மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு முடிவதற்குள் 200 வீடமைப்புத் திட்டங்களை செயற்படுத்தவுள்ளதாக வீடமைப்பு அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஏறாவூரில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற 43 நவோதய வீடுகளும் நலனோம்புத் திட்டங்களும் கையளிக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றி போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வின் போது ‘ஸம் ஸம் கிராமம்’ மற்றும் ‘ஸகாத் கிராமம்’ ஆகிய இரு மாதிரி எழுச்சிக் கிராமங்களின்; 43 புதிய வீடுகள் மக்கிடம் கையளிக்கப்பட்டதுடன் உட்கட்டமைப்பு வசதிகளான நீர , மின்சாரம் உள்ளக , பிரவேசப் பாதை வசதி ஆகியனவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் 170 பேருக்கு மொத்தமாக 85 இலட்சம் ரூபா வீடமைப்புக் கடனும் , 70 பேருக்கு ‘விசிரி’ திட்டத்தின் கீழ் தலா ஒரு இலட்ச ரூபா இலகு கடன்களுக்கான காசோலைகளும் 25 பேருக்கு ‘சொந்துருபியச’ எனும் திட்டத்தின் கீழ் தலா 2 இலட்ச ரூபா வீடமைப்புக் கடனும் ‘சில்பசவிய’ எனும் திட்டத்தின் கீழ் கட்டடத் தொழிலாளி பயிலுநர்கள் 50 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபா உதவு தொகையும் , கண்பார்வைக் குறைபாடுள்ள 258 பேருக்கு இலவச கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் இருவருக்கு காணி உரிமைப்பத்திரம் என்பனவும் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 100 வீட்டுத்திட்டங்களைத்தான் அமைப்பது என ஏற்கனவே தனக்குள் இருந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாக அவஅவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் ஆர்வத்தைப் பார்க்கின்ற பொழுது இந்த வீடமைப்பு இலக்கை இருமடங்கு அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தான் செய்வதைத்தான் சொல்வேன் சொன்னதைச் செய்வேன். ஏனென்றால் என் தந்தையும் அவ்வாறே செயற்பட்டவர் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் இன மத பேதங்களை ஏற்படுத்தி உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி நிறம்மாறித் திரியும் ஓணான்களாகவே பல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இனியும் இந்த நாட்டுக்குத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.