நாட்டில் தேர்தல் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதே தவிர, அதற்கு அப்பால் உள்ள ஜனநாயக அரசியலில் கவனம் செலுத்தப்படுவதாகத் தெரியவில்லை. மக்கள் நலன் சார்ந்து நாட்டம் கொள்ளப்பட வேண்டிய சமூக, பொருளாதார, மற்றும் அபிவிருத்தி அரசியலிலும் உரிய வகையில் கவனம் செலுத்தப்படுவதாகத் தெரியவில்லை.
தேர்தல் அரசியல் அவசியம். இல்லையென்று சொல்வதற்கில்லை. ஆனால், தேர்தலுக்கு அப்பால் உள்ள அரசியலே நாட்டுக்கும் மக்களுக்கும் அவசியமான அரசியல். அது ஜனநாயக அரசியல். மக்களுக்கான அந்த ஜனநாயக அரசியல் இல்லையென்றால், அது போலித்தனமானது. வெறுமனே அரசியல் அந்தஸ்தையும், ஆட்சி அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கான அரசியலாகும். அது ஆட்சிக்குப் பொருத்தமற்றது. நாட்டின் அரசியல்வாதிகளுக்கும்சரி, பொது மக்களுக்கும்சரி அது நன்மை பயக்கத் தக்கதல்ல.
ஆனால் துரதிஸ்டவசமாக அந்தஸ்துக்கான அரசியலையும், அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்வதற்கான அரசியலையும் இலக்கு வைத்ததாகவே தேசிய அரசியல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த பயணத்தில், பேரினவாத தேசிய அரசியல் கட்சிகள் பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்டு, சமயம் தழுவிய தீவிர இனவாத அரசியலையே கையில் எடுத்திருக்கின்றன.
இந்த அரசியலில் பல்லின மக்கள் வாழ்கின்ற நாட்டிற்கு அவசியமான மதச்சார்பற்ற கொள்கையும், பல்லினங்களும் பங்கேற்கத்தக்க பன்மைத்துவத் தன்மையும் படிப்படியாகக் கைகழுவப்பட்டு வருகின்றது. தேசிய சிறுபான்மை இன அரசியல் கட்சிகளினதும், தேசிய சிறுபான்மை இனமக்களினதும் அரசியல் உரிமைகள் கட்டம் கட்டமாகக் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன.
பேரினவாத அரசியல் போக்கைக் கொண்ட தேசிய கட்சிகளின் ஆதரவின்றி அல்லது அவற்றின் அரவணைப்பின்றி தேசிய சிறுபான்மை இன கட்சிகள் அரசியல் செய்ய முடியாது. தேர்தல்களின் ஊடாக மக்களுடைய ஆதரவைப் பெற்றிருக்கின்ற போதிலும், அந்தக் கட்சிகள் அரசியலில் தனித்துவமான அதிகாரங்களைக் கொண்டிருக்க முடியாது. தனித்துவமாக நிலைத்து நிற்கவும் முடியாத சூழலே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த யதார்த்தத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் வகையிலேயே சிங்கள பௌத்த தேசிய அரசியல் போக்கு நாட்டில் வலிமையாக நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றது.
இத்தகைய தேசிய அரசியலின் பின்னணியில் அல்லது அரசியல் அரங்கில்தான் தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசியல் உரிமைகள் அபகரிக்கப்பட்ட நிலையில், அடிப்படை உரிமைகளுக்காகவும், அதிகாரத்திற்காகவும் போராடுகின்ற, போராட்ட அரசியல் கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடர்கின்றது.
அந்நியரின் ஆட்சியில் இருந்து நாடு விடுபட்டதன் பின்னர், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் படிப்படியாக ஒடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த உரிமைகளுக்கான குரல்கள் நசுக்கப்பட்டிருக்கின்றன. அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் ஆட்சி அதிகார பலத்தைக் கொண்டு அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் பயங்கரவாதம் என்ற போர்வையில் சர்வதேச சக்திகளின் துணையுடன் 2009 ஆம் ஆண்டு இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு, அந்த யுத்த வெற்றி என்ற அடையாளத்தின் மீது சிங்கள பௌத்த தேசிய அரசியல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்பட்ட தேசிய சிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், யுத்தத்தில் அடைந்த வெற்றி,; சிங்கள பௌத்த தேசியத்தின் பெருமிதம் மிக்க யுத்த வெற்றியாகக் கொண்டாடப்பட்டு வருகின்றதே தவிர இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வில்லை.
