ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்தில் கைப்பற்றப்பட்ட தமிழ்ப் போராளிகள் பயன்படுத்திய ஆயுதக் குவியல்களை நீதித்துறை நடுவர் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக அழிப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பகுதியில் கிணறு தோண்டும் போது பெட்டிகள் இருப்பதை கண்ட உரிமையாளர் அதனை திறந்து பார்த்த போது அங்கு ஆயுதக் குவியல் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றிவிட்டு வெடிகுண்டுகளை செயல் இழக்க வைக்கும் தனிப் படையினர் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் அப்பகுதியில் தொடர்ந்து தோண்டியபோது பெருமளவில் ஆயுதக் குவியல் கண்டெடுக்கப்பட்டது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட ஆயுதக் குவியல்களில் வெடிக்கும் தன்மை உள்ள ஆயுதங்கள் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு அ மற்றொரு இடத்தில் குழி தோண்டி தண்ணீர் நிரப்பி புதைத்து வைக்கப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் வெடிக்கும் சக்தியை இழந்த ஆயுதங்கள் மட்டும் ராமநாதபுரம் ஆயுதப்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன.
ஆயுதக் குவியல்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகளை பாதுகாக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய வசதியில்லை என்பதனால் இவற்றை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மக்கள் நடமாட்டமில்லாத ஒதுக்குப்புறமான ராமேசுவரத்தின் கடற்கரை பகுதிகளில் ஆயுதங்களை செயலிழக்கச் செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இப்பணி ஓரிரு நாளில் தொடங்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் தமிழ்ப் போராளிகள் பயன்படுத்தி பின்னர் புதைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது