டு மணி நேரத்தில் பறந்து வேகப் புறாக்கள் பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளன குருநகரைச் சேர்ந்த புறாக்கள். இதே தூரத்தை வீதி வழியே கடப்பதாக இருந்தால் மூன்றே முக்கால் மணி நேரம் தேவை.
பபுகயா (பந்தயப் புறாக்கள் கழகம் – யாழ்ப்பாணம்) நடத்திய வேகப் புறாக்கள் பந்தயத்திலே யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த புறாக்கள் இந்த வெற்றியைச் சாத்தியமாகியிருக்கிறன. அதேநேரம் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான 236 கிலோ மீற்றர் தூரத்தை (180 கி.மீ. வான் தூரம்) இரண்டே முக்கால் மணி நேரத்தில் அடைந்து வெற்றியைப் பெற்றிருக்கின்றன வல்வெட்டித்துறையைச் சேர்ந்த புறாக்கள். இந்தத் தூரத்தை தரை வழியே கடப்பதற்கு 4 மணி நேரம் தேவை.
அனுராதபுரம் பந்தயத்தில் வெற்றிபெற்ற புறாக்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு 73 கிலோ மீற்றர் தூரம் என்கிற வேகத்தில் பறந்துள்ளன. மற்றைய இரு பந்தயங்களிலும் கிட்டத்தட்ட மணிக்கு60 கிலோ மீற்றர் தூரம் என்கிற வேகத்தில் பறந்துள்ளன. புறாக்கள் பறக்கும் வேகத்தைத் தீர்மானிப்பதில் காற்றும் கணிசமான பங்களிப்பைச் செய்கின்றது. ஆனால் இந்த வேகம் போதாது, “மணிக்கு 85 முதல் 90 கிலோ மீற்றர் தூரம் என்கிற வேகத்தையாவது அடைவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் இலங்கையின் மிகச் சிறந்த புறாக்கள் யாழ்ப்பாணத்துப் புறாக்கள் என்கிற அடைவை எட்டமுடியும்” என்று தனது உரையில் தெரிவித்தார் மருத்துவர் க.சுரேஸ்குமார்.
இந்த வேகத்தை அடைவதற்கு ஏற்றவகையில் வெளிநாடுகளில் இருந்து சிறந்த பந்தயப் புறாக்களை அவர் அண்மையில் இறக்குமதி செய்திருக்கிறார். “பந்தயப் புறாக்களின் விலை சாதாரணமானது இல்லை. அதுவும் வெளிநாடுகளில் பந்தயங்களில் கலந்துகொண்ட புறாக்களாயின் அவற்றை இங்கு கொண்டு வருவதற்குப் பல லட்சங்கள் ஆகும். எமது கழகத்தைச் சேர்ந்த ஒருவர் பெல்ஜியத்தைச் சேர்ந்த சில புகழ்பெற்ற புறா வளர்ப்பாளர்களின் புறாக்களை இறக்குமதி செய்திருந்தார். ஒரு சோடிப் புறாக்களை இங்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு 4 லட்சம் ரூபா வரையில் செலவாகியிருக்கிறது. இதைவிடவும் அதிக விலைக்கும் புறாக்கள் இருக்கின்றன. வெளிநாடுகளில் பெரிய பந்தயங்களில் வென்ற ஒரு புறாவை நாம் இங்கே கொண்டு வரவேண்டுமானால் 9 லட்சம் 10 லட்சம் ரூபா வரையிலும் செல்லும்” என்று விளக்குகிறார் அன்ரன். ஆனால், யாழ்ப்பாணத்தில் பந்தயப் புறாக்களின் விலைகள் சாதாரணமாக 5 ஆயிரம் முதல் 15ஆயிரம் வரையிலேயே தற்போது விற்கப்படுகின்றன. இவற்றினால் சிறந்த பெறுபேறுகளைத் தரமுடியுமா என்பதைப் போகப்போகத்தான் தெரிந்துகொள்ள முடியும், வெளிநாட்டில் இருந்து இறக்கப்படும் புறாக்களுடன் போட்டிபோடும் வல்லமையை இவை வெளிப்படுத்துமா என்பதை அடுத்த இரண்டு வருடங்களில் கண்டுகொள்ளலாம் என்கிறார் அன்ரன்.
புறாப் பந்தயத்தை எப்படி நடத்துகிறார்கள்? “பந்தய தினத்திற்கு முதல் நாள் மாலையில் பபுகயாவின் இடத்தில் பந்தயத்தில் கலந்துகொள்ளும் புறாக்களைச் சேகரிப்போம். அவற்றின் கால்களில் இரகசிய குறியீட்டு இலக்கம் கொண்ட மெல்லி காப்பு ஒன்று அணிவிக்கப்படும். இரவோடு இரவாக அந்தப் புறாக்கள் பந்தயப் புள்ளிக்கு, அதாவது திருகோணமலைக்கோ அனுராதபுரத்திற்கோ எடுத்துச் செல்லப்பட்டு பந்தய தினம் காலை 6.30 முதல் 7.15 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் திறந்துவிடப்படும். அங்கிருந்து பறக்கத் தொடங்கும் புறாக்கள் எங்கும் தங்காமல் தத்தமது உரிமையாளர்களைத் தேடி அவர்களது கூடுகளை வந்தடையும்” என்று விவரித்தார் அன்ரன்.
எல்லாப் பந்தயத்தையும் போலவே யாருடைய புறா வேகமாகக் கூட்டை வந்தடைந்ததோ அதுவே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுகின்றது. பந்தயப் புள்ளிக்கும் கூடுகளுக்கும் இடையிலான தூரம் கணக்கிடப்பட்டு அந்தத் தூரத்தைக் கடக்கப் புறா எடுத்துக்கொண்ட நேரதத்தால் அதனை வகுத்து ஒரு செக்கனில் எத்தனை கிலோ மீற்றர்கள் தூரத்தை புறா கடந்தது என்பதைக் கணிப்பார்கள். எந்தப் புறா அதிக தூரத்தைக் கடந்திருக்கிறதோ அதுவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
“மேற்கு நாடுகள் மற்றும் கிழக்கில் தாய்வான், சீனா போன்ற நாடுகளில் எல்லாம் இது மிகப் பெரியதொரு போட்டி. ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்கிற அளவிற்குப் மிகப் பெரிய பணப் பரிசில்கள் வழங்கப்படும். இங்கே இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என்பதால் பணப் பரிசில்கள் வழங்கப்படுவதில்லை. பபுகயா வளர்ச்சியடையும்போது அது சாத்தியமாகலாம்” என்றார் அன்ரன்.
இந்தப் பந்தயங்களுக்காக ஜேர்மனி, பிரிட்டன், பெல்ஜியம், அவுஸ்ரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தெல்லாம் பெரும் விலைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றை இங்கே இனப்பெருக்கம் செய்து குஞ்சுகளைப் பந்தயங்களில் கலந்துகொள்ள வைக்கிறார்கள்.
ஒரு காலத்தில் மிகப் பெரும் பணப் பரிசில்களுடனான போட்டிகளை பபுகயாவும் வழங்குவதுடன் உலகத் தரம்வாய்ந்த புறாப் பந்தயங்கள் நடக்கும் இடமாக யாழ்ப்பாணத்தை மாற்றியமைப்பதும் தமது நோக்கம் என்கிறது பபுகயா.