பயங்கரவாதிகளை பலமடைய செய்ய முடியாது – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
அரசியலமைப்புச் சட்டத்தை தான் மீறி விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ஏற்றுக்கொண்டுள்ளதால், அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க சட்டமா அதிபரின் ஆலோசனை அவசியமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சபாநாயகரிடம் அனுமதியுடன் விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். வடக்கில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. விளக்கு ஏற்றப்படுகிறது. புலிகளின் சின்னம் வீதியில் வரையப்பட்டுள்ளது. ஆவா குழு வடக்கில் பலம் பெற்றுள்ளது. வடக்கில் சட்டத்தின் ஆளுமை வீழ்ச்சியடைந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு மனவருந்தம் ஏற்பட்டுள்ளது. வடக்கில் கரும்புலிகளை நினைவுகூர்ந்து பயங்கரவாதிகள் மீண்டும் எழுச்சி பெற எந்த நோக்கத்தில் இடமளிக்கப்படுகிறது. முகாம்கள் அகற்றப்படுகின்றன. அப்படி செய்யும் நேரத்தில் விஜயகலா மீண்டும் புலிகள் வேண்டும் என்கிறார்.தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசுவதை நாங்கள் கண்டிக்க மாட்டோம். பயங்கரவாதிகளை பலமடைய செய்யும் வகையில் பேசுவது தவறு எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.