போலியான சில நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டனவே தவிர, அந்தச் செயற்பாடுகள் இதய சுத்தியுடனும், நேர்மையான அரசியல் போக்குடனும் முன்னெடுக்கப்படவில்லை. யுத்த வெற்றியின் பின்னர், ஆறு வருடங்களாக எதேச்சதிகாரத்தை நோக்கி நடத்தப்பட்ட ஆட்சி தோற்கடிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு நல்லாட்சிக்கான ஆட்சி உதயமாகிய போதிலும் நிலைமைகளில் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் நிகழவில்லை. மாறாக, முன்னைய ஆட்சிப் போக்கின் வழியிலேயே புதிய அரசாங்கமும் பயணம் செய்வதைக் காணக்கூடியதாக உள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இரண்டு பருவங்கள் ஆட்சி நடத்திய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்த அதிகாரத்தையும், அரசியல் அந்தஸ்தையும் நிரந்தரமாக நிலைநாட்டிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திந்தார். இரண்டு தடவைகள் மட்டுமே ஒருவர் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியும் என்பது அரசியலமைப்பின் இறுக்கமான அடிப்படை சட்ட விதி. அரசியலமைப்பின் 18 திருத்தச் சட்டத்தின் மூலம், ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியும் என்று, அந்த விதியை மாற்றி அமைத்துக் கொண்டு மூன்றாவது தடவையாக ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றுவதற்காக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை வலிந்து நடத்தினார். ஆனால் அந்தத் தேர்தலில் எதிர்பாராத விதமாக அவர் தோற்கடிக்கப்பட்;டார். ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை மக்கள் தெரிவு செய்தார்கள். தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டு அணி வெற்றிபெற்று நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி அமைத்தது.
உள்ளுராட்சித் தேர்தல் தந்த பாடம்
புதிய ஆட்சிக்கு அத்திவாரமாக அளிக்கப்பட்ட ஊழல்களை ஒழிப்போம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாதொழிப்போம், தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டு வருவோம், இவற்றுக்காகவும், புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்குமாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் என்ற தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஊழல்கள் ஒழிக்கப்படுவதற்குப் பதிலாக புதிய ஆட்சியில் மேலும் மோசமான ஊழல்களும் பாரதூரமான நிதி மோசடிகளும் இடம்பெற்றன.
ஆயினும், ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற முன்னைய அரசியலமைப்பு விதி 19 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் மூலம் மீண்டும் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டது. நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த விகிதாசாரத் தேர்தல் முறைக்குப் பதிலாக விகிதாசாரத் தேர்தலும், தொகுதி தேர்தல் முறையும் கொண்ட கலப்பு தேர்தல் முறைக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. உள்ளுராட்சி சபைகளில் 25 வீதம் பெண்களுக்கு அரசியல் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற புதிய சட்ட நியதி அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், புதிய ஆட்சியில் மக்களுடைய நாளாந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. வாழ்க்கைச் செலவு முன்னைய ஆட்சிக்காலத்தில் யுத்தச் சூழலில் இடம்பெற்றதைப் போலவே உணவு மற்றும் எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பெரிய அளவில் உயர்த்தப்பட்டன. வாழ்க்கைச் செலவுக்கு எற்ற வகையில் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. வேலை தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்கி வேலையில்லா பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. மாறாக அவர்கள் மீதான இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்த போதிலும், மறைமுகமான இராணுவ அழுத்தங்களும் சிங்களக் குடியேற்றங்கள் உள்ளிட்ட அத்துமீறிய பேரினவாத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் வரையறையற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டன.
யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டிய பொதுமக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும், மறுவாழ்வுக்குமான மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளும், புனர்வாழ்வுச் செயற்பாடுகளும் பௌதிக ரீதியாகவும், உளவியல் சார்ந்த நிலையிலும் மேற்கொள்ளப்படவில்லை.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தி, ஐக்கியத்தையும் சமாhனத்தையும் உருவாக்குவதற்கு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக சிங்கள பௌத்த ஆதிக்கத்துக்கான நடவடிக்கைகளே தீவிரமான முன்னெடுக்கப்பட்டன. பௌத்த மதவாதம் தீவிரமாகத் தலைவிரித்து ஆடுவதற்கான அரசியல் சூழல் விரிவாக்கப்பட்டது. வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள பௌத்தர்கள் இல்லாத இடங்களில் பௌத்த விகாரைகளும், புதிய புதிய இடங்களில் புத்தர் சிலைகளும் நிர்மாணிக்கப்பட்டு பௌத்த மதம் திணிக்கப்பட்டது.
முஸ்லிம்களின் மத உரிமைகளில் பௌத்த மதத் தீவிரவாதிகள் அடாவடியாகத் தலையிட்டது மட்டுமல்லாமல், பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.
இத்தகையதொரு பின்னணியில்தான், நீண்ட காலமாகப் பின்போடப்பட்டு வந்த உள்ளுராட்ச்pத் தேர்தல்கள், தேர்தல் உரிமைக்காக நடத்தப்பட்ட தொடர்ச்சியான போராட்டங்களின் பின்னர் நடத்தப்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தங்களது எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாமையினால் ஏற்பட்ட ஏமாற்றத்;தையும், அந்த அரசு மீதான வெறுப்பையும் மக்கள் உள்ளுராட்சித் தேர்தலில் வெளிப்படுத்தினார்கள்.
நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளாகிய சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இந்த உள்ளுராட்சித் தேர்தலில் படுதோல்வி அடைந்தன. ஆட்சி மாற்றத்திற்காக, ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் புறக்கணிக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன, இதில் அமோகமாக வெற்றி பெற்றது. எதிர்பாராத அந்தத் தோல்வி அந்தக் கட்சிகளைத் துவண்டு போகச் செய்துள்ளன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்பதற்காகத் கணிசமான தமிழ் மக்கள் கூட்டமைப்பைத் தேர்தலில் புறக்கணித்து, தேசிய கட்சிகளுக்கு வாய்ப்பளித்தார்கள். இதன் மூலம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் கோட்டையாகத் திகழ்ந்த வடக்கிலும் கிழக்கிலும் தேசிய சிங்களக்கட்சிகள் காலூன்றுவதற்கு வழியேற்பட்டுவிட்டது. தமிழ் அரசியலில் ஏற்பட்ட இந்த எதிர்பாராத திருப்பம் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு நல்லதொரு பாடமாக அமைந்தது.
தமிழர் தரப்பின் அரசியல் நிலைமைகள்
உள்ளுராட்சித் தேர்தலில் அடைந்த தோல்வியைச் சீர் செய்வதற்காக சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் தமது கட்சிகளை மறுசீரமைப்பு செய்தனவே தவிர, அரசியல் ரீதியாக மக்களுக்கு ஏற்பட்டிருந்த ஏமாற்றத்தை சீர் செய்வதற்காக அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. உள்ளுராட்சித் தேர்தலில் அடைந்த பின்னடைவை மற்றுமொரு தேர்தலின் ஊடாக நிவர்த்தி செய்வதற்கான அரசியல் வியூகங்களை வகுப்பதிலேயே அந்தக் கட்சிகள் இரண்டும் தீவிர கவனம் செலுத்திச் செயற்படுகின்றன.
பொதுஜன பெரமுன தேர்தலில் அடைந்த வெற்றியின் மூலம் கிடைத்த மக்களுடைய ஆதரவை மேலும் பெருக்கிக் கொள்வதற்கான இனவாத மற்றும் இராணுவ பலம் சார்ந்த அரசியல் வியூகங்களை வகுப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இந்த வியூகத்தின் மூலம், அரசியலில், மீண்டும் பலமான ஓரிடத்தைப் பற்றிப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில், மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் தீவிரமாக இறங்கியிருக்கின்றார்கள்.
இதற்கு ஆதாரமாக பொதுத் தேர்தல் ஒன்றையும் ஜனாதிபதித் தேர்தலையும் இலக்காகக் கொண்ட அரசியல் முன்னாயத்தங்களே தேசிய அரசியலில் இடம்பெற்று வருகின்றன. உள்ளுராட்சித் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து மீட்சி பெறுவதற்கு மற்றுமொரு தேர்தலையே தந்திரோபாய உத்தியாகப் பயன்படுத்துவதற்கு சிறிலங்கா, சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் முனைந்திருக்கின்றன. கூட்டு அரசியல் செயற்பாட்டைக் கைவிட்டு தனிக்கட்சியாக ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்பதே அந்தக் கட்சிகளின் தற்போதைய அரசியல் முனைப்பாகும்.
ஒட்டுமொத்தமாக தேசிய அரசியலில் முப்பரிமாண நிலையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் செயற்பாடுகள் தேசிய சிறுபான்மையினராகிய தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கும், அபிலாசைகளுக்கும் மாறான ஓர் எதிர்கால அரசியல் நிலைமையை நோக்கிய காய்நகர்த்தல்களாகவே அமைந்திருக்கின்றன.
ஜனநாயக நடைமுறைகளின்படி, தேர்தல்களின் வரிசையில் மாகாணசபைத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும். ஆயினும் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் ஆர்வமில்லாத நிலைமையே காணப்படுகின்றது. மாகாணசபைத் தேர்தலைப் பின்போட்டுவிட்டு, பொதுத் தேர்தலை நடத்தவதிலேயே அரசாங்கம் குறியாக இருக்கின்றது. அரச இராஜதந்திர வட்டாரங்கள் இந்தத் தகவலை கசியவிட்டிருக்கின்றன.
தேர்தல்களை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்பதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய பகிரங்கமாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மத்தியில் கூறியிருப்பது இதனை உறுதி செய்துள்ளது. அரசியல்வாதி ஒருவருடைய நடவடிக்கையைப் போல அவருடைய செயற்பாடு காணப்பட்ட போதிலும், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையை அது வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.
அது மட்டுமல்லாமல், வடக்கில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் அரசியலில் பிரவேசிப்பதற்காக வவுனியாவில் ஒரு தலைமைச் செயலகத்தைத் திறந்துள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசனும், மாகாணசபைத் தேர்தல் குறித்து கவனம் செலுத்தவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டதே தனது அரசியல் நகர்வு என்று கூறுகின்ற அவர், அந்த அபிவிருத்திச் செயற்பாட்டுக்காக அங்கிருந்து இரண்டு பிரதிநிதிகள் தேசிய கட்சியில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில் குறியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த அரசாங்கத்தில் வன்னிப்பிரதேச அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் பணிப்பாளராக அவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஜனாதிபதியின் நேரடி பணிப்பாளர் என்ற பதவி நிலையில் ஜனாதிபதிக்கு நெருக்கமாகச் செயற்பட்டு வருவதாகக் கருதப்படுகின்ற அவர், அடுத்ததாக ஒரு பொதுத் தேர்தலை இலக்கு வைத்ததாகவே தனது வன்னிப்பிரதேச அரசியல் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றார். அவருடைய இந்த நகர்வும்கூட, அரசாங்கத்தின் அடுத்த இலக்கு மாகாணசபைத் தேர்தல் அல்ல, என்பதையும் அடுத்த இலக்கு பொதுத் தேர்தலே என்பதையும் காட்டுவதாகவே அமைந்துள்ளது.
விசுவரூபமெடுத்துள்ள கேள்வி
அடுத்து வரவேண்டிய மாகாணைசபைத் தேர்தலே அரசியல்வாதிகளின் பொதுவான எதிர்பார்ப்பாக
உள்ளது. அந்த வகையில் தமிழர் தரப்பு அரசியலிலும் மாகாணசபைத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் குறித்தே கவனம் செலுத்தப்படுகின்றது. குறிப்பாக வடமாகாணத்திற்கான முதலமைச்சராக தேர்தலில் யாரை களமிறக்குவது என்ற விடயமே தமிழ் அரசியல் களத்தில் பரவலாகப் பேசப்படுகின்றது. விவாதத்திற்கும் உள்ளாக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் அரசாங்கத்தின் அடுத்த தேர்தல் இலக்கு என்பது மாகாணசபைத் தேர்தலாகவோ அல்லது பொதுத் தேர்தலாகவோ இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு ஓர் ஆளுமையுள்ள அரசியல் தலைமை உருவாக்கப்பட வேண்டும் என்ற தேவை மிக அத்தியாவசியமாகவும், அவசரமாகவும் எழுந்திருக்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பின்னால் அணிதிரண்டிருந்த தமிழ் மக்கள் அந்த அணியில் இருந்து கணிசமான அளவில் பிரிந்து செல்வதற்குத் துணிந்துவிட்டார்கள் என்பதை உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. அதேவேளை, இந்தத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு வன்னிப் பிரதேச மக்கள் மத்தியில் கிடைத்துள்ள செல்வாக்கை அடுத்து, அந்தக்கட்சியின் செல்வாக்கை மேலும் வளர்த்துக் கொள்வதற்காக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான காதர் மஸ்தானுக்கு புனர்வாழ்வு பிரதி அமைச்சர் பதவியை வழங்கி ஓர் அரசியல் அடித்தளம் இடப்பட்டிருக்கின்றது.
அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சிக்கும் வடமாகாணத்தில் உள்ளுராட்சித் தேர்தலில் மக்கள் மத்தியில் செல்வாக்கு கிடைத்துள்ளது. அந்த செல்வாக்கை மேலும் அதிகரித்து கொள்வதற்கான நடவடிக்கைகளில் அந்தக் கட்சியும் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகின்றது.
இனப்பிர்சசினைக்கு அரசியல் தீர்வு காண்பதிலும், நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதிலும் அக்கறையற்ற போக்கையே இந்தக் கட்சிகள் இரண்டும் கடைப்பிடித்து வருகின்றன. இந்த் நாட்டின் பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்களைப் போலவே, சிறுபான்மை இன மக்களும், இந்த நாட்டின் குடிமக்கள். இந்த நாட்டின் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களாவர். அந்த வகையில் அவர்கள் தங்களது அரசியல் உரிமைகளையும், மத உரிமைகளையும் ஏனைய இனத்தவரைப்போன்று சமமான முறையில் கடைப்பிடிக்கவும், அனுபவிப்பதற்கும் இந்தக் கட்சிகளின் அரசியல் செயற்பாடுகள் தடையாகவே இருக்கின்றன. அந்த அடிப்படை உரிமைகளைப் பறித்து, அவர்களை அடக்கி ஒடு;க்குகின்ற போக்கிலேயே காரியங்களை முன்னெடுத்து வருகின்றன.
இந்த நிலையில் அந்தக் கட்சிகளின் அரசியல் செயற்பாடுகளுக்கு ஈடுகொடுத்து, மாறி மாறி ஆட்சி நடத்துகின்ற அந்தக் கட்சிகளுக்கு அரசியல் ரீதியாக அழுத்தத்தைக் கொடுத்து தமிழ் மக்களின் உரிமைகளை மீட்பதற்கு ஆளுமையுள்ள வகையில் ஓரணியில் செயற்படுவதற்கு தமி;ழ்த்தேசிய கூட்டமைப்பு முன்வர வேண்டும்.
தமிழ் மக்களை அரசியல் ரீதியாக ஓரணியில் கட்டமைத்துச் செயற்படுவதற்கு உரிய நடவடிக்கைகளை கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும். இந்த பொறுப்புமிக்க கடமையில் இருந்து ஏற்கனவே அது தவறியுள்ளது. அதன் காரணமாகவே மாற்றுத் தலைமை குறித்த சிந்தனையும் எழுந்திருந்தது. மாற்றுத் தலைமையை உருவாக்குகின்ற செயற்பாடுகளும்கூட வெற்றியளிக்கத்தக்க வகையில் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் பொதுத் தேர்தல் என்றாலும்சரி, மாகாணசபைத் தேர்தல் என்றாலும்சரி, அடுத்து வருகின்ற ஒரு தேர்தலை எதிர்கொள்வதற்கு கூட்டமைப்போ அல்லது மாற்றுத் தலைமையை நோக்கிச் செயற்படுகின்ற ஏனைய கட்சிகளோ உறுதியானதோர் அரசியல் தலைமையை வழங்க வேண்டிய கட்டாய நிலைமைக்கு உள்ளாகி இருக்கின்றன.
இந்த நிலையில் தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் அரசியல் தலைமைகளும், இவற்றுக்கு அப்பால் உள்ள தமிழ் அரசியல் சக்திகளும் என்ன செய்யப் போகின்றன என்ற கேள்வி இப்போது விசுவரூபம் எடுத்துள்ளது.